Saturday, April 23, 2011

டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்


நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்?
வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட்  ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். அமெரிக்காவில் ரெஸ்டாரண்டுகளின் சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரில் துவக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல் முழுக்க முழுக்க  இணைய யுகத்திற்கு ஏற்ற  யுத்திகளை கையாண்டு இருப்பதோடு  பழைய வழிகளையெல்லாம் கைகழுவி இருக்கிறது.
இந்த ரெஸ்டாடரண்டை பொறுத்தவரை  வாடிக்கையாளர்கள் தான் ராஜா. அவர்கள்தான் அதற்கு விளம்பர தூதர்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் வாடிக்கையாளர்கள்தான் அதன்  சமையல் கலைஞர்களும் கூட!

வழக்கமாக புதிய ரெஸ்டாரண்டை துவக்கும்போது பளிச் விளம்பரங்கள், அதிரடி தள்ளுபடி போன்ற யுத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதற்கு மாறாக இந்த ரெஸ்டாரண்ட் முழுக்கு முழுக்க சமூக வலைப் பின்னல் சேவைகளான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை நம்பி துவங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப  இந்த ரெஸ்டாரண்டின் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகமும், சமூக மயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற துரித  உணவு வகையான பர்கர் உணவை வழங்கும் நோக்கத்தோடு துவக்கப் பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நுழைந்ததுமே வாடிக்கையாளர்கள் ஹைடெக் வரவேற்புக்கு ஆளாகின்றனர். மெனு புத்தகம் போன்றவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் யுகத்தின் அடையாளச் சின்னமான ஐபேடு சாதனத்தின் மூலமாக பணியாளர்கள்  வாடிக்கையாளர்களிடம் ஆர்டரை எடுத்துக்கொள்கின்றனர். இதைத் தவிர வாடிக்கையாளர்களே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் மேஜைகளிலும் ஐபேடு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜைகளின் வைபீ இணைய வசதியும்  இருக்கிறது. ஐபேடில் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தால் போதும் தானாக உணவு வந்து சேரும். இந்த டிஜிட்டல் வசதிகளை சாதரணமானது என்றே சொல்ல வேண்டும். எப்படியும் வருங்கால ஓட்டல்களில் ஐபேடு போன்ற கையடக்க கம்ப்யூட்டர் பலகைகள் புழக்கத்திற்கு வரப்போகின்றன.
4 புட் ரெஸ்டாரண்டில் விசேஷம் என்னவென்றால் அங்குள்ள டிவிட்டர் பலகைதான். ஐபேடில் உணவு  வகையை ஆர்டர் செய்தபடியே டிவிட்டர் பலகையில் ஓடிக்கொண்டிருக்கும் குறும்பதிவுகளை படித்துப் பார்க்கலாம். அந்த குறும்பதிவுகள் சக வாடிக்கையாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. எல்லாமே அந்த ரெஸ்டாரண்டின் பிரத்யேக உணவு வகை தொடர்பான கருத்துக்கள் ஆகும்.
இந்த குறும்பதிவுகளால் என்ன பயன் என்றால் அந்த ரெஸ்டாரண்டில் எந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதை இந்த பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இப்போது வழக்கமாக ஓட்டலுக்கு செல்லும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். உள்ளே நுழைந் ததுமே  சர்வரிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்போம் அல்லவா! சர்வரும் வரிசையாக உணவு வகைகளை மூச்சுவிடாமல் ஒப்பிப்பார்.
ஆனால் சாப்பிட எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதை அவரிடம் கேட்க முடியுமா? கேட்டால் சரியான பதில் கிடைக்குமா?
இப்போது மீண்டும் 4 புட் ரெஸ்டாரண்டுக்கு வாருங்கள். அங்கு இந்த பிரச்சனையே கிடையாது.  அந்த ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டவர்கள் அது நன்றாக இருந்ததா? ஆம் எனில் எந்த விதத்தில் நன்றாக இருந்தது எனும் தங்களது சுவை அனுபவத்தை டிவிட்டர் பதிவுகளாக பகிர்ந்துகொள்கின்றனர்.  அந்த பதிவுகள் ரெஸ்டாரண்டின் டிவிட்டர் பலகையில் வெளியாகிக்கொண்டே இருக்கும். அதனை பார்த்து எந்த உணவை சாப்பிடலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
4புட் ரெஸ்டாரண்டு வாடிக்கையாளர்கள்  உணவு வகைகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி செய்வதோடு நின்றுவிடவில்லை. உணவு வகைகளை தயார் செய்து கொள்ளும் உரிமையையும் அவர்களுக்கே வழங்குகிறது. அதாவது குறிப்பிட்ட வகையான பர்கரை மட்டுமே வாடிக்கையாளரின் தலையில் கட்டாமல்  பர்கருக்கான  விதவிதமான பொருட்களை பட்டியலுக்கு அவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரத்யேக பர்கரை  தயார் செய்துகொள்ள வழி செய்துள்ளது.
நம்பினால் நம்புங்கள் இவ்வாறு 9 கோடிக்கு மேற்பட்ட வகையான பர்கர்களை வாடிக்கையாளர்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல இந்த பர்கர்களுக்கு அவர்கள் தாங்கள் விரும்பும் பெயரிட்டு அதனை தங்களது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் பரிந்துரையை ஏற்று நண்பர்கள் குறிப்பிட்ட அந்த பர்கரை ஆர்டர் செய்தால் அதற்கேற்ற தள்ளுபடி அந்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். மாமூலான விளம்பர வழியை நாடாமல் இப்படி வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பர்கரை உருவாக்கி அதனை தங்கள் சமூக வலைப்பின்னல் தளத்தின் மூலம் பிரபலமாக்குவதையே தனக்கான விளம்பரமாக இந்த ரெஸ்டாரண்டு கொண்டுள்ளது. 4 புட் புதுமை ஓட்டல் என்பதில் சந்தேகமில்லை.
முகவரி:www.4food.com

No comments:

Post a Comment