இவரின் எழுத்துக்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பது நினைவில்லை. அந்த மனிதரின் வீட்டு குழாயில் 24 மணி நேரம் இடை விடாத தண்ணீர் சப்ளையும், என்றுமே மின்சாரம் தடை படாத வாழ்கையும் ,நொடிக்கொரு முறை SMS அனுப்ப விரும்பாத குழந்தைகளும் கிட்டட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
எல்லோருடய சிறுவயதிலும் புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது சிறுவர் மலர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், கோகுலம் , அம்புலிமாமா, வாண்டு மாமா வகையறாக்கள் என்பதை மறுக்க முடியாது. அதன் உலகமே வேறு. அதற்கு பிறகு ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் தோன்றும் எண்ணங்களும் வாசிப்பு பற்றிய ரசனைகளும் தலைக்கு தலை மாறுபடும். தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் ஒரு சின்ன தடுமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அந்த மாதிரி காலகட்டங்களில் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
சுஜாதா சார் அவர்களை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல எனினும், அவரை பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானதாக எனக்கு படுகிறது.
ஓவ்வொரு எழுத்தாளர்களுக்கும் இவர் நகைச்சுவை, இவர் க்ரைம், இவர் பேய் கதை, இவர் குடும்ப கதை என ஒரு தனி அடையாளம் இருக்கும். ஆனால் சுஜாதா சார் எல்லா துறைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாய் வெளுத்து வாங்கினார். கம்ப்யூட்டர் முதல் கர்நாடிக் வரை எல்லா மைதானங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்த அவர் எல்லோரயும் எளிதாக வசீகரிக்க காரணமே அவரின் இயல்பான நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்தான். படிக்கும் போதே ஒரு தோழமை உணர்வு நம்முள் ஸ்டுல் போட்டு அமர்ந்து விடும்.
வாசிக்கும் ஆர்வத்தை மட்டுமல்லாது எழுதும் ஆர்வத்தையும் அவர் தூண்டிய விதம் அலாதியானது. கார்டூனிஸ்ட் மதன் ஒரு எழுத்தாளர் மதன் ஆகியது சுஜாதா சார் அவர்களின் மூலம்தான் என்பதை அவரே பெருமையாக சொல்லிக்கொள்ளும் விஷயம்.
விகடன், குமுதம் மூலம் பல ஆயிரம் வாசகர்களை கவிதை கிறுக்க வைத்ததும், ஹைகூ புனைய வைத்ததும், ஒரு பக்க கதை சொல்ல வைத்ததும் அவரின் தனி பெரும் சாதனை.
புத்தகங்கள் மூலம் மட்டுமல்லாது சினிமா வழியாகவும் அவரின் எழுத்துக்கள் பல முறை நம்மை வசீகரிக்கவும், புன்னகைக்கவும் செய்திருக்கின்றன. கமல், ஷங்கர், A .R ரஹ்மான் என பல ஜாம்பவான்கள் இருந்தாலும் இந்தியன், முதல்வன் படங்களின் மாபெரும் வெற்றிக்கு அவரின் சமூக அக்கறை மிகுந்த வசனங்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சில சமயம் இந்த ஆள் ஒரு தீர்க்க தரிசியோ அல்லது மந்திரவாதியோ என வியந்ததுண்டு. ஆண் விபச்சாரம் பற்றி 15 - 20 வருடங்களுக்கு முன்பே இவரால் யோசிக்க முடிந்ததும், இப்போது உள்ள அரசியல் குடிமி பிடி சண்டைகளை அப்போதே "பதவிக்காக" நாவல் மூலமாய் புட்டு புட்டு வைத்ததும் நம்ப முடியா ஆச்சரியம்.
அவரின் கணேஷ் வசந்த் கதா பாத்திரங்கள் இன்னமும் நம்முள் மீள முடியாத ஒரு தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. எழுதும் ஆர்வமுடைய எல்லோருக்கும் ஒரு நல்ல குருவாக, நல்ல நண்பனாக, வழிகாட்டிய அவரின் எழுத்துக்களும், அவரின் நினைவுகளும் எல்லா தலைமுறைக்கும் உண்டான ஒரு பொக்கிஷம்.
அவரது மறைவு குறித்த செய்தி தீடிரென T .V யில் முக்கிய செய்தியாக வந்த போது ஒரு நிமிடம் ஏதும் செய்ய இயலாமல், ஒரு நல்ல ஆசிரியர்,வழிகாட்டி, ஒரு ஆத்ம சிநேகிதன் பிரிந்ததை நம்ப முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது என்றும் மறக்க முடியாதது. எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல கோடி பேர் அந்த நொடியில் அடைந்த அதிர்ச்சி, இழப்பு, கண்ணீர் என்றும் ஈடு செய்ய இயலாத ஒன்று.
மரணம் பற்றி அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் இங்கு நினைவுக்கு வருகிறது. "ஒரு கிரிக்கெட் மேட்சில் பேட்ஸ்மென்கள் அவுட் என்கின்ற விதிமுறை இன்றி நுறு, இருநுறு, முண்ணுறு, என அடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும் . விக்கெட் என்கின்ற ஒரு வஸ்து தான் ஆட்டத்தை சுவாரசியப்படுத்துகிறது.அது போல தான் வாழ்கையும்" - எவ்வளவு உண்மையான வார்த்தைகள்......!
அவரின் எழுத்துக்கள் இன்னமும் புதிது புதிதாய் பிறந்து கொண்டேதான் இருக்கிறது, சக எழுத்தாளர்கள் மற்றும் எண்ணற்ற பதிவர்கள் மூலமாக..... யார் மறுக்க முடியும் இதை...
இப்போதும் என் தலையணை பக்கத்தில் இருக்கும் ஈ ரீடரில் அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இருக்கிறது. ஒவொரு முறை திரும்ப வாசிக்கும் போதும் அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் புதிதானவை.
|
No comments:
Post a Comment