என்னைத் தொட்டு தாலி கட்டினவர்" அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, "எனக்கு தாலிபிச்சை தாங்க?" என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம்.
அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்தாராலும் குத்தப்படுகின்றன. 'குடும்ப பெண்கள்' என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் எங்கு வகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் தாலி அணிந்தவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள். படு நல்லவர்கள் என்ற தோற்றம் சில நேரங்களில் வெறும் தாலி என்ற அரணால் மட்டும் நிர்ணயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது பையனுக்கு கால்கட்டு, பெண்ணுக்கு நூல்கட்டு. கால்கட்டு கண்ணுக்கு தெரியாது. நூல்கட்டு கண்ணுக்கு தெரியும்.
தெருநாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் வித்தியாசப்படுத்த நாயின் கழுத்தில் லைசன்ஸ் வைத்துக் கட்டுவார்கள். தாலியைப் பற்றி நினைக்கும் போது இந்த நாய் லைசன்ஸ் தான் கண் முன் வந்து நிற்கும்.பெண்களை திருமணம் ஆனவள், இவள் திருமணம் ஆகாதவள் என்று வகைப்பிரித்த ஆணாதிக்கம், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காமல் சுதந்திரமாக அலையவிட்டார்கள். இதனால் தெருப்பொறுக்கிக்கும், நல்லவனுக்கும், திருமணம் ஆனவனுக்கும், திருமணம் ஆகாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் தாலியும் அதை சார்ந்த திருமண முறைகளும் மறுபரிசீலனை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோமென நினைக்கிறேன்.
நேற்று முன் தினம் சிங்கை தமிழ் சேனல் வசந்தம் சென்ட்ரலில் "திருமணமான பெண் தாலி அணிய வேண்டியது அவசியமா?" என்ற கேள்வி பொதுமக்கள் முன் வைக்கப்பட்டது.
"இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ்,எனக்கு இதில் விருப்பமில்லை" என்று ஒரு பெண்மணியும்
"ஒரு பெண் தாலி அணிந்தால் தான் திருமணம் ஆனவளா? மனது ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் அடையாளக்குறி எதற்கு?" என்று இளம்பெண்மணியும்
"தாலி என்பது ஒரு பெண்ணுக்கு உயிர். அது கணவன் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அதை சுமப்பது பெண்களின் கடமை" என்று கொஞ்சம் வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள்.
அதில் கருத்து தெரிவித்த நிறைய ஆண்களின் தொனி எப்படி இருந்ததென்றால் "அது எப்படீங்க?. பெரியவங்க கூடி மந்திரம் சொல்லி எல்லாரும் வாழ்த்தி பெண்ணிற்கும் கட்டும் தாலியில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா? இல்லையென்றால் அர்த்தமில்லை என்றால் அது இக்காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமா? தாலி என்பது அவசியம்".
தாலி என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறதென்று புரியவில்லை. திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டும் போது ஏன் ஆணால் பெண் தொட்டுத் தாலி கட்ட இன்றுவரை சம்மதிக்கவில்லை? தெள்ளத்தெளிவாக இதில் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களைப் பற்றியும் வலைப்பூக்கள் சொல்வதை நாம் எல்லோரும் அறிவோம். அதுவும் வெறும் ஆணாதிக்கத்தை நிலைநாட்ட மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் "தாலி என்பது மட்டுமே லைசன்ஸ் டூ செக்ஸ்" ஆகி விடாது. தாலி என்பது திருமணத்தை வலியுறுத்தி முன்னிறுத்தப்பட்ட வரட்டு குறியீடு. மொத்தத்தில் திருமணமே லைசன்ஸ் டூ செக்ஸ் தான். எனக்கு இந்த வகை "லைசன்ஸ் டூ செக்ஸ்"ஸில் ஆட்சேபம் எதுவுமில்லை. என்னைப் பொருத்தவரையில் திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண் இருவரின் அன்பின் அடிப்படையில் ஒழுக்கம்+சுயக்கட்டுப்பாடு என்ற இருவருக்குமான மீயூசுவல் அண்டஸ்டாங்கில் வரும் ஒப்பந்தமே தவிர வேறு எதுவுமில்லை. திருமண முறைகள் கடுமையாக மறுபரீசலனைக்கு உட்படுத்தவேண்டுமே தவிர திருமணம் என்ற ஒப்பந்தத்தை அல்ல என்பது என் கருத்து."லைசன்ஸ் டூ செக்ஸ்" என்ற வார்த்தைகளில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. செக்ஸ் இன்றி இன உற்பத்தி ஏது? திருமணம் லைசன்ஸ் டூ செக்ஸாக இருப்பதில் ஆட்சேபம் ஏதுவுமில்லை.
தாலி வேலி என்று நினைத்தால் அந்த வேலியை சுற்றி மண்டியுள்ள மூட நம்பிக்கைகள் ஏராளம். கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிட்டு விட்டு குங்குமத்தை தாலியில் வைத்துக் கொள்வதை சகஜமாக காணலாம். தாலியில் குங்குமம் வைத்தால் புருஷன் நீடுழி வாழ்வார் என்பது நம்பிக்கை என்பார்கள்.தாலியில் குங்குமம் வைக்காமல் புருஷன் வாயில் சோறு வைத்தாலே அவன் நீடுழி வாழ்வான் என்பது தான் உண்மை. சுமங்கலி பூஜை என்ற கூத்து ஒன்று நடக்கும். தாலி கெட்டிப்பட நடத்தும் பூஜையாம் அது. ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லாமல் நடக்கும் பூஜை அதை. தாலி கழன்று விட்டாலோ அறுந்து விட்டாலோ கணவனுக்கு உடனடியாக ஏதாவது நடக்கும் என்பது அதீத நம்பிக்கை.
தமிழ்படங்களில் தாலி செண்டிமெண்டை பார்ப்போம். 'அந்த 7 நாட்கள்' என்ற படத்தில் பாக்கியராஜ் தான் காதலித்த பெண்(அம்பிகா) மற்றொருவரை கட்டாயத்தால் திருமணம் செய்துக் கொள்கிறாள்.கணவனுக்கு இந்த பெண்ணின் காதல் விசயம் தெரியவர பாக்கியராஜையே நினைத்து உருகும் அவளை ஒப்படைக்க பிராயசித்தம் எடுக்கிறான் அந்த கணவன். க்ளைமாக்ஸ் காட்சியில் "கட்டிய தாலியை எடுத்து கீழே வைத்து விட்டு என்னுடன் வா" என்று பாக்கியராஜ் அம்பிகாவைப் பார்த்து சொல்ல, அதுவரை கட்டிய கணவனுடன் வாழாமல் மனதால் பாக்கியராஜ்ஜையே நினைத்து உருகும் அம்பிகாவுக்கு தாலியை பற்றி பேசியதும் மிராக்கிளாக தாலிப் பற்றிய பிரஞ்ஞை தொற்றிக் கொள்ள தாலியை பிடித்து கதறி கட்டிய கணவனை தெய்வமாக மதிக்க ஆரம்பிப்பாலாம்.அழுகையில் பிச்சி உதறுவாள். கடைசியில் பாக்கியராஜ் "பார்த்தீங்களா!இது தான் தாலியோட மகிமை.இது தான் தமிழச்சியின் பண்பாடு" என்று நீளமான வசனம் பேசி அரங்கில் பலத்த கைத்தட்டல்களோடு வெளியேறுவார். அந்த படம் சிறந்த படம். சக்கைப் போடு போட்ட படம். மக்கள் மனதில் இருக்கும் உணர்வே சினிமாவில் பிரதிபலிக்கும் என்ற போது அந்த தாலி செண்டிமெண்ட் படம் வெற்றிப்பெற்றதில் வியப்பேதுமில்லை.
கணவன் கொடுமைக்காரனாக இருந்தால் உச்சகட்டமாக கதாநாயகி கதாநாயகனின் முகத்தில் தூக்கி எறிவது தாலியை தான்.பின்னனி இசை பிரளயாமாக ஒலிக்கும்.திரையில் காண்பிக்கப்படும் எல்லோர் முகத்திலும் ஓர் அதிர்ச்சி. அது வேறு எதுவுமில்லை. நாயகி திருமண ஒப்பந்தத்தை முறிக்கிறார் என்பதை திருமணத்துக்கு குறியீடாக பயன்படுத்தும் தாலியை தூக்கி எறிவது மூலம் இயக்குநர் சொல்கிறாராம். இராம.நாராயணன் படத்தில் அம்மையில் விழுந்து துடிக்கும் கணவனுக்காக தாலியை கடவுளுக்கு முன் ஏந்தி கணவனுக்காக துடிக்கும் பெண்கள் ஏராளம்.
அண்மையில் 'வாசிப்போம் சிங்கப்பூர்' விளைவாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் அறிமுகம் அவரின் "தேடி..." கதைத்தொகுப்பின் வாயிலாக கிடைத்தது. அருமையான எழுத்தாளர் அவர். இன்று கணியில் தமிழ் படித்துக் கொண்டிருப்பதற்கு வித்திட்ட பிரம்மா அவர். அந்த கதைதொகுப்பில் இருந்த ஒரு கதை தாலியையும், திருமண முறைப் பற்றியும் சிந்திப்பதாக இருந்தது.
அந்த கதையில் நாயகி சிறுவயதில் தந்தையால் சித்ரவதைக்கு உட்படும் அம்மாவை பார்த்து பார்த்து திருமணம் என்ற உறவில் நம்பிக்கையற்றுப் போகிறாள். ஒரு ஆணை நண்பணாகவே மட்டுமே பார்க்க முடியுமே தவிர சுதந்திரத்தை பரிகொடுக்கும் திருமணம் என்ற பந்தத்தால் ஒருவனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என சாடுகிறாள். ஆயினும் ஒருவனுடன் காதல் வசப்படுகிறாள். அவள் அவனிடம் திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வதென்றால் சரி, இல்லாவிட்டால் நட்பை துண்டித்துக் கொள்ளவும் தயார் என்று உறுதியாகக் கூறுகிறாள். இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒருவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்றும்,இருவரும் வேறு வேறு சுதந்திரத்துடன் ஒன்றாக வாழ்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.
திருமணம் என்ற முடிச்சில்லாமல் இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பிக்கின்றனர். இருவரும் சந்தோசமாகவே காலத்தை கழிக்கின்றனர். சில வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக வாழ்க்கையை கழித்தாலும் இருவரிடம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும் அந்த பெண் தன் கணவன் மற்றவர்கள் புகழும்படி ஒன்றை செய்து விட்டு வரும்போது அவரை பாராட்ட வேண்டுமென நினைக்கும் போது அவளின் ஈகோ தடுக்க, வாழ்த்து சொல்ல முடியாமல் தவிக்கிறாள். அதே போல் அனைவரும் மெச்சும் படி இவள் ஒரு காரியம் செய்து விட்டு வரும் போது மற்றவர்கள் பாராட்டுவதை விட கூட ஒன்றாக வாழ்பவன் வாழ்த்துச் சொல்லி இவள் முதன்முதலாக கேட்க வேண்டுமென தவிக்கிறாள். தினமும் "நீ சாப்பிட்டாயா? ஏன் இவ்வளவு நேரம் முழுத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவன் கேட்கவில்லை. இவள் அதையெல்லாம் எதிர்பார்க்கிறாள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கலாம், அன்பின் பரிமாற்றத்தைச் சுதந்திரம் என்ற பெயருக்கு பலி கொடுக்காமல் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினனக்கிராள். அதற்காக தன் லட்சியத்தை பலிக் கொடுத்து விடலாமா என்று கூட யோசிக்கிறாள். இங்கேயும் அவளின் ஈகோ தடுக்கிறது. தன் வயிற்றில் வளரும் அவனின் கரு வந்தாவது இருவருக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.
திருமண பந்தத்தில் அன்பும் அனுசரனையும் பரிவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் போது தாலி என்ற பெண்ணின் மீதுள்ள ஆணாதிக்க குறியீடு தேவையில்லை என்பது என் கருத்து.
பின் குறிப்பு&Disclaimer: இந்த தலைப்பில் என் கருத்தைச் சொன்னது சரியா? தவறா? என்று யோசிக்கவில்லை. நான் குடும்பம் என்ற சூழலில் புரட்சிக்காரன் அல்ல. நானும் தாலி கட்டி தான் மனைவியை கூட்டி வந்தேன். இன்னும் அவர்கள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஊருக்கு உபதேசமா? என்று உள்மனம் குத்தினாலும், என்னால் என் பெற்றோர்களையும் சுற்றங்களையும் பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் எனக்கு நானே கோழையாக தெரிந்தாலும் என் பிள்ளைகளின் வழியாக அவர்களிக்கு சுதந்திர சிந்தனைகளை ஊட்டி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கருத்தைச் சொன்னேன்.
நானும் "தாலி அணிவது தேவையா?" என்ற முக்கியமான கேள்வியை என் மனைவியிடமும் கேட்டு வைத்தேன். "தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது. தாலியால் இப்படி கூட ஒரு பயன் இருக்கிறதா?
உங்கள் கருத்தை அறிய ஆவல்.
|
No comments:
Post a Comment