Tuesday, December 21, 2010

மோகத்தால் வந்ததா? - வைரஸ் வோர்ட் (Virus Wart)

இடதுகைச் பெரு விரலை மறுகையால் பொத்திக் கொண்டு வந்தாள் ரதி என மோகிக்க வைக்கும் அந்த இளம் பெண். வயது பதினெட்டு இருக்கும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருப்பது மோகத்தோடு சற்றும் சம்பந்தப்படாத நோய். 

கைவிரலில் கட்டிபோல ஒரு சிறு தோல் வளர்ச்சி. தட்டுப்பட்டால் சற்று வலிக்கிறதாம். பார்பதற்கு அவளைப் போல அழகானதாக அந்த வீக்கம் இருக்கவில்லை. 

சொறிப் பிடித்த நாயின் தோல் போல சொரசொரப்பான தோல்த் தடிப்பாக அது அரை சென்ரிமீட்டர் அளவில் மட்டுமே இருந்தது. 

"இது ஏதாவது ஆபத்தான நோயா? புற்றுநோயாக இருக்குமா அல்லது வேறு ஏதாவது கெட்ட நோயா" என்ற கவலை அவளுக்கு. தனது பேரழகைக் குலைக்க வந்த 'கரும் புள்ளி' என்ற சீற்றம் வேறு அவளுக்கு. 

இதனை வைரஸ் வோர்ட் (Virus Wart) என அழைப்பார்கள். காரணம் இது ஒரு வைரஸ் நோயாகும். மனித பப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) (HPV) என்ற வைரஸ் கிருமியால் எற்படுகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படுவது என்பதால் ஒரு தொற்று நோயும் கூட. நெருக்கமாகப் பிழங்குவதாலும், பொதுவான துவாய் பயன்படுத்துவதாலும் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவலாம். 

இது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். ஆயினும் அந்தப் பெண்ணுக்கு வந்ததுபோல கைகளிலியே அதிகம் ஏற்படுவதைப் பார்க்கிறோம். 

பெரும்பாலானோரில் முக்கியமாகக் குழந்தைகளில் எந்தவித சிகிச்சையும் இன்றி தானாகவே ஆறு மாத காலத்தினுள் மறைந்துவிடும். சிலருக்கு ஓரிரு வருடங்கள் கூடச் செல்லலாம். 

பயப்படுவதற்கு இந்நோயில் எதுவுமில்லை. தட்டுப்பட்டால் வலிக்கலாம், உரசினால் இரத்தம் கசியலாம், இவற்றைத் தவிர வேறு ஆபத்துக்கள் இல்லை. ஆனால் அசிங்கமாக இருக்கிறதே என மனத்திற்குள் மறுகி தாங்களே கவலைப்படுவதுதான் மிகப் பெரிய துன்பமாகும். 

தானாக மறையாவிட்டால் சாதாரண பூச்சு மருந்துகள் அதனைக் கரைக்க உதவும். உதாரணமாக சலிசிலிக் அமிலக் களிம்பு (Salicylic Ointment) உதவும். பல வாரங்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். குளித்த பின் அல்லது நோயுள்ள இடத்தைக் கழுவி ஈரலிப்பும் மெதுமையும் இருக்கும்போது மருந்தைப் பூசினால் கூடுதலாக உட்புறமாக ஊறி அதிகம் வேலை செய்யும். டுவோபில்ம்(Duofilm) எனும் திரவ மருந்தும் உபயோகிக்கக் கூடியது. ஆயினும் இவற்றை முகம், பாலுறுப்பு போன்ற மென்மையான இடங்களில் உபயோகிக்கக் கூடாது. நீரிழிவு உள்ளவர்களும் அவதானத்துடனேயே உபயோகிக்க வேண்டும். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றிப் பாவிக்க வேண்டாம். 


வைத்தியர்கள் திரவ நைதரசனால் எரிப்பது, மின்சாரத்தால் (Cautery)எரிப்பது போன்ற சிகிச்சை முறைகளையும் கையாளக் கூடும். 

விறைப்பதற்கு ஊசி மருந்திட்டு வெட்டியும் எடுப்பார்கள். ஆயினும் இச் சிகிச்சைகளின் பின்னரும் அவை சிலவேளைகளில் மீளத் தோன்றக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது. 

உடலில் ஏற்படுவதுபோலவே சிலருக்கு இத்தகைய நோய் பாதங்களிலும்வரலாம். பாதத்தில் தோன்றுவதை (Planter Wart) என்று சொல்லுவார்கள். இதுவும் பெரும்பாலும் இளவயதினரிடையேதான் தோன்றுகிறது. தோலின் மேற்பகுதியில் ஆரம்பிக்கும் இது நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தால் உட்தோல் வரை பரவி வலியையும் உண்டுபண்ணலாம். காலில் ஏற்படும் இத்தகைய வீக்கத்தின் மத்தியில் சற்றுக் கருமையான பள்ளம் போன்ற புள்ளி காணப்படுவது இதனைச் சுலபமாக இனங்காண வைத்தியர்களுக்கு உதவுகிறது. 

உடலில் ஏற்படும் அத்தகைய வோர்ட்சை ஒத்த நோய் பால் உறுப்புகளிலும் ஏற்படுவதுண்டு. ஆண், பெண் ஆகிய இருபாலாரிலும் இது வரலாம். இதனைபாலுறுப்பு வோர்ட்ஸ்(Genital Warts) என்பர். இது ஒரு பாலியல் தொற்று நோய். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற நெறியை மீறுவதால் என்று சொல்லலாம். இன்று பாதுகாப்பற்ற பாலுறவு(Unprotected Sex) என்ற சொற்தொடரை உபயோகிக்கிறார்கள். நோயுள்ள ஒருவருடன் உடலுறவு வைப்பதால் இது தொற்றுகிறது. கருத்தடை ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவு கொண்டால் தொற்ற மாட்டாது. 

ஆண் உறுப்பில் சிறுதோற் தடிப்பு அல்லது கட்டிபோலவே இதுவும் இருக்கும். பெண்களின் உறுப்பின் தோல் மடிப்புகளில் இது மறைந்திருக்கக் கூடும் என்பதால் நோயிருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது. சில பெண்களுக்கு சற்றுக் கசிவும் அரிப்பும் இருக்கக் கூடும். 

அரிப்பு, கசிவு, சல எரிவு போன்ற எந்ந அறிகுறி இருந்தாலும் வைத்திய ஆலோசனை பெறுங்கள். வைத்தியரிடம் சொல்ல வெட்கப்பட்டு காரமான சோப்புகளால் கழுவவோ, கண்ட மருந்துகளைப் பூசவோ வேண்டாம். 

பாலுறுப்பின் சருமம் மிக மிருதுவானது என்பதால் புண்படக் கூடும். வைத்தியரின் ஆலோசனைபடியே சிகிச்சை செய்ய வேண்டும். 

பாலுறுப்பில் ஏற்படும் அரிப்பு, கசிவு, புண் யாவும் பாலியல் நோயால்தான் ஏற்படும் என்றில்லை, நீரிழிவு, அலர்ஜி, தோல் நோய்கள் போன்றவற்றாலும் ஏற்படலாம். எனவே தயக்கத்தை விட்டு வைத்திய ஆலோசனை பெறுவதுதான் உசிதமானது. 

மோகத்தால் வந்தாலும் சரி, காலில் வந்தாலும் சரி, கையில் வந்தாலும் சரி இத்தகைய வோரட்ஸ் எல்லாமே மனித பப்பிலோமா வைரசால் தான் ஏற்படுகின்றன. வாய்க்குள்ளும், மலவாயிலிலும் கூட வருவதுண்டு. 

ஆயினும் அவை எல்லமே ஒரே வகை வைரஸ் அல்ல. ஐம்பதுக்கு மேற்பட்ட உப இனங்கள் மனித பப்பிலோமா வைரசில் இனங்காணப்பட்டுள்ளன. 

இவற்றில் சில உடலின் வெவ்வேறு பாகங்களில் மாறுபாடான விதத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணுக்கும் தவறான மோகத்தால் வரும் பாலியல் நோய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றேன். 

No comments:

Post a Comment