ஒவ்வொரு இணைய தள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி ( IP Address ) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த ஐபி முகவரியை வெப் பிரவுஸரில் காண்பிப்பதில்லை.
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது,
ஒரு டொமேன் பெயரை ஐபி முகவரியாக மாற்றும் செயற்பாடனது இணையத்தில் இணையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் கணினியிலேயே நடை பெறுகிறது. ஐபி முகவரியைக் கண்டறிவதற்கான வழி முறைகள் ஏராளம் உள்ளன. அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு இணைய தள முகவரியின் பகுதிகள் எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்.
இணைய தளமொன்றின் ஒரு பக்கத்தைக் குறிக்கும் முகவரியை Uniform Resource Locater (URL) எனப்படுகிறது. ஒரு URL ஆனது http://www.pgsedu.com/center.htmlஎனும் வடிவில் இருக்கும். இங்கு http என்பது என்ன ப்ரொட்டோகோல் (Protocol) என்பதையும் pgsedu.com என்பது டொமேன் பெயரையும் (Domain Name) center.html என்பது அந்த இணைய பக்கத்தின் அமைவிடத்தையும் (location) குறிக்கிறது.
ப்ரொட்டோக்கோல் என்பது இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு விதி முறையாகும். http (Hypertext Transfer Protocol) என்பது சேர்வர் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கான விதி முறைகளைக் கொண்டுள்ளது.
ஒரு இணைய தள முகவரியில் டொமேன் பெயரைக் கொண்ட பகுதியே ஐபி முகவரியைக் கொண்டுள்ளது. இங்கு ping எனும் கட்டளையைப் பயன் படுத்தி ஐபி முகவரியை அறிந்து கொள்வதற்கான வழி முறையை விளக்கலாம் என நினைக்கிறேன். Ping எனும் கட்டளை வேறு பல தேவைகளுக்காகப் பயன் பட்டாலும் ஐபி முகவரியையும் அதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் அறிந்து கொள்ளலாம். அதற்கு இணையத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் ஸ்டார்ட் பட்டனில் Run தெரிவு செய்யுங்கள். ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுளையுங்கள். அங்கு C:\>ping pgsedu.com என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது அந்த இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை அறிந்து கொள்ளலாம்.
இங்கு Pinging pgsedu.com [172.43.133.152] with 32 bytes of data:எனும் முதல் வரியிலேயே pgsedu.com எனும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியைக் [172.43.133.152] கொண்டுள்ளது..
ஒரு டொமேன் பெயருக்குரிய மேலதிக தகவல்களை அறிய வேண்டுமானால் அதற்கான கருவிகளும் இணையத்தில் ஏராளம் உள்ளன. அவற்றில் samspade.orgஎனும் இணைய தளம் இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது
|
No comments:
Post a Comment