இந்த இரண்டு புகைப்படங்களையும் பாருங்கள்... முதல் படம், 2008-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அடுத்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டுமே கோயம்புத்தூரிலிருக்கும் அவினாசி சாலைதான். 'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்' என்று சொல்வது போல் இருக்கிறதல்லவா!
ஆம்... மேடை ஏறினால்... 'மரம் வளர்ப்போம்...' என்று வாய்கிழிய கதறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், கீழே இறங்கியதுமே கோடரியைத்தான் கையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். 'நான்கு வழிச் சாலை', 'ஆறு வழிச் சாலை', 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்றெல்லாம் ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொண்டு... மரங்களைக் கபளீகரம் செய்வது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
இதோ... 'பட்டுப்போன மரங்கள்’ என்று காரணம் காட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல நூறு மரங்களை சமீபத்தில் வெட்டிச் சாய்த்திருகிறார்கள். இந்த விஷயம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொதிக்க வைக்கவே... வீதியில் இறங்கி போர்க்குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பசுமை இயக்க அமைப்பாளர் 'கோவை’ மோகன்ராஜ், ''பத்து வருஷத்துக்கு முன்ன கோயம்புத்தூர் மாநகரத்துல பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், அரசாங்க அலுவலகங்கள், சாலைகள்னு எல்லா இடத்துலயும் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்துது. வேம்பு, புளி, வாகை, வேங்கை, அரசு, ஆல், பூவரசுனு குளுமை தர்ற மரங்கள்தான் அத்தனையும். அதுல 70% மரங்கள் இப்போ இல்ல. கொஞ்சம் கொஞ்சமா வெட்டி சாய்ச்சுக்கிட்டே இருக்காங்க.
கொஞ்சநாளைக்கு முன்னதான் அவினாசி ரோட்டை அகலப்படுத்துறதுக்காக ஏகப்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறைக்காரங்க வெட்டினாங்க. மின்சார வாரியத்துக்காரங்களும் தங்களோட பங்குக்கு ஏகப்பட்ட மரங்களைக் காலி பண்ணியிருக்காங்க. கிளைகளை மட்டும் வெட்டத்தான் மின்வாரியத்துக்கு அனுமதி இருக்கு. ஆனா, மரத்தையே காலி பண்ணிடறாங்க.
இப்படி ஆளாளுக்கு வெட்டி... மொத்த ஊரையும் மொட்டையடிச்சுட்டாங்க. இந்த நிலையில மாநகராட்சிக்காரங்களும், 'பட்டுப்போன மரத்தை வெட்டுறோம்’னு சொல்லிக்கிட்டு கோடரியோட வலம் வர்றாங்க. நல்லா இருக்குற மரங்களையும்கூட வெட்டி எடுத்துக்கிட்டுப் போறாங்க'' என்று ஆதங்கப்பட்டார்.
கோவை நீர் நிலைகள் பாதுகாப்பு அமைப்பின் செயலர் சிவகுமார், ''பொது இடங்கள்ல இருக்குற மரத்தை வெட்டணும்னா... கோட்டாட்சியர்கிட்ட அனுமதி வாங்கணும். ஆனா, கோயம்புத்தூர்ல யாருமே அதைக் கடைபிடிக்கிறதே கிடையாது. கலெக்டர் ஆபீஸுக்குள்ள இருந்த ஏகப்பட்ட மரங்களை காரணமே இல்லாம வெட்டியிருக்காங்க. அதுல 100 வயசான பழைய மரமெல்லாம் காலியாகிடுச்சு. அதேமாதிரி பிருந்தாவன் பூங்காவில் இருந்த மரங்களையும் அவசியமே இல்லாம மாநகராட்சிக்காரங்க வெட்டிட்டாங்க. இதுபத்தியெல்லாம் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கலை.
பெங்களூரு, புனே மாதிரியான பெரிய நகரங்கள்ல 'மர பொறுப்பு உரிமைக் குழு’ (ட்ரீ அத்தாரிட்டி கமிட்டி) அமைச்சிருக்காங்க. அதுல வனத்துறை, காவல்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் உறுப்பினரா இருக்காங்க. யார் மரத்தை வெட்டினாலும் சரி, இந்தக் குழுகிட்ட அனுமதி வாங்கித்தான் வெட்ட முடியும். தகுந்த காரணத்தைச் சொன்னாத்தான் அனுமதி கிடைக்கும். அதுமாதிரி கோயம்புத்தூர்ல மட்டுமில்ல... தமிழ்நாட்டுல இருக்கற எல்லா நகரங்கள்லயும் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். அப்போதான்... இருக்குற மரங்களையாவது காப்பாத்த முடியும்'' என்ற அருமையான யோசனையை முன் வைத்தார்.
இதைப் பற்றியெல்லாம் மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ''பட்டுப்போன மரங்கள் மட்டும்தான் வெட்டப்படுகின்றன. நன்றாக இருக்கும் மரங்களை வெட்டுவது கிடையாது. தேவையில்லாமல் இதுபோல பிரச்னைகளைக் கிளப்புகிறார்கள். அவர்களைவிட இந்த ஊர் மீதும்... இங்குள்ள மரங்கள் மீதும் நூறு மடங்கு அக்கறை எங்களுக்கும் இருக்கிறது'' என்றார்.
ஆனால், செயலில்தான் அந்த அக்கறை வெளிப்படுவதே இல்லை!
|
No comments:
Post a Comment