Tuesday, December 21, 2010

அஞ்சா நெஞ்சன் இஞ்சி

சமிபாடின்மை என்றால் "இஞ்சிச் சோடா கொண்டுவா" என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.

உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு. இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.

சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.

யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.

சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.

பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.

ஒரு பிற்குறிப்பு; இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும். மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment