என் வயது 57. எனக்கு, மூன்று திருமணங்கள். முதல் மனைவி இறந்து விட்டாள்; மறுமணம் புரிந்து கொண்டேன்; அவளும் இறந்து விட்டாள். மீண்டும், பலரின் வற்புறுத்தலால் மணம் புரிந்து கொண்டேன். மூன்றாவது மனைவி, ஏற்கனவே மணமாகி, கணவனை பிரிந்து, அதாவது, ஊர் பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெற்று, வாழ்ந்து வந்தவர். அவருக்கு, 15 வயதில் மணமாகி, மூன்று மாதத்திற்கு பின், விவாகரத்து பெற்றுக் கொண்டதாக கூறினர்.
எனக்கும், அவருக்கும் கிட்டதட்ட, இருபது வருட வயது வித்தியாசம். என்னிடம் சேர்ந்த போது, "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் நன்றாக அனுசரித்து வாழ்...' என்று கூறி, மனைவியாக ஏற்று, அதிலிருந்து வழுவாமல், என் கடமைகளில் நியாயமாக நடந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பிறந்து, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்; இது, இன்றைய நிலை.
இதனிடையில், என் மூன்றாவது மனைவிக்கு என்ன நினைப்பு வந்ததோ, ஒரு காதலனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உல்லாசமாக இருந்ததாக, 2002ல், என்னிடமே கூறினாள். ஏதோ தவறாக நடந்து கொண்டாள் என நினைத்து, "இனி, அவ்வாறு தவறான வழியில் செல்லாதே...' என எச்சரித்து, தாம்பத்யத்துக்காகத்தான் இவ்வாறு செய்தாளோ என்று நினைத்து, இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்து வந்தேன்.
பின், 2007லிருந்து, மீண்டும், பக்கத்து நிலத்துக்காரருடன் என் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக, அந்த ஆளின் மனைவியே என்னிடம் கூறினார். அந்த ஆள், எனக்கு ஊர் முறைப்படி மருமகன் ஆகிறான்; அதனால், தவறாக சொல்கின்றனர் என்று நினைத்து, அவர்கள் நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தேன்.
ஜனவரி 2010ல், ஒருநாள், அந்த ஆள் ஓட்டலிலிருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தை, வேறு ஒருவன் மூலம் என் மனைவிக்கு கொடுத்தனுப்பி, அதை, என் மனைவி வாங்கி உண்பது தெரிந்த பின், அவன் மனைவி சொன்னது உண்மை என, நம்ப வேண்டியதாகி விட்டது.
ஊருக்கே இவர்களின் நடத்தை தெரிந்துள்ளது. அதனால், பலமுறை சண்டை வந்து, சில தடவை அடித்து விட்டேன். இருமுறை, என் மனைவி அவளின் தாய் வீட்டுக்கும் சென்று விட்டாள்.
அவ்வாறு சென்ற ஒரு தடவை, என் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, என்னை அழைத்து எச்சரித்து, என்னிடம் நல்லபடி வைத்து வாழ்வதாக, எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது, என் வீட்டில் இருந்து, என்னை சிறிதும் மதிக்காமல், அவள் இஷ்டத்திற்கே நடந்து கொள்கிறாள்.
நான் ஒரு தடவை, 12 நாள் வீட்டை விட்டு போய் விட்டேன்; பிறகு வந்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளத்தான் போனேன்; என்னவோ திரும்பி விட்டேன். சில மாதங்களாகவே நாங்கள் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்கு பிறந்த மகள், பெரியவளான போது, என்னை அழைக்காமல், என் அபிப்பிராயத்தை கூட கேட்காமல், என் உறவினர்கள் யாருமே இல்லாமல், அவளுடைய தாய் வீட்டார், ஐந்தாறு பேரை மட்டும் வைத்து, செய்து முடித்தாள்; அன்று முதல், நான் வீட்டில் சாப்பிடுவதில்லை.
நான் ஓய்வு பெற்ற (வி.ஆர்.எஸ்.,) மின்வாரிய அலுவலர்; பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு, நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள். மூன்று பெண், ஒரு ஆணுக்கு திருமணமாகி விட்டது; இவளின் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இருந்த நிலத்தை இவளின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டேன். இந்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை கூறவும்.
உங்கள் இரு மனைவிகள் எதனால் இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயதென்ன, அவர்களுடனான உங்கள் தாம்பத்யம் எப்படி இருந்தது, இறந்த இரு மனைவிகளும் அக்கா, தங்கைகளா என்ற தகவல்கள், உங்கள் கடிதத்தில் இல்லை.
உங்களுக்கு குடி, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சீவல் போடும் பழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. மின்வாரியப் பணியிலிருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றீர்கள், பணியிடத்தில் எதுவும் பிரச்னையா என்பதும் புரியவில்லை.
உங்கள் மூன்றாவது மனைவி தன்முனைப்புள்ளவர், பிடிவாதக்காரர், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வர காத்திராதவர் என யூகிக்கிறேன்.
உங்கள் மூன்றாவது திருமணமே, அவசியமில்லாதது. கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்றால், 35 - 40 வயது விதவைப் பெண்ணை நீங்கள் மணந்திருக்க வேண்டும்.
உங்கள் முதலிரவில், "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் பழகி, நன்கு அனுசரித்து வாழ்...' என்று கூறியிக்கிறீர்கள். இது, பத்தினிகளை சீண்டும் வார்த்தை; மறைமுகமாக உசுப்பிவிடும் வார்த்தை.
இந்த வார்த்தைகளில் இருந்து, பேச்சில் நீங்கள் கண்ணியம் காக்காதவர், தணிக்கை பண்ணாமல், வார்த்தைகளை அள்ளி கொட்டுபவர் என்பது புலனாகிறது. திருமணமான முதல் ஏழு வருடங்கள், ஒழுக்கமாக இருந்த உங்கள் மனைவி, எதனால் தடம் புரண்டார் என்பதை பார்ப்போம்...
1. உங்களிரு மனைவிகளின் மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மம் பற்றி ஊரார், உங்கள் உறவினர், உங்கள் மூன்றாவது மனைவியிடம் கோள் மூட்டியிருக்கக் கூடும். அதனால், உங்களது மனைவிக்கு, உங்கள் மீதிருந்த பயமும், மரியாதையும் காணாமல் போயிருக்கும்.
2. திருமணமான ஏழு வருடங்களில், உங்கள் பலம், பலவீனத்தை உங்கள் மனைவி முழுமையாக கணித்திருப்பார். தான் தவறு செய்தால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்ற அசட்டுத் துணிச்சல் அவருக்கு வந்திருக்கும். திருமண பந்தம் மீறிய தன் முதல் தொடர்பை, 2002ல் உங்களிடம் சொல்லி, உங்களை ஆழம் பார்த்திருக்கிறார். நீங்களோ, நெருக்கமான தாம்பத்யத்தால் அவளை திருப்திபடுத்த பார்த்தீர்கள்; அது, தவறான அணுகுமுறை. உங்களது செயல்பாடுகள் பற்றி சரியான கணிப்பு உங்கள் மனைவியிடம்தான் இருக்கும். அறுபது வயது ஆண், இருபது வயது பெண்ணை தாம்பத்யத்தால் திருப்திபடுத்தினால் போதுமா? தோற்ற பொருத்தம், இதர, இதர தேவைப்படும். சமுதாய விமர்சனம் பாசிட்டிவ்வாக தேவை.
3. உங்கள் மனைவிக்கு, யாரோ ஒரு ஆண், விபரமாக செயல்பட சொல்லித் தருகிறார். அதனால்தான், உங்கள் மனைவி, உங்கள் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, கண்டிக்க வைத்திருக்கிறாள்.
4.என்ன தவறு செய்தாலும், அவள், உங்களுக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறீர்கள்; அதனால்தான், உங்கள் செயல்பாடுகள் ஆக்கரீதியாய் இல்லை. ஒரு தடவை தற்கொலை செய்ய, 12 நாள் வீட்டை விட்டு சென்று விட்டீர்கள். இருந்த நிலத்தை மூன்றாவது மனைவியின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டீர்கள். மனைவி சமைத்த சமையலை சாப்பிடுவதில்லை. சில, பல மாதங்களாக நீங்கள் மனைவியுடன் பேசுவதில்லை. நீங்கள் இல்லாமல் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை, தன் தாய் வீட்டிலேயே நடத்தி முடித்து விட்டாள் உங்கள் மனைவி.
5. உங்களுக்கும், உங்களிரு மனைவிகள் மூலம் பெற்ற குழந்தைகளுக்கும், சரியான தகவல் தொடர்பு இருக்காது என, நம்புகிறேன்.
6. ஊர் பஞ்சாயத்து மூலம், உங்களின் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்து விடுங்கள். பென்ஷன் பணத்தை வைத்து, மீதி ஆயுளை தன்னந்தனியனாக கழியுங்கள்.
7. பொருந்தாத திருமணங்கள் நிரந்தர தலைவலியை பரிசளிக்கும் என்பது இக்கேள்வி - பதில் மூலம் அறியப்படும் நீதி.
|
No comments:
Post a Comment