Thursday, December 1, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் - சில டைரிக் குறிப்புகள்

நவீன கார்ப்பரேட் உலகம் எத்திசையில் சென்றதோ அதற்கு எதிர்திசையில் பயணித்தவர்தாம் ஸ்டீவ் ஜாப்ஸ். நவீன தொழில் நுட்பத்தை மனித வாழ்வுடன் இணைத்ததுதான் ஜாப்ஸின் வெற்றி ரகசியம்.

ஆப்பிள் என்றதொரு நிறுவனத்தை தனது நண்பருடன் இணைந்து தந்தையின் கேரேஜில் துவங்கிய காலத்திலேயே இத்தகையதொரு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளத்து வங்கினார் ஜாப்ஸ். கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். அறுபதுகளில் ஹிப்பி தலைமுறையினரைப் போல சமூகத்தின் உயர்குல மேன்மைகளுக்கு சவால் விட்டார்.

ஒருமுறை ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கார்ப்பரேட் உலகத்திற்கு விருப்பமான ஆடையை அணியவில்லை என்பதுதான் தன்மீதான குற்றம் என அவர் கூறினார். சூட்டும், கோட்டும் அல்ல மாறாக சாதாரண நீல ஜீன்ஸும், டீ ஷர்ட்டும்தான் ஜாப்ஸிற்கு விருப்பமான ஆடைகள். அவரது வாழ்க்கை அனுபவம் கூட வித்தியாசமானது. சிரியாவைச் சார்ந்தவருக்கும், அமெரிக்க பெண்மணிக்கும் மகனாக பிறந்த ஜாப்ஸ் தன்னை தத்தெடுத்த தம்பதிகளால் வளர்க்கப்பட்டார்.
புத்த மதத்தில் அடைக்கலம் தேடினார். இந்தியாவிற்கு வருகை தந்து புத்த மதத்தை தழுவினார்.

ஆப்பிள் நவீன தொழில் நுட்பத்திற்கு மனிதநேய முகத்தை அணிவித்தவர் ஜாப்ஸ். அதுமட்டுமல்ல நவீன தொழில் நுட்பத்தை முன்னணியில் நின்று வழிநடத்தியவர். ஐ-மேக், ஐ-ஃபோன், ஐ-பேடு உள்ளிட்ட அவரின் தயாரிப்புகளின் சுவடுகளை பின்பற்றித்தான் உலகின் பெரும் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தின.

கம்ப்யூட்டர் வல்லுநராக சிறப்புற்று விளங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். 2005-ஆம் ஆண்டு ஜூன்-12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. அதில் அவர் தனக்கு பிடித்த ஒரு வாசகத்தை தெரிவித்தார். ‘உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்’ என்பதே அந்த வாசகம். ‘இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன்’ என ஜாப்ஸ் கூறினார். இறுதியில் கணையத்தில் உருவான புற்றுநோய் அவரது வாழ்க்கை அஸ்திமிக்க காரணமானது.

உலகின் பெரும் பணக்காரராகவும், அறிவு ஜீவியாகவும் திகழ்ந்த ஜாப்ஸிற்கு தனது வாழ்க்கையின் நாட்களை அதிகரிக்க இயலாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என பலரும் கருதலாம். ஆனால், அது தான் நிதர்சனம். இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஜாம்பான்களாக திகழ்ந்தாலும் அவர்களால் தங்களது வாழ்நாளின் எல்லையை தீர்மானிக்க இயலாது என்பதற்கு கடந்த காலங்களில் எவ்வளவோ உதாரணங்கள் நம் கண் முன்னால் காணக் கிடைக்கின்றன.

ஜாப்ஸ் நிகழ்கால உதாரணமே. மரணம் ஒரு நாள் வரும் என நம்பினால் மட்டும் போதாது, அந்த மரணத்திற்கு முன்னால் நமது கிடைக்கும் வாய்ப்பான வாழ்நாளின் நோக்கத்தையும், நாம் எதற்காக படைக்கப்பட்டோம்?, நம்மை படைத்தது யார்? என்பதையும் மனிதன் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இதனை ஜாப்ஸ் உணர்ந்தாரோ இல்லையோ நாம் உணர்ந்து கொள்வோம்.

No comments:

Post a Comment