இறந்ததாக கருதி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும் போது பெண் திடீரென எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பூசாரிப்படி பகுதியை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி மணி (68). இவர்களுக்கு அனீஷ்குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். கணவன் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணி அதே பகுதியில் தனியாக வசிக்கிறார்.
கடந்த 2 தினங்களாக மணியின் வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், பரவூர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமாரன் தலைமையில் பொலிசார் விரைந்து வந்தனர். வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்ததால் மாடியிலுள்ள கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, படுக்கை அறையை ஒட்டியுள்ள கழிப்பறையில் அமர்ந்தபடியே மணி சரிந்து கிடந்தார். அறை முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும், மணியின் மூக்கிலும் காயம் இருந்தது. இதையடுத்து, மணி இறந்து விட்டதாக பொலிசார் கருதினர்.அவர் இறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறினர். உடலில் காயம் இருந்ததால் பொலிசார் மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்தனர். இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் பிரேத பரிசோதனை நடத்த பொலிசார் தீர்மானித்தனர். மணியின் உடலுக்கு ஒரு பொலிஸ்காரர் காவலுக்கு நிறுத்தப்பட்டார். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக பொலிசார் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தனர்.
பொலிசாரும், உறவினர்களும் மணியின் சடலத்தை தூக்கிய போது திடீரென அவர் ”அய்யோ” என அலறினார். இதைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மணியை பரவூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
மயக்கமடைந்து கிடந்த பெண்ணை சரியாக பரிசோதிக்காமல் இறந்து விட்டதாக கூறி வழக்கும் பதிவு செய்த பொலிசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பரவூர் பகுதி மகளிர் அமைப்பினர் பரவூர் பொலிஸ் நிலையம் முன் போராட்டமும் நடத்தினர்.
|
No comments:
Post a Comment