Saturday, March 26, 2011

21 வயதில் மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பளம் தரும் சி.ஏ., படிப்புகள் : ஆடிட்டர் ஜி. சேகர் தகவல்


 "" பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம் 60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்,'' என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். சி.ஏ., / ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ படிப்புகள் குறித்து ஆடிட்டர் ஜி. சேகர் பேசியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. தற்போது பிளஸ் 2 முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம். இதில் ஏழு பாடங்கள் இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் கொள்குறி வ
கை வினாக்களாக இருக்கும். ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும். இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ., படிக்கலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சி.ஏ., போலவே ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ., படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான், என்றார்.

No comments:

Post a Comment