Sunday, November 27, 2011

'ரெண்டு நாளில் மாத்திக் காட்டுறேன்!' - கலெக்டர் மாற்றத்தின் பின்னணியில் சிரிக்கும் தோல் தொழில் அதிபர்!

''ஜெயலலிதா ஆட்சி எப்படிச் செயல் படுகிறது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம், ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமாரின் மாறுதல்!'' என்று அதிகார வட்டாரத்தை முழுமை யாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள்!


அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்கு வளைந்து கொடுக்கவில்லை என்றால், காந்தியே கலெக்ட ராக இருந்தாலும்... டிரான்ஸ்ஃபர்தான். இந்த விஷயத்தில், தி.மு.க - அ.தி.மு.க. என்ற பாகு பாடும் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாறுபாடும் கிடையாது. இதற்கான உதாரணங்களில் ஒருவர் ஆகி இருக்கிறார் இந்த ஆனந்தகுமார்!

மொடக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான கிட்டுசாமி, கலெக்டரை வீட்டில் பார்க்கச் சென்றபோது... சந்திக்கவில்லை, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாஜலம், கலெக்டரின் செல்லுக்குப் பல முறை தொடர்புகொண்டபோதும் அவர் போனை எடுக்கவே இல்லை. அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, கலெக்டர் வெளியே போனார். திரும்பி வரவே இல்லை.... இப்படிப் பல்வேறு கதைகள் உலவுகின்றன.

இவை எல்லாம் கூடுதலான காரணங்கள்தான். உண்மையான விஷயமாக ஈரோடு வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. ''கலெக்டரை மாற்றியது தோல் தொழிற்சாலை அதிபர் ஒருவர்!'' என்கிறார்கள். நம்மிடம் பேசிய புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் முகிலன், ''ஈரோட்டில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அந்த வாய்க்கால் முற்றிலும் மாசுபட்டுவிட்டது. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர... 'சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை நேரடியாக யாரும் வாய்க்காலில் கலக்கவிடக் கூடாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஈரோட்டைச் சேர்ந்த கே.கே.எஸ்.கே. தோல் பதனிடும் தொழிற்சாலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில்விட்டனர். இதுபற்றி கலெக்டர் ஆனந்தகுமாருக்குப் புகார் போனது. உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்குச் சென்று, அவர் ஆய்வு செய்தார். சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர், வாய்க்காலிலும் காவிரி ஆற்றிலும் கலப்பதை உறுதி செய்தார். உடனடியாக, சம்பந்தப்பட்ட கம்பெனியின் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில், தொழிற்சாலைக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தோல்கள் புராஸஸிங்கில் இருந்துள்ளன. திடீரென்று மின் இணைப்பைத் துண்டித்ததும் எல்லாமே வீணாகிவிட்டதாம். இதனால், தோல் கம்பெனியின் உரிமையாளர் ஹைதர் அலி கோபமாகி, கலெக்டரைப் பார்த்துச் சத்தம் போட்டதாகவும், 'உங்களை ரெண்டே நாளில் இங்கு இருந்து தூக்குறேனா இல்லையான்னு பாருங்க!’ என்று சவால்விட்டுச் சென்னை சென்றதாகவும் சொல்கிறார்கள். அங்கு ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருக்கிற ஒருத்தரைப் பிடித்து கலெக்டரை மாற்றியுள்ளார். அவருக்கு மாறுதல் உத்தரவு வந்த பிறகுதான் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கே வந்திருக்கார் ஹைதர்அலி. முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது!'' என்று கொட்டித் தீர்த்தார் முகிலன்.


இந்த சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஈரோட்டில் இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு விசிட் அடித்தாராம் கலெக்டர். ''கேன்சர் நோயால் ஏன் இந்த மாவட்டத்தில் அதிகமான ஆட்கள் பாதிக்கப்படுகிறார்கள்?'' என்று கேட்டபோது, ''தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளே இதற்குக் காரணம்!'' என்று அங்கு உள்ள மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். தோல் தொழிற்சாலைக்குச் செல்லும் மின்சாரத்தை உடனடியாக கலெக்டர் கட் பண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால், கலெக்டரை மிஞ்சியவர்களாக தோல் தொழிற்சாலை முதலாளிகள் இருப்பதும், அவர்கள் கலெக்டரை மாற்றும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும் எல்லா ஆட்சிகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகிவிட்டது.

கலெக்டர் மின் இணைப்பைத் துண்டித்த தோல் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹைதர்அலி தரப்பில் பேசினோம். ''எங்களோட நிறுவனங்கள் எல்லாமே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழுடன் முறைப்படிதான் நடக்கின்றன. கலெக்டர் மாற்றத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ, காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைபோல ஆகிடுச்சு. தொழில் போட்டி காரணமாக சிலர் எங்க மீது இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்புறாங்க...'' என்கிறார்கள்.

தூய்மையான அரசாங்கம் நடத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ள முதல்வர்தான் இதற்கு உண்மையான பதிலைத் தர வேண்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம், கி.ச.திலீபன்

படங்கள்: க.தனசேகரன்

''ராஜமாணிக்கம்தான் இப்போதும் சி.எம். செக்ரட்டரியா?''

ஈரோடு கலெக்டர் ஆனந்தகுமாரின் அதிரடி மாற்றத்தை விட, காமராஜ் புது கலெக்டராக வந்திருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி. ''தி.மு.க. ஆட்சியின் செல்லப் பிள்ளை ஐ.ஏ.எஸ்.களில் இவரும் ஒருவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் நெருங்கிய நண்பர். செய்தித் துறை இயக்குநராக இருந்த இவரை மதுரை மாவட்ட கலெக்டராகத் தனக்கு வேண்டும் என்று கேட்டு அழகிரிதான் அழைத்துச் சென்றார். தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடியாக அவரை அங்கு இருந்து ஈரோட்டுக்கு மாற்றியது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இவர் தி.மு.க. ஆள் என்று சொல்லி ஈரோட்டில் இருந்து மாற்றினார்கள். ஆனால், இவரையே 30 நாட்களுக்குள் ஈரோடு கலெக்டராகப் நியமித்துள்ளார்கள். முதல்வரின் செயலாளர் ஒருவரை காமராஜ் போய் பார்த்துள்ளார். அதன் பிறகுதான் இவர் மீது கருணை பிறந்துள்ளது. ராஜமாணிக்கம், காமராஜ், முதல்வரின் செயலாளர் ஆகிய மூவரும் இணை பிரியாத ஆட்கள் என்பது முதல்வருக்குத் தெரியுமா?'' என்கிறார்கள் கோட்டையில் சிலர்.

ஆனால், காமராஜுக்கு நெருக்கமானவர்களோ, ''அவர் எந்தக் கட்சி அபிமானியும் இல்லை. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து முடிப்பார். அந்த நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான் இது!'' என்கிறார்கள்.

No comments:

Post a Comment