நடந்து முடிந்த பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வெற்றிகரமாக கூச்சல், குழப்பத்துடன் நடந்து முடிந்தது குறித்து சிலருக்கு அதிருப்தி. பலருக்கு திருப்தி.. இந்தச் சிலரும், பலரும் நிச்சயம் அரசியல்வியாதிகள்தான்.
ஆனால் பொதுமக்களாகிய நமக்குத்தான் பெரும் எரிச்சலைக் கூட்டியிருக்கிறது..! இது தொடர்பாக நானே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமில்லாததால் போட முடியவில்லை.
ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தினமலர் பத்திரிகையில் இது பற்றிய செய்திக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட எனது கருத்துக்களை முழுமையாக உள்ளடக்கியதாக இருந்ததினால் அதனை இங்கே முன் மொழிந்து பதிவிடுகிறேன் :
நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகளால் மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பணத்தை வீணடிப்பது வழக்கமானதுதானே' என, காமெடியாக நினைத்து இந்த விவகாரத்தை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.
ஏனென்றால், இந்த முறை, சற்று அதிகமாகவே 200 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும், ஆளும் கட்சியின் விதண்டாவாதமும் சேர்ந்து, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரை முற்றிலுமாக முடக்கியதால்தான், இந்த அளவுக்கு மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
மணியோசை வரும் முன்னே.. யானை வரும் பின்னே, என பழமொழி உண்டு. அதற்கேற்ப, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடு விஸ்வரூபம் எடுக்க துவங்கி விட்டது.
இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஊழல் என, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை போட்டு தாக்குவதற்கு தேவையான விஷயங்கள் ஏராளமாக இருந்தன. இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நன்றாகவே பயன்படுத்தி கொண்டன.
வழக்கமாக பாராளுமன்றத்தில் போராட்டம் என்றால், தே.ஜ., கூட்டணி கட்சியினர் ஒருபுறமும், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒருபுறமும் தனித்தனியாக செயல்படுவர்.
ஆனால், ஸ்பெக்ட்ரம் விவரகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற மெகா தொகை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தது. பாராளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமல்லாமல், பார்லிமென்டுக்கு வெளியிலும் இவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாளில் இருந்து, கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த 13-ம் தேதிவரை, ஒரு நாள்கூட முழுமையாக சபை அலுவல்கள் நடக்கவில்லை.
வழக்கம்போல் காலையில் சபை துவங்கும். உடனடியாக "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்புவர். இதற்கு பதிலடியாக, ஆளும் கட்சியினரும், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் ஊழல் குறித்து கோஷம் எழுப்புவர். ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவும். இதையடுத்து, சில மணி நேரங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்படும். மீண்டும் சபை கூடியதும், இதேபோன்ற சம்பவங்கள் தொடரும். இறுதியாக, சபை நடவடிக்கைகளை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து விட்டு, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரியும் வருத்தத்துடன் எழுந்து செல்வர். இந்த நடவடிக்கைகள்தான், கடந்த ஒரு மாதமாக நடந்தன.
பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு இடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணைகள், ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்காதது ஏன்? சி.பி.ஐ., வழக்கு விசாரணையில் இன்னும் தீவிரம் காட்டாதது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தியது ஏன்?” என, சுப்ரீம் கோர்ட் வரிசையாக கேள்விகளை எழுப்பியதால், மத்திய அரசு அதிர்ந்து போனது. எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை இறுக பிடித்துக் கொண்டு, அரசை ஒரு வழியாக்கி விட்டனர்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் அமளியால், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கியதில், ரொம்பவே பாதிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் சபாநாயகர் மீரா குமார். அடுத்தவர், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி. சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி, சபை அலுவல்களை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி இறுதிவரை பலிக்கவில்லை.
இது தொடர்பாக, இருவருமே விரிவாக கலந்துரையாடினர். இது போன்ற பிரச்னைகள் எழும்போது, வெளிநாடுகளில் பார்லிமென்ட் எப்படி சுமுகமாக இயங்குகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
குளிர்கால கூட்டத் தொடர் முடியும்வரை, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி இரு தரப்புமே இறங்கி வரவில்லை. தங்கள் நிலையில் கடைசிவரை உறுதியாக இருந்தனர்.
"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடும் வரை சபையை நடத்த விட மாட்டோம்' என்பது, எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக இருந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்பது ஆளும் கட்சியின் விதண்டாவாதம்.
நடந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் நடந்தது என்ன?
* தனி நபர் மசோதா எதுவுமே தாக்கல் செய்யப்படவில்லை
* தனி நபர் மசோதா தொடர்பான விவாதம் எதுவும் நடக்கவில்லை.
* எந்த தனி நபர் மசோதாவும் வாபஸ் பெறப்படவில்லை.
* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் விவாதிக்கப்படவில்லை.
* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் ஏற்கபடவில்லை.
* தீர்மானம் வாபஸ் பெறப்படவும் இல்லை.
இதுவும் ஒரு சாதனை(?)தான் :
* தெகல்கா விவகாரத்தின்போது, பாராளுமன்றம் தொடர்ந்து 17 நாட்கள் செயல்படாமல் இருந்தது.
* கடந்த 1996-ல், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமின் வீடுகளில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதால், 13 நாட்கள் சபை நடக்கவில்லை.
* கடந்த 1987-ல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் நடந்த அமளியால், 45 நாட்கள் சபை அலுவல்கள் முடக்கப்பட்டன.
பாராளுமன்றம் நடக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும், மக்களின் வரிப் பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் 22 நாட்கள் சபை அலுவல்கள் நடக்கவில்லை. இதைக் கணக்கிட்டு பார்த்தால், ஒட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “பாராளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு ஆளும் கட்சிதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மெகா ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், இதை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்ததன் மூலம், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு மத்திய அரசு காரணமாகிவிட்டது” என்கிறார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை, பாராளுமன்றப் பொதுக் கணக்கு குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றன. இதன் மூலம் விதிமுறைகளை எதிர்க்கட்சியினர் மீறுகின்றனர். சபை முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்' என்கிறார்.
இப்படி இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் செயல்படுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சாதாரண மக்களுக்குதான் பாதிப்பு. ஏனென்றால், மக்களின் வரிப் பணம்தானே வீணடிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தை சுமுகமாக இயங்க செய்ய வேண்டிய பொறுப்பு, இரு தரப்புக்குமே உண்டு. மக்களுக்கு சேவை செய்வதற்காக, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகள். இதை அவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ...?
|
No comments:
Post a Comment