Thursday, March 3, 2011

தமிழகத்தில் மட்டும் பாராபட்சத்துடன் கூடிய மின் விநியோகம்..


தமிழகம் இந்த சில வருஷங்களுக்காக கடுமையான மின் தட்டுப்பாட்டினால், கட்டாய மின் வெட்டுக்கு ஆளாகி உள்ளது. இதில் தமிழகம் என்பது சென்னையை தவிர்த்த ஏனைய பகுதிகள். சென்னை மாநகரம், கடுமையான இந்த மின்வெட்டிலும், மின் தடைக்கு பலியாகாமல் தப்பி பிழைத்து வருகிறது. மின்வெட்டு விஷயத்தில் அரசு,  சென்னை தவிர்த்த ஏனைய பகுதிகளை மாற்றா தாய் மனப்போக்குடன் கையாள்கிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் "சென்னைக்கு ஒரு நியாயம்... பிறபகுதிகளுக்கு ஒரு நியாயமா" என்கிற முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தினமலர் எழுதிய  கட்டுரை கீழே.

மறுபடியும் துவங்கி விட்டது, மின் தடை பிரச்னை. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில், சென்னை தவிர்த்த பிற பகுதிகளில், வழக்கமான இரண்டு மணி நேர மின் தடையைத் தாண்டி, மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை, மின்தடை ஏற்படுகிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில், ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கூட, மின்சார வினியோகம் இருப்பதில்லை.

நீர் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டதால்,
மின்சார வினியோகத்தைக் குறைக்க வேண்டியிருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது. இதை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும், மின் தடையை அமல்படுத்துவதில் காட்டப்படும் பாரபட்சம், தலைநகர் தவிர்த்த தமிழக மக்களை, கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.


தமிழகத்தின் மொத்த மின் தேவையான, 11 ஆயிரம் மெகா வாட்
மின்சாரத்தில், சென்னைக்கு, இரண்டாயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுவதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், சென்னை மண்டலத்துக்குரிய பகுதிகளில் மட்டும் மின்தடை அமல்படுத்தப்படுவதே இல்லை.

அதற்குப் பதிலாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பல மணி நேரம் கூடுதலாக மின்சாரம் பறிக்கப்படுகிறது.தலைநகரம், பெருநகரம் என்பதால் பாலம், சாலைகள், சுரங்கப்பாதை உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளில், சென்னைக்கு அதிக ஒதுக்கீடு தருவதில் பொது மக்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. பாதிப்பு என்று வரும்போது, தலைநகரத்திலுள்ளவர்களும் அதை பகிர்ந்து கொள்வதே நியாயமான விஷயம்.

மின் உற்பத்தி குறையும்போது, மின்தடையை சென்னையிலும் அமல்படுத்த வேண்டியது மின் வாரியத்தின் கடமை. ஆனால், இரண்டு ஆண்டுக்கு முன், மின் தட்டுப்பாடு உச்சத்துக்குச் சென்றபோதும், சென்னையில் மின்சாரம் தடைபடவே இல்லை; இப்போதும் அங்கு மின்தடை அறவே இல்லை.

சென்னையை விட, வெயில் கொளுத்தும் வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் படும் அவதிகள் அதிகம். கோவை, திருப்பூர் போன்ற தொழில் மாவட்டங்களில் மின்தடையால் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மொத்தம் இரண்டு ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சென்னையில், ஒரே ஒரு மணி
நேரம் மின் தடையை ஏற்படுத்தினால், தமிழகத்தின் பிற பகுதிகள் முழுவதற்கும் இரண்டு மணி நேரத்துக்கு மின்தடையைக் குறைக்க முடியுமென்று அறுதியிட்டுச் சொல்கின்றனர் மின் வாரியப் பொறியாளர்கள்.

மின் உற்பத்திக்கேற்ப மாநிலம் முழுவதற்கும் வினியோகத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சிறந்தது என்பது இவர்களின் கருத்து. ஆனால், இதை ஆட்சியாளர்களுக்குச் சொல்லும் தைரியம், அதிகாரிகளிடம் இல்லை;
அப்படியே சொன்னாலும், சென்னை மக்களை விட்டுக் கொடுக்க ஆட்சியாளர்கள் தயாராக இருப்பார்களா என்பதும் கேள்வியே.

இத்தனைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வசூலிக்கப்படும் அதே மின் கட்டணம் தான், சென்னை நகரிலும் வசூலிக்கப்படுகிறது. முன்பாவது, மெட்ரோபாலிடன் என்பதைக் குறிப்பிட்டு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம்,
சென்னையில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எதிர்த்த காரணத்தால், அதுவும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்திற்கான மின் கட்டணம் தான், இப்போது சென்னைக்கும் வசூலிக்கப்படுகிறது.அப்படியிருக்கையில், சென்னைக்கு மட்டும் விதிவிலக்கு ஏன் என்பது தான், தமிழகத்தின் பிற பகுதி மக்களின் ஆதங்கம். தேர்தலைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு மட்டும் மின் தடையில் விதிவிலக்குக் கொடுப்பது என்றால், மற்ற பகுதி மக்களின் ஆதரவு இந்த அரசுக்குத் தேவையில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு, தமிழக அரசு தான் தனது நடவடிக்கையின் மூலமாக பதில் சொல்ல வேண்டும்.


எப்படியும் தேர்தலின் போது, வெளி மாநிலத்திலிருந்து மின்சாரத்தை வாங்கியாவது மின்தடை இல்லாமல் செய்து விடலாமென அரசு திட்டமிட்டிருக்கும். அப்படிச் செய்தாலும் மின் தடையை மக்கள் மறந்து விடலாம்; ஆனால், தங்களுக்கு மட்டும் காட்டப்பட்ட ஓரவஞ்சனையை மக்கள் மறந்து விடுவார்களா என்பது தெரியவில்லை. .

No comments:

Post a Comment