தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில், அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என, இலவசங்களை அள்ளி விட்டுள்ளன. ஆனால், இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றனவா?
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கருதப்படுகின்றன. ஆனால், அந்தக் கட்சிகளே, தங்களை நம்பாமல், இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. கடந்த வாரம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.,வும் சரி, நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க.,வும் சரி, தங்கள் தேர்தல் அறிக்கையில், பொதுமக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கும் வகையில், பல்வேறு இலவசத் திட்டங்களை வாரி இறைத்துள்ளன. இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து திரட்டப்படும் என்ற கேள்விக்கு, இரு தரப்பிலுமே, "வழவழ' பதில் தான் கிடைக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பம், 2006ம் ஆண்டு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான். அதுவரை வெறும் சம்பிரதாயமாகவே இருந்த தேர்தல் அறிக்கை, சுனாமியைப் போல, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷனில் கிலோ அரிசி இரண்டு ரூபாய், விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், ஏழைகளுக்கு இலவச, "டிவி' என, அறிவித்தது. வழக்கம் போல் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க., பதறியடித்து, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் என, தன் பங்குக்கு இலவச அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு காரணம், அக்கட்சியின் இலவச அறிவிப்பு தான் என்ற பேச்சு எழுந்தது. பிரதான கட்சிகளும் அப்படித் தான் நினைக்கின்றன என்பதை, அவ்விரு கட்சிகளின் தற்போதைய தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது. உண்மை அது தானா? இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன என்றால், 2006 சட்டசபை தேர்தலில், 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., "வீடு தேடி ரேஷன் பொருட்கள், அனைவருக்கும் வேலை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிதி, ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்பச் செலவிற்கு ரொக்கம்' என, வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் தான், "ஹிட்'டாகி, அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்க வேண்டும். அக்கட்சியோ 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்று, ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. "டிவி'யை விட அதிக விலை கொண்ட கம்ப்யூட்டர், தாலிக்குத் தங்கம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட அ.தி.மு.க., வெற்றி பெற்று, அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. மாறாக, 69 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. மறுபக்கம், தி.மு.க., 26.4, காங்கிரஸ் 8.38, பா.ம.க., 5.55, மார்க்சிஸ்ட் 2.64, இந்திய கம்யூனிஸ்ட் 1.59 சதவீத ஓட்டு என, வலுவான கூட்டணியுடன் போட்டியிட்ட தி.மு.க., அணி 44.56 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 163 தொகுதிகளை அள்ளியது. இந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்துமே, வலுவான அடித்தளமும், ஆள்பலமும் கொண்டவை.
அ.தி.மு.க., அணியில், அக்கட்சியைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படியாக ம.தி.மு.க., மட்டுமே இருந்தது. "இதிலிருந்தே, தேர்தல் வெற்றிக்கு காரணம் கூட்டணி பலம் தானே தவிர, இலவச அறிவிப்பில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்' எனக் கூறும் அரசியல் பார்வையாளர்கள், மேலும் கூறியதாவது: இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானித்திருக்கும் என்றால், குறைந்தபட்சம், தி.மு.க., வாவது அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்; அதுவும் நடக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பியே ஐந்தாண்டு கால ஆட்சியை ஓட்ட வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு பீகார், அதற்கு முந்தைய ஆண்டு குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் தி.மு.க.,வைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி, இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. குஜராத் முதல்வர் மோடியோ, "ஓசி டிவிக்கு வரி விதிப்பேன்' என, அதிரடியாக மிரட்டினார். நிதிஷ் குமாரோ, "வளர்ச்சி அரசியலைத் தவிர வேறு பேச்சில்லை' என்றார். அந்தத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
No comments:
Post a Comment