சோழ மன்னர் கோப்பெருஞ்ச்சோழனும், புலவர் பிசிராந்தையரும் ஒருவரையொருவர் பார்த்ததும் இல்லை; பழகியதுமில்லை ஆனால் அவ்விருவரும் ஒருங்கிணைந்த உள்ளத்தினர். அப்போது இணையம் இல்லை; ஈமெயில் இல்லை. ஆனால், மன்னருடன் வடக்கிருந்து உயிர் நீத்தார். அது நட்பு. அதே நிலையில் இன்று பல மனங்களை கனப்பொழுதில் இணைப்பதே வலைப்பூ.
"மன்னாதி மன்னர்! மார்த்தாண்ட மகாராஜா!! பராக்... பராக்" இது பழங்கால மன்னர்களின் நடமாட்டத்தை நாடறிய செய்யப்பட்ட ஏற்பாடு.பின்னர்,மன்னர்கள் விரும்பி தெரிவிக்கும் செய்தி தெரு தெருவாக முரசறைந்து தெரிவிக்கப்படும். நல்ல விஷயங்கள் கல்வெட்டில் செதுக்கப்படும்; ஏனையவை அந்தப்புரத்தில் பதுக்கப்படும்! இவ்வாறு மக்கள் காதில் பூச்சுற்றிய காலத்தில் இருந்த தொடர்பு சாதனங்கள் சீனாவில் வேர்விட்டு ஜெர்மனியில் மரமாகி நவீன காலத்தில் வலைப்பூக்களாக பூத்து குலுங்குகின்றன.
இந்த பரிமாண வளர்ச்சி புதிய காலக்கட்டத்தை தோற்றுவித்துள்ளன! தமிழ்வலைப்பூக்களின் வளர்ச்சி தமிழகத்தில் மட்டுமல்ல,மலேசியா,சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளன.இந்த வளர்ச்சியில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது?
வாடாமல்லி போன்ற பூக்கள் செடியிலிருந்து பறித்து எடுத்தப் பின்னும் சில நாட்கள் வாடாமலும்,வதங்காமலும் இருக்கும்.ஆனால் மல்லிகை போன்ற பூக்கள் காலையில் அரும்பாகவும், மாலையில் பூவாக மலர்ந்து நறுமணம் பரப்பி மறு நாள் வாடி வதங்கி விடும். அது சரி, அனிச்சப்பூவோ! அவ்வாறில்லை. செடியிலிருந்து பறித்த முகர்ந்தவுடனே... வாடி வதங்கி விடும்.
வலைப்பூக்களை (சு)வாசிக்கும் வலைப்பிரியர்களின் மனத்துடன் ஒப்பீடும் போது, அனிச்சப்பூ போன்று மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அத்தகைய மென்மை உள்ளமுடைய வாசகர்கள் விரும்புவதை வலைப்பூக்கள் தருகின்றனவா? வலைப்பூக்கள் தருவதை வலைப்பிரியர்கள் விரும்புகின்றனரா? அல்லது உள்ளுக்குள் உறைந்து கிடக்கிற, உறங்கிக் கொண்டிருக்கிற பாலுணர்வு மற்றும் வன்முறை சார்ந்த குணங்களைத் தூண்டி விடுகிறதா? இக்கேள்விகளின் பின்னணியில்தான் வலைப்பூக்களில் வெளி வரும் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஷாஹஜி காலத்தில் ஒரு புலவரால் எழுதப்பட்ட நூலை இடதுமிருந்து வலமாப் படித்தால் அது ராமாயணம். வலமிருந்து படித்தால் அது பாகவதம். அப்படி அர்த்தம் வருகிற மாதிரி சுலோகங்கள அமைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு புதுமையாக எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. உலகின் எந்த மூலையில் உள்ளவரும், வலைப்பூவின் முகவரியில் உள்ளே நுழைந்து "நைட் மப்பு தீர வில்லை; இன்னிக்கு காலையில மஞ்சளாக போனது' என்பதும் வலையில் வடைகளை மாற்றி போடுவதுதான் வலைப்பூக்களின் வளர்ச்சியா?
|
No comments:
Post a Comment