Monday, November 14, 2011

நடுத்தெருவில் தூக்குதண்டனை!

ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.



ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்த நிலையில், கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய பின்னர் வாகனம் நகர்த்தப்பட்டது. உயிர் பிரிந்தப்பின் இருவரது உடலையும் தூக்குக் கயிற்றிலேயே சிறிது நேரம் மக்கள் காட்சிக்காக அப்படியே விடப்பட்ட பின்னர் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தினர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.
ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA), கூடியிருந்த பொதுமக்கள் 'இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக' செய்தி வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' தெரிவித்துள்ளது. சென்ற வருடம் 179 மரண தண்டனை ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதனைவிட அதிக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும் சினாவிற்கு அடுத்தநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Sunday, November 13, 2011

உங்களுக்கும் எளிதாக மென்பொருள் உருவாக்கலாம்

பத்தே நிமிடங்களில் போர்டபிள் சாப்ட்வேர்கள் உங்களுக்கும் உருவாக்கலாம். 

முதலில் போர்டபிள் சாப்ட்வேர் என்றால் என்ன என்று பார்போம். 

நாம் எப்போதும் ஒவ்வொரு காரியங்களுக்காக ஒவ்வொரு சாப்ட்வேர்களை செய்வோம். அதனால் சிஸ்டம் ஸ்லோ ஆவது மட்டுமல்லாமல் ஹார்ட்டிஸ்க் இடத்தையும் அடைத்துக்கொண்டு விடும். ஆனால் இன்ஸ்டால் செய்யாமலே பென் டிரைவிலோ, சிஸ்டத்திலோ நேரடியாக பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்கள் தான் போர்டபிள் சாப்ட்வேர்கள்.

உங்களுடைய சிஸ்டத்தில் அட்மினிஸ்ட்ரேட்டர் சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் செய்வது ப்ளாக் செய்து வைத்திருந்தால் இந்த போர்டபிள் சாப்ட்வேர்கள் அதற்கு பதிலாக பயன் படுத்தலாம்.

இந்த கட்டுரையில் சொல்லியிருப்பது, உங்களுக்கும் போர்டபிள் சாப்ட்வேர்கள் சுயமாக உருவாக்கலாம் என்பதைப் பற்றிதான். புத்தியும், விவரமும் இல்லாதவர்கள் இதில் கமன்ட்டோ, ஓட்டோ போடவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.  

முதலில் கேமியோ என்ற இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யவும். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும். 
இனி டவுன்லோட் செய்த பைலை டபுள் கிளிக் செய்து திறக்கவும்.




Capture installation என்ற பட்டனில் பிரஸ் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.



Install Done என்ற பாக்ஸ் வரும்போது நீங்கள் உங்களுடைய சிஸ்டத்தில் புதிதாக ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யுங்கள். உதாரணமாக நிம்பஸ் 




இன்ஸ்டால் செத பிறகு முன்பு கண்ட Install Done பட்டனை பிரஸ் செய்து, 
சிறிது நேரம் காத்திருக்கவும்.


உங்களுடைய போர்டபிள் சாப்ட்வேர் இப்போது மற்றொரு விண்டோவில் ஓபன் ஆகியிருக்கும். அதை பென் டிரைவில் போட்டு நீங்கள் பயன்படுத்தலாம். 


Saturday, November 12, 2011

குடிகார கணவன் தலையில் பாறாங் கல்லைப் போட்டு கொன்ற மனைவி!

தினமும் குடித்து விட்டு வந்து அடித்து கொடுமை செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை உருட்டுகட்டையால் தாக்கி தலையில் பாறாங் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை அருகேயுள்ள பாலு செட் டிசத்திரம் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (48). இவர் குடிப்பழக்கத் துக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் சுற்றித் திரிந்து வந்தார். அந்த வழியில் போவோர் வருவோரையெல்லாம் மிரட்டி பணம் பறித்து வந்தார். மேலும் இவர் மீது அடிதடி வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் இருந்தன.

இவருக்கு நாகம்மாள் (35). என்ற மனைவியும் கதிர் (13), முருகன் (7) என்ற மகன் களும், பவித்ரா (9), காவ்யா (4) என்ற மகள்களும் உள்ளனர். பாலாஜி குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காததால், நாகம்மாள் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பாலாஜிக்கு, கள்ளத் தொடர்பு இருந்ததாக இருந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்ததும் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மனைவி இல்லாத நேரத்தில் கள்ளக் காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார் பாலாஜி. 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்த பாலாஜி, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. மனைவியை பாலாஜி அடித்து உதைத்துள்ளார். பின்னர், திடீரென வீட்டுக்கு தீ வைத்துள் ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆத்திர மடைந்த நாகம்மாள், உருட்டுக்கட்டையால் பாலாஜியை அடித்தார். 

வலிதாங்கமுடியாமல் அவர் வெளியே ஓடி வந்த பாலாஜி மயங்கி விழுந்தார். ஆத்திரம் தீராத நாகம்மாள் வீட்டுக்கு வெளியே கிடந்த பாறாங் கல்லை எடுத்து வந்து பாலாஜியின் தலை மீது போட்டார். முகம் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்த பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சி புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பாலாஜி பரிதாபமாக இறந்தார். 

தகவலறிந்த துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், பாலு செட்டிசத்திரம் ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப் பிரமணியம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகம்மாளை கைது செய்தனர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போதையில் சித்ரவதை செய்த கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!


வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும்கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.வெளுத்ததெல்லாம் பால்  மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்துவாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்க1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களதுபேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதிமற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் "காதல்" பட காட்சிதான். அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் 
அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்துவளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.

14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது.
போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க னுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம்

நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வேலையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலையில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தை களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னுடைய, 25ம் வயதில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மணந்து கொண்டேன். 

அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேருந்து விபத்தில், என் மனைவியையும், குழந்தையும் எடுத்துக் கொண்டான். தற்போது, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோரும், உறவினர்களும் கட்டாயப்படுத்துகின்றனர்; எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. வம்ச விருத்திக்காகவாவது நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். எனக்கு இன்னும் வயதும், இளமையும் உள்ளதாக கூறுகின்றனர். அதற்காகவே திருமணம் செய்து கொண்டாலும், என்னால் உண்மையான கணவனாக இருக்க முடியாது என்று கருதுகிறேன். நான் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன். தங்களது மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு வாழ்வு சிக்கிரம் முடிய வேண்டும் என, எண்ணுகிறேனே ஒழிய, தானாக போக்கிக் கொள்ளும் எண்ணம் அறவே இல்லை. 

— இப்படிக்கு,

அன்புள்ள மகனுக்கு —
காதல் மனைவியையும், அருமை மகனையும் இழந்த உன்னை, இரண்டாம் திருமணம் செய்ய துரத்துகின்றனர் இல்லையா?

ஆலோசனை கூறுவதற்கு முன், உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்தேன். மனைவி, மகனை இழந்த துக்கம் முகத்தில் பேய் தனமாக அறைகிறது. வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது. வெட்டுண்ட பல்லி வால் போல் துள்ளத் துடிக்கிறேன். ஜல்லி சிமென்ட் சுழற்றும் இயந்திரத்திற்குள் என் இதயம்.

ஒரே ஒரு நொடி உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்ததற்கு இத்தனை தாக்கம் என்றால், ஆயுளுக்கும் அதே சோகத்தில் நீடித்து நிற்கப் போகும் உனக்கு எத்தனை தாக்கம் இருக்கும்?

எல்லாரும் போடும் கணக்குகளுக்கு தனித்தனி விடை அறிவிக்கும் கணித மாமேதை கடவுள். மனிதராய் பிறக்கும் எல்லாருக்கும் யவ்வனமான, ஆரோக்கியமான, பொருளாதார ஏற்ற தாழ்வற்ற நூறாண்டு ஆயுள் வழங்க வேண்டியதுதானே கடவுள்? அப்படிபட்ட உலகை படைக்க கடவுளுக்கு சக்தி இல்லையா? முந்தைய பிறவியின் பாவ புண்ணியத்தை நேர் செய்ய வந்து போனாளோ உன் மனைவி? இனி, உன் மகனாய் பிறந்த ஒரு வயது குழந்தைக்கு பிறவிகள் இல்லாமல் இறைவனோடு இணைந்து போனானோ? மரணத்திற்கு நாம் சொல்லும் பொருள் கடவுளின் அகராதியில் இல்லையோ? தான் நேசிப்பவர்களை கொடுக்காமல், ஆசிர்வதிக்கிறான் இறைவன்; தான் வெறுப்பவர்களை கொடுத்து தண்டிக்கிறான். அப்படித்தானோ உன் கதை? வெட்டுக் குத்தில்லாமல் நிறைவேறிய காதல் திருமணம், அரை நூற்றாண்டு தொடர்வது ஆண்டவன் பார்முலாவிற்கு எதிரானதோ?

அழகான மனைவி இருக்க, வெளியில், நான்கு பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்கிறான் கணவன். கள்ளக் காதலியை மகிழ்விக்க, மனைவியை கொல்ல வாடகைக் கொலையாளி அமர்த்துகின்றான் கணவன். கள்ளக் காதலுக்கு தொல்லையாக இருக்கும் குழந்தையை, விஷம் வைத்துக் கொல்கிறான்(ள்) கணவன் - மனைவி. இப்படி, ஆயிரம் துரோக முடிச்சுகள் ஆண் - பெண் உறவுகளில் காணப்படுகின்றன. நீ இந்த முடிச்சுகளுக்கு விதிவிலக்கான ஆண்.

உன் திருமண வாழ்க்கை, இரண்டே ஆண்டுகள் நீடித்திருக்கிறது. மனைவி - மகன் மரணத்திற்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியனாய் உழன்று வருகிறாய். உனக்கு தற்கொலை எண்ணம் அறவே இல்லை என்பது பெரும் ஆறுதல். இன்னும், 41 - 45 ஆண்டுகள் நீ உயிர் வாழப் போவதாய் வைத்துக் கொள். மறுமணம் இல்லாது எப்படி காலத்தை ஓட்டுவாய்? பத்து வருடங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்துவிட்டு, 40 வயதுக்கு மேல் திருமண ஆசை வந்தால் என்ன செய்வாய்? உன் மறுமணம், உன் காதல் மனைவிக்கு நீ செய்யும் துரோகமல்ல. மாற்றாக, உன் திருமணத்தில் அவளது ஆத்மா நிம்மதி பெருமூச்சு விடும்.

தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம். அதை, நீ செயற்கையாக கட்டுப்படுத்த ஒரு கட்டத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். விளைவுகள் உன்னையும், உன் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.

பிரவீணா மரணத்திற்கு பின், பூர்ணிமா ஜெயராமை மணந்து, வாழ்க்கையை பாக்யராஜ் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லையா? சரண்யா, சாந்தனு என்று, இரு மணி, மணியான குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லையா?

ஈ.வெ.ரா., தள்ளாத வயதில், மணி அம்மையாரை மணந்து கொள்ளவில்லையா? நபிகள் நாயகம், கதீஜா அம்மையார் மரணத்திற்கு பிறகு, மறுமணம் செய்து கொள்ளவில்லையா?

மறுமண தேவை ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது, தகுதிக்கு தகுதி, மதத்திற்கு மதம் மாறுபடும். உன்னைப் பொறுத்தவரைக்கும், உனக்கு மறுமணம், நூறு சதவீதம் தேவை.

குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என நீ நினைப்பது, "பெனடிக்'கான விஷயம். நீயும் சிரமப்பட்டு, தத்து குழந்தையையும் சிரமப்படுத்துவாய். உன்னையையே கவனிக்க ஆளில்லாத போது, உன் தத்துக் குழந்தையை யார் கவனிப்பது? கல்யாணமாகி, 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, செயற்கை கருத்தரிப்பும் சாத்தியம் இல்லை, ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என ஒரு தம்பதி சொல்வது வேறு; நீ சொல்வது வேறு.

மறுமணம் செய்து கொண்டால், வரும் மனைவிக்கு உண்மையான கணவனாக இருக்க முடியாது என கருதுகிறாய்; இது, உண்மை அல்ல. புது மனமும், மனமும் இணைந்து விட்டால், புது உடலும், உடலும் இணைந்து விட்டால், கணவன் மனைவிக்குள் உண்மை பூத்துக் குலுங்கும்.

மனித எண்ணங்கள் நிலையானவை அல்ல. மனித மனம் சீதோஷ்ண நிலை போன்று நிமிடத்திற்கு, நிமிடம் மாறக் கூடியது. இன்று, உனக்கு வறண்ட வானிலை; நாளை, ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்யும்.

காமத்தை அடக்கினால், அது உன் கேரியரை பாதிக்கும்; நாளடையில் காம விகாரங்கள் பெருகும்.

விழித்துக் கொள்.

படித்த, பணிக்கு செல்லும் விதவனை புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெற்ற, 25 வயது பெண்ணை, ஆற அமர தீர விசாரித்து, திருமணம் செய்து கொள் மகனே.

அடுத்தடுத்து உனக்கு, இரு குழந்தைகள் பிறக்கும். அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்!

Friday, November 11, 2011

போதி தர்மர் பற்றி சீனத் திரைப்படம்! (வீடியோ)

"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

நேற்று டெல்லியில் மட்டும் 20 ஆயிரம் திருமணங்கள்

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தினம் என 11.11.11 ஆம் தேதியைக் கருதியதாலும், பெரும்பாலான ஜோதிடர்களும் இன்றைய தினத்தை மிகவும் சாதகமான நாள் என்று கூறியதாலும், டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடந்தன.



இந்தத் திருமணங்களுக்கு டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வந்ததால், டெல்லி நகரமே இன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

பெரும்பாலான மக்கள் முன்னமேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பற்றாக்குறை காரணமாக, ஹரித்வார், ரிஷிகேஷ், குருக்ஷேத்ரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
திருமணம்தான் என்றில்லை. இந்த தினத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட நிறையப் பேர் ஆர்வம் காட்டினர்.

தில்லியின் ஒரு தனியார் மருத்துவமனை அதிகாரி கூறும்போது, இன்று ஒரே நாளில் எங்கள் மருத்துவமனையில் 50 குழந்தைகள் பிறந்திருக்கும் என்றார்.

ஆனால், தில்லியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் விவேக் சோப்ரா இதை சுத்த முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். இன்றைய தினத்தில் கோள்களில் இயக்கத்தில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது ஒரு சாதகமான நாள் என்றெல்லாம் கூறி இவ்வாறு முட்டாள்தனமான செயல்களில் மக்கள் ஈடுபட்டுள்ளது மிகத் தவறு.

இந்த தேதி, கூறுவதற்கு கவர்ச்சிகரமாக இருப்பதால் வேண்டுமானால் இவ்வாறு மக்கள் திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினர் என்று சொல்லுங்கள். ஆனால், ஜோதிடப்படி சாதகமான நாள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று வாதிட்டார்.