Saturday, April 23, 2011

WiFi - Wireless Fidelity


 (WiFi - Wireless Fidelity). இந்த தொழில்நுட்பம் பரவலாகி விட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிநுட்பப் பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.


 எங்கெங்கும் WiFi மயம். ஏறத்தாழ உலகத்தில் மொத்தம் மூன்று லட்சத்திற்குமதிகமான வடமில்லா வலையமைப்பு மையங்கள் (WiFi Hot spots) இருப்பதாக புள்ளிவிவரங்கள் கோலம் போடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அவற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவை குறித்து இத்தொடரில் காண்போம்.

மைக்கெல் மார்கஸ்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள் போன்ற எந்த மசாலாவும் இன்றி 1985ஆம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பய்னபடுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த, (உ.தா. Microwave Ovens) சில அலைக்கற்றைகளை (900MHz, 2.4GHz, 5.8GHz spectrum :D) பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னனுமதியின்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்தவர் மைக்கேல் மார்கஸ். மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த இம்முடிவால் தொலைதொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிமாணங்களைத் தாண்டியிருக்கிறது.


சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான பல தொழில்நுட்பங்களில் வடமில்லா வலையமைப்பும் (WiFi) ஒன்று. ஆரம்பத்தில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, முறுக்கிக் கொண்டு, தங்கள் வழி தனி வழி என்று பிரத்யேக வலையமைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தினர் (network protocols). விளைவு ஒரு நிறுவனத்தின் உபகரணம் மற்றொரு நிறுவனத்தின் உபகரணத்தோடு தொடர்பு கொள்ள இயலாமல் போனது. இக்காரணத்தால் பொதுமக்களை இத்தொழில்நுட்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மாறாக ஒரு சலிப்புணர்வையே ஏற்படுத்தியது. தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர், அனைவருக்கும் பொதுவான ஒரு வலைத்தொடர்பு வழிமுறையை உருவாக்கி அதனைப் பின்பற்றும் வகையில் அவரவர் தங்கள் உபகரணங்களத் தயாரித்து சந்தைப் படுத்துவதென முடிவு செய்தனர்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronics Engineers) வசம் 1988ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் பலமுறை விவாதித்து, சண்டை சச்சரவுகளை அடக்கிக் கட்டப்பஞ்சாயத்துகள் பல செய்யப்பட்டு 1997ல் 802.11 என்ற வடமில்லா வலையமைப்புக்கென பிரத்யேகமான, பொதுவான தொடர்பு வழிமுறை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் தான் WiFiன் பிரம்மாண்டம் சாமன்யர்களின் வரவேற்பறை வரை ஆக்கிரமித்த அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன.


ஒரே அலைக்கற்றைகளை பல உபகரணங்கள் (WiFi, Microwave ovens) பயன்படுத்தும் போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணிக்கின்றன என்ற சந்தேகம் இதுவரை எழாத அன்பர்கள் முகத்தை கழுவிவிட்டு மீண்டும் துவக்கத்திலிருந்து படிக்கவும் :). இந்தச் சிக்கலைத் தவிர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன. ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பறிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை மாற்றித் தருவது (frequency-hopping spread spectrum), மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்து கட்டி தகவல்களை அனுப்பவது (direct sequence spread spectrum). ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களில் மின்காந்த அலைத்தொடர்புகள் மோதிக்கொள்ளும் போது(signal interference), அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உங்கள் செல்பேசியில் அழைப்பு வரும் போது அருகிலிருக்கு தொலைக்காட்சிப்பெட்டியோ அல்லது வானொலிப் பெட்டியோ சீற்றம் கொள்வது ஒரு உதாரணம்.

ஆரம்பத்தில் 2 Mbps வேகத்தில் தவழ ஆரம்பித்த வடமில்லா வலையமைப்பு இன்று 54 Mbps வேகத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வேகத்திற்குத் தகுந்த மாற்றங்களை தொடர்பு வழிமுறையான 802.11 பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் 802.11a,802.11b,802.11g மற்றும் 802.11n வழிமுறைகளின் பெயர்களும் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு வழிமுறையின் செயல்விவரங்கள் கீழே.

802.11a - 5GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11b - 2.4GHz அலைவரிசை - 11 Mbps வேகம்
802.11g - 2.4GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11n(draft) - 2.4GHz அலைவரிசை - 100 Mbps வேகம்

வேகத்திற்கேற்ப விலை. இவற்றுள் 802.11a 5GHzல் செயல்படும் திறன் கொண்டதால் விலை அதிகம் மற்றும் பயணிக்கும் தூரம் குறைவு. 2.4GHzல் செயல்படும் இதரவகைகள் அதே அலைக்கற்றையை பயன்படுத்தும் microwave oven, chordless telephone மற்றும் bluetooth உபகரணங்களால் தொல்லையைக் கொடுத்தாலும் அவற்றின் வேகத்திற்கு அடக்கமான விலையில் கிடைக்கும். 802.11b மற்றும் 802.11g பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 802.11n சந்தைக்குப் புதிது, இன்னும் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவில்லை.

மேற்சொன்ன விவரங்களை மனப்பாடம் செய்து கொண்டு , அடுத்த முறை கடைக்குச் சென்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் வாங்கும் போது அவற்றின் வழிமுறை வகைகளைப் (802.11a,b,g,n) பற்றிய கேள்விகளைஅள்ளி விட்டு கடைக்காரரை அரள விடப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் :). அவ்வாறு கேள்விகள் கேட்கும் போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களைப் பார்க்கும் பார்வையின் போதையே தனி, அனுபவித்துப் பார்க்கவும் :D.

அடுத்து என்னென்ன உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றின் பயன் ஆகியவை குறித்து. இப்பொழுது வெளிவரும் அனேக செல்பேசிகள்/மடிக்கணினிகளில் வடமில்லா வலையமைப்பு வசதியோடே வருகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் வாங்கும் போது இத்தொழில்நுட்பம் குறித்தான விவரங்களைப் பார்த்து வாங்குதல் சிறப்பு. தனி உபகரணங்கள் விவரங்கள் கீழே.




மேலே உள்ளவை வடமில்லா வலையமைப்புப் பொருத்திகள் (wireless adaptors). தடமில்லா வலையமைப்பு வசதியில்லாத மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோ வைத்திருப்பவர்கள் இவற்றை பொருத்தினால் அவ்வசதியைப் பெறலாம். அவற்றின் தோற்றமும், பொருத்தும் வழிமுறையும் பீதியளிப்பதாகக் கருதுபவர்களுக்கு USB பொருத்திகளும் கிடைக்கின்றன.



ADSL routers மற்றும் wireless routers இவையிரண்டும் வலையமைப்புக் கருவிகள். உங்கள் இணைய இணைப்பு மற்றும் வலையமைப்பு இரண்டையும் சமாளிக்க வல்ல ADSL routers மற்றும் வலையமைப்பு வசதிக்கான wireless routers ஆகியவையும் இரண்டும் கண்னெனத்தகும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி (wireless access point) என்பது வலையமைப்பு தடத்தினை (802.3), வடமில்லாதவையாக மாற்ற வல்லது (converts 802.3 to 802.11). உங்கள் கணினிக்கு வரும் வலையமைப்பு வடத்தினை இதில் பொருத்தினால் அந்த இடத்திலிருந்து வடமில்லா வலையமைப்புக்கான அலைகளைப் பரப்பும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி என்பது access point/router எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயல்படும் வழிமுறையும், உங்கள் கணினியில் இருக்கும் பொருத்தியின் (wireless adaptor) செயல்பாட்டு வழிமுறையும் ஒத்ததாக இருந்தால் அதிகபட்ச வலைத்தொடர்பு வேகத்தினைப் பெற்று மகிழலாம். உதாரணத்திற்கு 802.11g வழியில் செயல்படும் தொடர்புப் புள்ளியில், 802.11b வழியில் செயலபடும் பொருத்தியைக் கொண்ட கணினியினை இணைத்தால் 802.11bக்கு உரிய வேகத்தினையே அனுபவிக்கலாம். உபகரணங்கள் வாங்கும் போது இதனையும் கருத்தில் கொள்ளவும்.

இன்று அனேக அகலப்பட்டை இணைய இணைப்புகள் ADSL routers மூலமாக வழங்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் இருந்தால், எழுந்து சென்று பார்த்து விட்டு, பிறகு தொடர்ந்து படிக்கவும். பெரும்பாலான பயனாளர்கள் இவ்வசதி குறித்து போதிய விழிப்புணர்வின்றியே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இணைய இணைப்பு வழங்குநர்களும் இது குறித்த விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தெரிவிப்பதாகத் தோன்றவில்லை. வாடிக்கையாளர்களுக்குப் பாடம் நடத்துவது அவர்கள் வேலையில்லையென்றாலும், பயனாளர் என்ற முறையில் அறிந்து கொள்வது நம் கடமை. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. பாதுகாப்பற்ற வடமில்லா வலையமைப்பின் மூலம் வரும் ஆபத்துகள் பலவிதம். முக்கியத் தீவிரவாதி என்றோ, இவர் தான் வெடிகுண்டு முருகேசன் என்றோ, ஒரு நாள் அதிகாலை, சுபவேளை மாமாக்கள் ஓலையோடு வரக்கூட வாய்ப்பிருக்கிறது. 

தமிழக மீனவர்கள் கடைசியாக எப்பொழுது சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டார்கள் என்பதே நினைவில் இல்லாத போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து பலர் பலியானது நிச்சயம் மறந்திருக்கும். அச்சம்பவத்தின் சிறப்பு என்னெவென்றால் குண்டுவெடிப்பு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த மாதிரி, இந்த இடத்தில், இப்படி வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகளால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை மேலதிகாரிகள் பார்வைக்குக் கொண்டு செல்லும் முன்பே தொலைக்காட்சிகள் விளம்பரக் கொண்டாட்டங்களோடு அகமதாபாத்திலிருந்து நேரடி வர்ணனைகளைத் தொடங்கி விட்டிருந்தன.

கென்னத்

குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்க்கரே தலைமையில் மின்னஞ்சலின் பூர்வீகம் தேடத்துவங்கப்பட்டது. தேடலின் பாதை முடிந்த இடம் மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றொரு அமெரிக்கரின் வீடு. மின்னஞ்சலில் தொடக்கப்புள்ளியான இணைய இணைப்பு முகவர் எண்ணிற்குரியவர் அவர். பல நாட்கள் குடைந்தெடுத்ததில் கென்னத் ADSL router மூலம் வடமில்லா வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்ததையும், அதைக் காற்றோட்டமாக எந்தப் பாதுகாப்பும் இன்றி திறந்து வைத்திருந்ததையும் தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை என்று தெரியவந்தது. பின் எப்படி? மடிக்கணினியை மடியில் வைத்து, தங்கள் மடியைக் காருக்குள் வைத்து மும்பைத் தெருக்களில் இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் அன்பரைத் தேடியலைந்த குற்றவாளிகளுக்குச் சிக்கிய இரை தான் கென்னத். ரோட்டோரமாக சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள்.


இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வடமில்லா வலையமைப்பைப் பாவிப்பவரா, உங்கள் வலையமைப்பு சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு ஆப்பு வைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா?. இல்லையென்றால் உடனே சரிசெய்து விடுவது அவசியம். கென்னத் என்ற நபருக்கு நேர்ந்தது யாருக்கும் வரலாம், கென்னத்தின் பெயர் வேறு மாதிரி இருந்திருப்பின் விசாரணையின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.

உங்கள் வடமில்லா வலையமைப்பு பரிபூரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், வலையமைப்பினை பிற நபர்கள் யாராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். அப்படியே தவிர்க்கவியலாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் வடமில்லா வலையமைப்பில் ஒருவர் இணைந்து விட்டால், உங்கள் தொடர்புப்புள்ளியில் நடைபெறும் 'அனைத்து' தகவல் பறிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) கண்குளிரக் காணலாம். இதற்கென பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் கூகுளாடவும். பயிற்சிக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள், பக்கத்து வீட்டு தொடர்புப் புள்ளியை எட்டிப் பார்ப்பது குற்றம் என்பதை நினைவில் கொள்ளவும் :).

வடமில்லா வலையமைப்பின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும்?. முதலில் வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளியினை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்?. தொடர்புப்புள்ளியின் உள்-வலையமைப்பு எண்ணை (LAN-IP address), உலாவியில் உள்ளிட்டால், தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களைக் காணலாம். ஒரு வேளை உள்-வலையமைப்பு எண் தெரியாவிட்டால் start->run->cmd என்ற இடத்திற்குச் சென்று ipconfig என்று உள்ளிடவும். அதில் default gateway என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உள்-வலையமைப்பு எண் தான் உங்கள் வடமில்லா வலையமைப்பிற்கானத் தொடர்புப் புள்ளியினுடையது.

இந்த பக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கேற்ப மாறுபடும். எனவே தேடிக் கண்டுபிடிக்கவும். சிரமங்கள் இருப்பின் உங்கள் வடமில்லா வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் என்ன வகை (manufacturer and model details)ஆகிய விவரங்களுடன் கூகுளிடம் சரணடையவும். பின்வரும் விவரங்களை உங்கள் தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் உள்ளிட்டு விட்டால் அதிகபட்ச பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது ;).

password/கடவுச்சொல்:


முதலில் உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்பு புள்ளியினைத் தொடர்பு கொண்டு வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தயாரிப்பாளர்கள் பயனாளர் பெயராக 'admin/administrator' மற்றும் கடவுச்சொல்லாக 'admin/password' ஆகியவற்றை உள்ளிட்டே விற்பனை செய்வார்கள். அதை மாற்றாமல் அப்படியே பத்திரமாக வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டே முயற்சிகளில் உங்கள் வலையமைப்பு புள்ளிக்கு நுழைய முடியும். என்வே கடவுச்சொல்லை கடினமான ஒன்றாக மாற்றுவது சாலச்சிறந்தது. சிறிய எழுத்துக்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் எண்கள் (combination of lowercase, uppercase and numbers) இவற்றின் கலவையாக இருத்தல் சிறப்பு.


Wireless Encryption / சங்கேதக் குறியீட்டு முறைகள்:

தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் wireless அல்லது WiFi என்ற பகுதிக்குச் சென்றால் வலையமைப்பின் தொடர்பு முறைக்கு என்னென்ன சங்கேதக் குறியீட்டு முறைகளைப் பின்பற்றுவது (encryption methods) போன்ற விவரங்கள் இருக்கும். இம்முறைகளில் WEP (wireless encryption protocol) மற்றும் WPA/WPA2 (WiFi Protected Access) என்று இரண்டு உண்டு. WEP முறைக்கு WEAK encryption protocol என்ற பெயரும் உண்டு. WEP சற்றுப் பழைய கஞ்சி தான் என்றாலும், வலையமைப்பு விஷயங்கள் தெரிந்தவருக்கு WEP முறையை உடைப்பதற்கு 60 நொடிகள் போதும் :D. இன்றைய தேதிக்கு WPA முறையே சிறந்தது. WPA பயன்படுத்துவதற்கு உங்கள் இயங்குதளத்தில் (operating system) அதற்கான கோப்புகள் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் இங்கே சென்று தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.


முதலில் WEP எப்படி செயல்படுகிறது?. பறிமாறிக் கொள்ளும் தகவல்களைச் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுவதற்கான குறிச்சொல்லை (encryption key) வழங்கிவிட்டால், அதற்கேற்ப தகவல்கள் மாற்றப்பட்டு அனுப்பப்படும். அந்த குறிச்சொல்லை வடமில்லா வலையமைப்பிற்கான தொடர்புப் புள்ளி மற்றும் பயன்படுத்தும் கணினி என இரண்டு பக்கமும் உள்ளிட்டால் மட்டுமே தொடர்பு சாத்தியப்படும் என்பது நினைவில் கொள்ளவும். ஒரு குறிச்சொல்லை வைத்துக் கொண்டு காலம் முழுக்க தகவல் பறிமாறிக்கொள்வது ஆபத்தானது. மொழி தெரியாத ஊரில் என்ன பேசுகிறார்கள் என்பது ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் சில காலம் கழித்து நாம் அந்த மொழியைக் கற்றுக் கொள்வதைப் போல, உங்கள் வலையமைப்பினை தொடர்ந்து நோட்டம் விட்டால் அக்குறிச்சொல்லைக் கண்டுபிடிப்பது எளிது. இதுவே WEP பெரிதும் நம்பப்படாமல் போனதற்கான காரணம்.

WEP/WPA ஆகியவற்றுக்கு உங்கள் கணினியைத் தயார்ப்படுத்துவதற்கு control panel-> network connections -> wireless network -> properties என்ற இடத்திற்குச் சென்று WEP/WPA தேவையானதைத் தேர்வு செய்து குறிச்சொற்களை இடவும் (பார்க்க படம்) . இக்குறிச்சொற்களும், தொடர்புப்புள்ளியின் குறிச்சொற்களும் ஒன்றாக இருப்பது அவசியம்.

அடுத்து WPA/WPA2. இதில் முதன்முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே நாம் வழங்கும் குறிச்சொல் (pre shared key) பயன்படுத்தப்படும். அதன் பின் குறிப்பிட்டக் கால இடைவெளியில் குறிச்சொல் தானாகவே மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் இத்தொடர்பு முறையை உடைப்பது மிகமிக கடினம். இதனை செயல்படுத்துவதற்கு உங்கள் தொடர்புப் புள்ளியில் இதற்கான மென்பொருள் பக்கத்துக்குச் சென்று WPA என்பதனைத் தேர்வு செய்து, PSK என்ற இடத்தில் குறிச்சொல்லை வழங்கி பின்னர் group key interval/Rekey interval என்ற இடத்தில் எத்தனை நொடிகளுக்கு ஒருமுறை உங்கள் குறிச்சொல் மாற்றப்பட வேண்டும் என்பதனையும் உள்ளிட்டு சேமித்து விட்டால் உங்கள் பாதுகாப்பான வடமில்லா வலையமைப்புத் தயார்.

SSID (Service Set Identifier)/சேவைப்பெயர் :

SSID என்பது உங்கள் தொடர்புப் புள்ளியின் சேவைக்கான பெயர். அந்த பெயரிலே தான் உங்கள் தொடர்பு புள்ளி காற்றிலே பரப்பப்படும். வடமில்லா வலையமைப்பு உபகரணங்களின் சேவைப்பெயர்களாக பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் பெயரையே சேமித்து வைத்திருப்பார்கள் (ஒரு வெளம்பரம்ம்ம்). அதனை முதல் வேலையாக மாற்றிவிடுவது இனிது. அதனினும் இனிது உங்கள் SSID broadcasting என்ற தேர்வைச் செயலிழக்க செய்து விடுவது. உங்களின் சேவைப்பெயர் உங்களுக்கு மட்டுமே தெரிந்தால் போதுமானது.

MAC address filtering:

MAC (media access control) address என்பது அனைத்து வலையமைப்பு உபகரணங்களிலும் அதனைப் பெற்றெடுத்தத் தயாரிப்பாளர்கள் வைக்கும் பெயர். உங்களின் கணினி, வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளி ஆகிய அனைத்துக்கும் இந்தப் பெயர் இருக்கும். தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் Wireless Management/ MAC Filter ஆகியவற்றிற்கானப் பக்கத்துக்குச் சென்று எந்தெந்த பெயர்களை(MAC address) மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளிட்டால், அவற்றைத் தவிர வேறு யாரும் உங்கள் வலையமைப்பில் நுழைய முடியாது. இந்த முறை பாதுகாப்புக்கானப் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கணினியின் MAC address தெரிந்து கொள்ள, start->cmd -> run என்ற இடத்திற்குச் சென்று ipconfig/all என்று உள்ளிட்டால், வரும் பல தகவல்களில் physical address என்ற ஒன்றும் இருக்கும். அதுவே உங்கள் கணினியின் MAC address.

இடத்தேர்வு:

உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, குஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பது நல்லது. ஜன்னலரோமோ வாசல் பக்கமோ வைப்பது வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பானது. கட்டிடங்களுக்குள் வடமில்லா வலையமைப்பின் பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் என்பதால், அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

பாதுகாப்பு வழிமுறைகள் கொஞ்சம் கிர்ர்ரடிக்க வைத்தாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு வடமில்லா வலையமைப்பு மிகவும் விரும்பப்படும் காரணம், அதன் வசதி மற்றும் வலையமைப்பினைச் செயல்படுத்துதலின் எளிமைத் தன்மை. மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த அலைக்கற்றை குறித்தான முடிவுகள், ஆரம்பத்தில் சோர்ந்து விடாமல் கூடி வாழ முற்பட்ட உபகரணத் தயாரிப்பாளர்கள், spread spectrum முறையை உலகுக்களித்தத் தானைத் தலைவி ஹெடி லமர் என எல்லாரும் சேர்ந்த அளித்த ஊட்டச்சத்தின் விளைவே இன்று வடமில்லா வலையமைப்பு பிரம்மாண்டமாய் பரவலாகியிருக்கிறது. சில நகரங்களே கூட ஒட்டுமொத்தமாக வடமில்லா வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து, நகராட்சியால் இணையச் சேவை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (WiFi City, Municipal WiFi). இந்தியாவில் புனே நகரத்தில் கூட நகரம் முழுமைக்குமான வடமில்லா வலையமைப்பு வழங்குவதற்கானத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. புனே வாசிகள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.



30 முதல் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரை பயணிக்கும் வடமில்லா வலையமைப்பு 50 கிலோமீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? வேகத்தில் 54 Mbps இல் இருந்து 1024 Mbps ஆக அசுரவேகமெடுத்தால் எப்படி இருக்கும் போன்ற யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வடமில்லா வலையமைப்பினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பங்கள் தான் WiMedia (802.15.3) மற்றும் WiMax (802.16). இன்னும் பரவலாகாத இத்தொழில்நுட்பங்கள் விரைவில் நம் வீதிகளில் வலம் வரும் நாள் தூரமில்லை. அது போன்ற ஒரு நாளில் WiMedia மற்றும் WiMax பற்றிய பகிர்வுகளுடன் சந்திக்க சுடுதண்ணி காத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இத்தொடர் நிறைவடைகிறது.


பி.கு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான் செயல்விளக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்புக்கேற்ப மாறுபடும் என்பதால் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவற்றைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் உபகரணத்தின் விவரங்களோடு தெரிவித்தால் உதவி செய்ய தயாராக உள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment