வெளியே பரபரப்பு காட்டாமல், ஜெயா டி.வி. நிர்வாக அலுவலகத்தில் இருந்து மூன்று அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. காவல்துறை அடையாளம் ஏதுமற்ற இரு வாகனங்களில் இந்த அட்டைப் பெட்டிகள் சென்றிருக்கின்றன.
இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட யாருமே -வாகனங்களின் டிரைவர்கள் உட்பட- யூனிபார்மில் இருக்கவில்லை.
கடந்த இரு தினங்களாக இந்த டாக்குமென்ட்கள் ஜெயா டி.வி. அலுவலகத்தில் இருந்து வெளியேறி விடாதவாறு மேலதிக செக்யூரிட்டி போடப்பட்டிருந்தது. நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள் யாருக்கும் கடந்த இரு தினங்களாக இந்த ஆவணங்கள் இருந்த அறைக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.
போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின் சற்றுத் தாமதமாக, சிறிது சிறிதாகத்தான், அவர் தொடர்பான இடங்களில் பல உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தன. ஆனால் எவ்வித தாமதமும் இல்லாமல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட இடம், ஜெயா டி.வி. அலுவலகம்தான்.
எமக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின்படி, சசிகலா வெளியேற்றப்பட்டதற்கு சில தினங்கள் முன்பிருந்தே ஜெயா டி.வி.-யில் கண்காணிப்பு தொடங்கிவிட்டது. மீடியாவுடன் தொடர்புடைய இடம் என்பதால், அங்கிருந்து வில்லங்கமான செய்திகள் ஏதாவது ஒளிபரப்பாகலாம் என்ற முன்ஜாக்கிரதையே அதற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அன்டு கோ வெளியேற்றப்பட்ட செய்தி ஜெயா டி.வி.-யில் பிளாஷ் செய்யப்பட்ட விஷயம்கூட, டி.வி.-யின் நிர்வாக இயக்குனர் அனுராதாவுக்கு (தினகரனின் மனைவி) தெரியாமலேயே நடந்தது.
அனுராதாவின் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கொஞ்சம் அப்படியிப்படியாக இருந்ததால், அவருக்கு ஆல்-இன்.-ஆலாக ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவரும் ஏதோ ஒரு வகையில் சசிகலா உறவினர்தான். (இவரை கமிஷன் மன்னர் என்று கேலியாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்)
இந்த ஆளுக்கும், சசிகலா வெளியேற்றப்பட்ட செய்தி தமது டி.வி.-யில் ஒளிபரப்பாகப் போகும் விஷயம் முன்கூட்டியே தெரியாது.
ஜெயா டி.வி.-யின் இரண்டாம் நிலை அதிகாரிகளில் ஒருவர் கார்டனுக்கு அழைக்கப்பட்டு, சசிகலா வெளியேற்றம் தொடர்பான செய்தியை நேரடியாக முதல்வர் ஜெயலலிதாவே கொடுத்திருந்தார். செய்தி ஒளிபரப்பாகும்வரை யாருக்கும் தெரியக்கூடாது என்ற உத்தரவும் போடப்பட்டிருந்தது.
செய்தி ஒளிபரப்பாகும் முன்னரே பில்டிங்குக்குள் அறிமுகமற்ற சிலரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள் உளவுத்துறையின் ஆட்களா, அல்லது தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களா என்பது தொடர்பாக சரியான விபரம் கிடைக்கவில்லை. ஆட்கள் யாராக இருந்தாலும், அந்த பில்டிங்கே ஒரு முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.
பில்டிங்கில் இருந்து வெளியேறியவர்களில் சிலரது பிரீஃப் கேஸ்கள் காரணம் சொல்லப்படாமல் திறந்து பார்க்கப்பட்டன. சில பெண்களின் ஹேண்ட்-பேக்குகள்கூட சோதனைக்கு தப்பவில்லை. செக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களிடம், அது தொடர்பாக வெளியே யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
அதன்பின், சசிகலா வெளியேற்றம் என்ற செய்தி பிளாஷ் ஆகியது. அடுத்த நிமிடமே பில்டிங்குக்குள் வெவ்வேறு இடங்களில் நடமாடிய நபர்கள், நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கொண்டார்கள். ஆனால், வேறு ஒரு ரிக்கார்டு ரூமில் நடைபெற்ற ஒரு விஷயம் இவர்களுக்கு உடனே தெரியவரவிலலை. இங்கே, டி.வி.-யின் முக்கிய அதிகாரி ஒருவர் அவசர கதியில் சில காகிதங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
நிர்வாக அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த நபர்கள் சுமார் அரை மணி நேரத்தின் பின்னர், ரூட்டீன் செக்கிங்குக்காக அந்த ரூமுக்குள் சென்றபோது அந்த அதிகாரி அங்கேயே இருந்திருக்கிறார். அவரது கையில் வேறு சில டாக்குமென்ட்கள் இருந்திருக்கின்றன.
இவரது நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சியை ரீவைன்டு செய்து பார்த்திருக்கிறார்கள். அதில் அந்த நபர் காகிதங்களை அழித்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அங்கு புதிதாக வந்தவர்களில் ஒருவர் வராந்தாவில் நின்றபடி யாருடனோ செல்போனில் சில நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்பினார்.
வந்தவர்களில் இருவர், டி.வி. அதிகாரியை நெட்டித் தள்ளாத குறையாக வெளியே கொண்டு சென்றனர். இவர்கள் பில்டிங்குக்கு வெளியே வந்தபோது, மார்க்கிங் ஏதும் இல்லாத கார் ஒன்று காத்திருந்தது. இருவரும் அந்த காரில் அதிகாரியை ஏற்றிக்கொண்டு எங்கோ சென்றனர். அந்த அதிகாரி அதன்பிறகு டி.வி. அலுவலகத்துக்கு திரும்பவில்லை. குறிப்பிட்ட அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் தகவல் ஏதுமில்லை.
குறிப்பிட்ட அதிகாரி அவரது வீட்டில்தான் உள்ளார் எனவும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபின் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்றும், டி.வி. ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அவரால் அழிக்கப்பட்ட டாக்குமென்ட்டுகளுக்கு வேறு பிரதிகள் உள்ளனவா என்பதும், என்ன விஷயம் தொடர்பான டாக்குமென்டுகள் அவை என்ற விபரமும் தெரியவில்லை. டி.வி. அலுவலகத்தில் பணிபுரிந்த வேறு சிலரும் விசாரிக்கப்பட்டனர். அன்று அலுவலகத்தில் இல்லாத சிலரும், அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அலுவலக பேக்ஸ் மெஷினில் இருந்து பேக்ஸ் அனுப்பப்பட்ட அவுட்-கோயிங் சம்மரி பட்டியல் ஒன்றும் எடுக்கப்பட்டு செக் செய்யப்பட்டது.
இவ்வளவும் நடந்த பின்னரும், அங்கிருந்த பைல்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல், எதற்காக நேற்று மாலை வரை காத்திருந்தார்கள் என்பதுதான் குழப்பமாக உள்ளது. அவற்றைக் கொண்டு வருமாறு கார்டனில் இருந்து உத்தரவு வரவில்லையோ, என்னவோ!
|
No comments:
Post a Comment