களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர், 1973 முதல் (அரங்கேற்றம்) - இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமமான காரியம் தான்.
இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை.
1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்)
கமலின் படங்களில் எனது All time favourite. இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க, உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக்.
2. நாயகன்
கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே.
படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார். நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது.
3. அபூர்வ சகோதரர்கள்
ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி. கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.
4. தேவர் மகன்
இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல் எந்த காட்சியும் இருக்காது. சிவாஜி, ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.
5. இந்தியன்
இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது.
6. 16 வயதினிலே
கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!
ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல.
7. மகா நதி
நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது.
இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின.
" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)
8. பேசும் படம்
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம்.
அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்). நீங்கள் இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும்.
9. தசாவதாரம்
ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன்.
10. அன்பே சிவம்
இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்! டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))
முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.
விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை :
மைக்கேல் மதன காமராஜன்
மூன்றாம் பிறை
சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா)
பஞ்சதந்திரம்
கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்! நன்றி !!
|
No comments:
Post a Comment