உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் என்று இதுபோன்ற காரணங்களுக்காக திமுகவை பழிவாங்கிவி்ட்டதாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டவர்கள் பெருமிதத்தோடு இருக்கிறார்கள்.
ஆனால், பார்ப்பனர்களின் அரசியலை மேல் சொன்ன இந்தக் காரணங்கள் எப்போதும் தீர்மானிப்பதில்லை. அவர்கள் திமுகவை எப்போதும் தங்களுக்கு எதிரான கட்சியாகத்தான் கருதுவார்கள். மாறாக, அதிமுகவை அதுவும் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதை தங்களின் கட்சியாகவேதான் கருதுகிறார்கள்.
போன முறை ஜெயலலிதா ஆட்சியில் உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதுக்கூட அவர்கள் அதிமுகவைத்தான் ஆதரித்தார்கள். ஆக, அவர்கள் எதற்காக திமுகவை எதிர்க்கிறார்கள், அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டுப்போல் தினமணியின் இந்த தலையங்கம் திகழ்கிறது,
‘சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை. ……………………………………………
சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள்தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.‘ (9-6-2011 தினமணி தலையங்கம்)
தினமணியின் இந்த உண்ர்வுதான் ஒட்டு மொத்தப் பார்ப்பனர்களின் உணர்வு. அதாவது பெயரளவில்கூட பெரியாரை ஆதரிப்பதை பார்ப்பனர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது.
இதில் காமராஜரை உயர்த்தி எழுதி திராவிட இயக்கத்தை எதிர்ப்பது என்பதுதான் பார்ப்பன தந்திரம். காமராஜரின் சிறப்பபு என்று தினமணி குறிப்பிடுபவது முழுக்க முழக்க பெரியாரால் செய்யப்பட்டது என்பதை மறைத்து எழுதுகிறது தினமணி.
சரி, தினமணி சொல்வதையே முழு உண்மை என்றே ஒத்துக்கொள்வோம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தது ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?
சொந்தக் கட்சியிலேயே காமராஜ்க்கு எதிராக சதி செய்து அவரை அவமானப்படுத்தி அவர் முதல்வர் ஆவதை தடுத்தது, ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?
‘பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சிஅடைவதுதான் சரி.‘ என்கிறது தினமணி. விஷ விதை என்று அது குறிப்பிடுவது பெரியாரைத்தான்.
தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட பிஞ்சுகளின் கல்வியைத் தடுத்து, குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜி விச விதையா?
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அதை நிறுத்தி, ராஜாஜி ஆட்சியை ஒழித்து, காமராஜ் ஆட்சியை கொண்டுவந்து கிராமப்புற பள்ளிக்கூடங்களை கொண்டுவந்த பெரியார் விச விதையா?
சரி, கட்டாயக் கல்வித் திட்டத்தை காமராஜ் கொண்டு வந்ததாகவே வைத்துக் கொள்வோம், அப்போது அதை எதிர்த்தது, பெரியாரும் திராவிட இயக்கமுமா? ராஜாஜியும் பார்ப்பனர்களுமா?
காமராஜ் மீது தினமணி கொண்ட பாசம் உண்மை என்றால், காமராஜ்க்கு எதிராக சதி செய்த ராஜாஜியை ஏன் கண்டிக்க மறுக்கிறது தினமணி?
இதற்கு தினமணி பதில் சொல்லவேண்டும்? அல்லது, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்குகிற தினமணி கட்டுரையாளர்களான சூத்திரர்களாகவது பதில் சொல்ல வேண்டும்.
பார்ப்போம் அவர்களின் யோக்கியதையை.
தொடர்புடையவை:
|
No comments:
Post a Comment