Thursday, March 3, 2011

முதல் காதல் அனுபவம்


மொதமொதல்லா நம்ம வூட்டுக்குள்ளப் பூந்து ஒரு கமெண்ட் அடிச்சிட்டாரே மனுஷன்னு பார்த்தா.. கிடா சாப்பிட வாடான்னு கூப்பிட்டு கைல தீச்சட்டியைக் கொடுத்த மாதிரி ஏதோ weird-ஆமே.. அதைத் தூக்கிக் குடுத்துட்டாரே இந்த மனுஷன்..


இப்படி மாட்டி விட்டுட்டீங்களே சென்ஷி.. ஏதோ சாப்பிட்டியா? தூங்கினியான்னு கேக்குற மாதிரி "உங்க முதல் காதல் எது?"ன்னு கேட்டுப்புட்டீகளே..? சொல்லக்கூடிய விஷயமா இல்ல.. நினைக்கக்கூடிய விஷயமா அது? ம்.. சரி.. சொல்லிப்புடறேன்.. கேட்டுக்குங்க..

ஏற்கெனவே 'ஆட்டோகிராப்'ன்னு ஒரு படம் வந்தது பாருங்க.. அந்தப் படத்தைப் பார்த்துப்புட்டு நம்ம பய மக்கா அல்லாரும் அஞ்சாறு நாளைக்கு தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்திருக்கானுக.. அதுல நானும் ஒருத்தன்.. இப்ப அதையே கிளறச் சொல்றீங்களே சாமி.. சரி.. 'மனசுல இருக்குறதை வெளில கொட்டிட்டா பாரம் குறையும்'னு எங்க ஆயி அப்பப்ப சொல்லும்.. சொல்றேன்.. கேளுங்க.. ஆனா யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. ஏன்னா எனக்கு எதையும் மூடி மறைச்சு எழுதத் தெரியாது.. எல்லாம் ஸ்ட்ரெயிட்டுத்தான்..

அப்ப நான் திண்டுக்கல்ல செயிண்ட் மேரீஸ் ஸ்கூல்ல பத்தாப்பு படிச்சிருட்டிருந்தேனுங்க.. படிப்புல நம்ம எப்பவும் ஒண்ணுல இருந்து அஞ்சு ரேங்க்குக்குள் வந்திருவேங்க.. ஆனா பாருங்க.. இந்த இங்கிலீஷ் சனியனும், கணக்கு பிசாசும் நம்ம மண்டைல ஏறவே மாட்டேன்றுச்சு.. அப்புறம் எப்படி அஞ்சுக்குள்ளன்னு யோசிக்குறீங்களா? மத்த மூணுலேயும் நம்ம எப்பவுமே 90க்கு மேலதான் அப்பு..

அப்பத்தான் 'பைனல் எக்ஸாம் வரப் போகுது'ன்னு 'விடாது கருப்பு' மாதிரி வீட்ல பயமுறுத்துக்கிட்டே இருந்தானுங்க.. சரி நாம அடுத்த வருஷமும் பத்தாம்கிளாஸ்தான் நினைச்சுக்கிட்டேன். திடீர்ன்னு எங்கண்ணன் என்ன பண்ணாரு.. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல மெங்கிள்ஸ் ரோட்டுல 'மெக்காலே'ன்னு ஒரு வாத்தியார் இருந்தார். அவர் அப்ப டட்லி ஸ்கூல்ல வாத்தியார். அவர்கிட்ட கொண்டு போய் என்னை நிறுத்தி, "இந்தப் பய இங்கிலீஷை கண்டா பயந்து ஓடுறான் ஸார்.. கணக்கைத் தொடவே மாட்டேங்குறான் ஸார்"ன்னு வண்டி வண்டியா கம்ப்ளையிண்ட் பண்ணிட்டார்.. எனக்கு, "என்னடா எழவு இது? நம்ம ஸ்கூல்ல சொல்லித் தர்றதே மண்டைல ஏறலை.. இவர் வேற ஸ்கூல் வாத்தியார்.. இவர் என்ன சொல்லித் தரப் போறாரு?"ன்னு நினைச்சுக்கிட்டு முதல் நாள் டியூஷனுக்குப் போனேங்க..

அங்கதாங்க எனக்கு ஆப்பு.. உள்ள நுழைஞ்சா தலையே சுத்துது.. கண்ணை சிமிட்டிக்கிட்டே இருந்துச்சு. என்னன்னா..? உள்ளாற ஒரு பத்து, பன்னெண்டு பாவாடை, தாவணிக உக்காந்திருந்துச்சுக.. அம்புட்டுத்தான்.. அப்படியே சுவரோட சுவரா போய் ஒட்டிக்கிட்டோம்ல..

அதுல பாருங்க ஒரு விஷயம்.. அந்த மெக்காலே ஸார் ரொம்ப தங்கமான மனுஷன்.. அடிக்கடி இடைல இடைல ஜோக்கடிச்சு கலகலப்பாக்கிருவாரு.. டியூஷனும் ஆரம்பிச்சிருச்சுங்க. ஆனா நமக்கு வேற கணக்கு ஆரம்பிச்சிருக்குங்க. அதாங்க லுக் விடுறது.. அதுல பாருங்க.. நம்மளை கிறுக்குப் பிடிக்க வைக்கணும்னா கணக்கும், இங்கிலீஷ¤ம் வேணாம்ங்க.. லேசா ஒரு கண் பார்வை போதும்ங்க.. அதேதான் அன்னைக்கும் நடந்துச்சு.. செத்தேன் போங்க..

ராத்திரி வீட்ல எங்கக்கா தட்டுல என்னத்தையோ வைச்சுது.. என்னத்தையோ ஊத்துச்சு.. மோட்டு வளையை பார்த்துட்டு நானும் என்னத்தையோ தின்னுத் தொலைச்சிட்டு வாயைக்கூடத் தொடைக்காம படுத்துட்டேன்.. எங்க தூக்கம் வர்றது? அந்த முகம்.. லேசான உதட்டுச் சுழிப்பு.. குறுகுறுன்னு ஓரக்கண்ணுல பார்க்குற பார்வை.. (ஐயையோ சென்ஷி.. இன்னிக்குத் தூங்க முடியாதே..) முடியல அண்ணாத்தே..

மறுநாள்தான் பேர் என்ன? குலம் என்ன? கோத்திரம் என்னன்னு லேசுபாசா விசாரிக்க ஆரம்பிச்சேன்.. பேரு சாந்தியாம்.. ஆஹா.. அமைதியான பொண்ணுக்கு ஏத்த அழகான பேராச்சேன்னு மனசு குதிக்க ஆரம்பிச்சிருச்சு.. இந்தப் பக்கம் நம்ம மெக்காலே ஸார் வாங்குற பீஸ¤க்கு வஞ்சகம் இல்லாம பாடம் சொல்லிக் கொடுத்தாரு.. ஆனா நாம கேக்கணுமே.. நாமதான் ஓணானுக்கே தண்ணி காட்டுறவனுகளாச்சே..

லேசா பேச ஆரம்பிச்சேன்.. ஆரம்பிச்சோம்.. நோட்டு வாங்கி எழுதுற மாதிரி கையெழுத்தைப் பார்த்து 'அடியாத்தீ'ன்னு மூக்குல விரல் வைச்சு என்னை நிமிர்ந்து பார்த்தப்ப அப்படியே அப்துல்கலாம் ரேஞ்சுக்கு போயிட்டேன் போங்க.. அடுத்த நாள் அவுக நோட்டை நான் வாங்கி அழகா எழுதிக் கொடுத்தேன் பாருங்க.. அவுக பார்த்த பார்வையும் உதடு குவிச்சு சொன்ன 'தேங்க்ஸ¤ம்' அம்சமாத்தான் இருந்துச்சு..அடுத்த நாள் எங்கண்ணன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி ரெண்டு ரூபா வாங்கி அதுல எட்டணாவுக்கு கடலை மிட்டாய் வாங்கி டியூஷனுக்கு இடைல எல்லாருக்கும் தானதர்மம் கொடுத்து 'கர்ணன்'னு மெக்காலே ஸார்கிட்ட பேர் எடுத்தேன்.. அப்ப நம்ம மயிலுக்கு என் கையால கொடுத்து அதை அது வாங்கி லேசா ஒரு 'பார்வை' பார்த்து வாயில் போட்டது பாருங்க.. இப்பவும் நான் பிச்சைக்காரன்களைப் பார்த்தா ஒத்த ரூபா.. ரெண்டு ரூபான்னு போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். எவனும் அப்படியொரு தேங்க்ஸ் சொல்லலீங்க..

எக்ஸாம் வேற பக்கத்துல நெருங்கிருச்சு.. நம்ம பசங்க நம்மளை கரெக்ட்டா புடிச்சிட்டானுங்க. "டேய்.. வேணாம் விட்ரு.. அவுங்க அப்பன் ஒரு மாதிரி ஆளு.. பார்த்து நடந்துக்க.."ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்.. அதெல்லாம் நம்ம மண்டைல ஏறுமா.. ம்ஹ¤ம்.. அடிபடப் போறன்னாங்களா.. அடிபடாம இருக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சேன். நேரா அவுங்க வீட்டுக்கே போயிட்டா என்னன்னு ஒரு கிறுக்கு..

போயிட்டேன்ல.. அடுத்த நாள்.. அது என்னன்னா.. அப்பத்தான் 'வைதேகி காத்திருந்தாள்' படம் ரிலீஸான சமயம்.. மெக்காலே ஸார் வீட்ல டேப் ரிக்கார்டர் இருந்துச்சு. சமயத்துல அவர் வர்றதுக்கு லேட்டாயிருச்சுன்னா அவரோட வூட்டுக்காரம்மா (இவுகளும் அதே டட்லி ஸ்கூல்ல டீச்சர்தான்) அந்த கேஸட்டை போட்டு பாட்டு போடுவாங்க.. அதைக் கேட்டுக்கிட்டு ஸார் வர்றவரைக்கும் அமைதியா இருப்போம்.. அதுல பாருங்க.. அந்த 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு'ன்ற பாட்டு அப்படியே என்னை உருக்கிருச்சு.. அது அப்படியே என்னை நினைச்சுத்தான் ஆர்.சுந்தர்ராஜன், இளையராஜாகிட்ட சொல்லி பாட்டு வாங்கிருப்பாரோன்னு நினைப்பு..

அந்த கேஸட் வேணும்னு நம்ம மயிலு, மெக்காலே ஸார்கிட்ட ஒரு நாள் கேட்டுச்சு. "வேற ரிக்கார்ட் போட்டு தர்றேம்மா"ன்னாரு ஸார்.. சரின்னு தலையாட்டிக்கிட்டு கிளம்புச்சா.. நமக்கு கோபம்னா கோபம்.. 'என்ன இந்தாளு.. கேக்குறது யாரு? நம்ம மயிலு.. கேட்டு இல்லைன்னு சொல்லலாமா?' அப்படீன்னுட்டு பட்டுன்னு அந்த கேஸட்டை சுட்டுட்டேன்.. முதல் திருட்டு. (ம்ஹ¤ம்.. லவ் மேட்டர் என்னல்லாம் பாடு படுத்துச்சு பாருங்க)

நம்ம மயிலு அவுக வீட்டுக்குப் போயிட்டிருந்தாக.. நானும் பின்னாடியே அவுகளுக்குத் தெரியாம போயிட்டேன். அவுக வீடும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இடது பக்கம் ஒரு சின்ன சந்துக்குள்ள இருந்துச்சு. அவுக உள்ள போயி பத்து நிமிஷம் கழிச்சு, நானும் வீட்டு வாசல்ல போய் நின்னேனா.. ஷாக்குன்னா ஷாக்.. அப்படியொரு ஷாக்..

ஆனாலும் வரவேற்பு பலம்ல.. "வாங்க.. வாங்க.."ன்னு கூப்பிட்டு அப்படியொரு பாசத்தைக் கொட்டிட்டாகல்லே.. "இந்தப் பக்கமா வந்தேன். நீங்க உள்ள நுழைஞ்சதை பார்த்தேன்.. உங்க வீடா இருக்குமோன்னு சந்தேகம். அதான் வந்தேன்ணேன்(எப்படி சமாளிப்பு)".. "காபி குடிங்க"ன்னாங்க.. வேணாம்னுட்டு.. அப்படியே நைஸா நான் சுட்டுட்டு வந்த கேஸட்டை கொடுத்தேன். பார்த்தவுடனே அவுக முகத்துல இருந்த சந்தோஷம் பாருங்க.. அப்படியே செத்துட்டேன் போங்க. எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு "அம்மா கோட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்காக.. வந்தவுடனே நாளைக்குப் பணம் வாங்கிட்டு வர்றேன்"னாங்க.. பணத்துக்கா இவ்ளோ அலப்பறை.. "இல்லங்க.. வேணாங்க.. என் பிரெண்ட் மூணு கேஸட் வைச்சிருந்தான். எனக்கு ரெண்டு கொடுத்தான். அதுல ஒண்ணுதான் இது.."ன்னு சொல்லி நம்ப வைச்சேன்.

இப்படியே ஆரம்பிச்சுதுங்க.. நம்ம ஒன் சைடு லவ்வு.. இடைல ஒரு நாள் அவுகளை அப்படியே படமா வரைஞ்சு அவுக நோட்ல வைச்சுக் கொடுத்தேன். மறுநாள் பார்த்தேன். ஏதாவது பலன் கிடைக்குமான்னு.. ஒண்ணுமே சொல்லாம.. கிளாஸ் முடிஞ்சப்புறம்.. வெளில வரும்போது ரகசியமா "படம் பார்த்தேன்.. நல்லாயிருந்துச்சு. தேங்க்ஸ்.. என் வீட்ல ஒட்டி வைச்சிருக்கேன்.."னு சொல்லிட்டு போச்சா.. அம்புட்டுத்தான்.. அன்னிக்கும் தூக்கமில்லாம போச்சுங்க..

என் பிரெண்ட்ஸ்லாம் "சீக்கிரம் லெட்டரை குடுறா.. லெட்டரை குடுறான்"னு அனத்துனாங்க.. என்ன எழுதுறது? எப்படி எழுதுறதுன்னு தெரியலை.. எப்படியோ நாலு வரில ஒரு கடுதாசியை எழுதி வைச்சுப்புட்டு "நாளைக்கு குடுக்கலாம்.. நாளன்னிக்கு கொடுக்கலாம்"னு அப்படியே பொத்தி பொத்தி வைச்சிருந்தேனுக.. அப்படியே டைமும் ஓடிருச்சு. டெய்லி சாயந்தரம் அவுககூட அவுங்க வீடுவரைக்கும் போய் பத்திரமா விட்டுட்டு அப்புறம்தாங்க நம்ம வீடு இருக்குற குமரன்திருநகருக்கு போவேன். இப்படியொரு செக்யூரிட்டி வேலை..

எக்ஸாம் நெருங்கின உடனே மெக்காலே ஸார் எங்களுக்கெல்லாம் வீட்லயே ஒரு பார்ட்டி வைச்சு எங்களை உற்சாகப்படுத்தி பேசினார். சரி.. இன்னிக்காச்சும் சொல்லிரலாம்னு சொல்லி என் பேண்ட் பாக்கெட்ல இருந்த லெட்டரை எடுத்து வசதியா இருக்கும்னு நினைச்சு சட்டைப் பாக்கெட்ல வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.. சனியன் புடிச்ச அன்னிக்குப் பார்த்து அவளோட அண்ணன்காரன் தங்கச்சியைக் கூப்பிடுறதுக்காக நேராவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே "ஏதோ வேலை இருக்கு.. சீக்கிரம் போகணும். வரேன் ஸார்"ன்னு சொல்லிட்டுப் போயிட்டா..

நானும் விடலை.. "எனக்கும் வேலை இருக்கு ஸார்"ன்னு சொல்லிட்டு கிளம்பி வாசலுக்கு வந்தா... மச்சான்காரன் பைக்ல கூட்டிக்கிட்டுப் போறான். நம்மளோ நடராஜா பஸ் சர்வீஸ்.. இதுல எங்க போய் ஒட்டுறது? வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. போங்க..

அன்னிக்கு சாயந்தரமே அவுக வீட்டுக்கு நான் போக.. அவுக வீட்ல இருந்த பெரிசுக.. ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ள "எக்ஸாமுக்கு படிக்க வேணாமா? நீ உள்ள போய் படிம்மா.. நீ போப்பா.."ன்னு கழுத்தைப் புடிச்சுத் தள்ளாத குறையாத் தள்ளிட்டானுக.. வெறுத்தே போச்சுங்க.. இதுல எங்க வூட்ல வேற ஏதோ நான் படிச்சு கலெக்டராகப் போறேனாக்கும் என்ற நினைப்பில் "படி.. படி.. வீட்டை விட்டு வெளில போகக்கூடாது. போன.. கால் இருக்காது"ன்னு தடா, பொடா உத்தரவெல்லாம் போட்டுக் கொன்னுட்டானுக..

ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சு மயில பார்க்க அவசரம் அவசரமா அவுக வீட்டுக்குப் போறேன்.. வூடு பூட்டிருக்கு. "அவுக எங்கயோ வீடு மாறிப் போயிட்டாங்க"ன்னு அக்கம்பக்கத்துல சொன்னாங்க.. என்னடா இது கருமாந்திரம்..? எப்படியும் கண்டுபிடிச்சிருவோம்னு நினைச்சு திண்டுக்கல் முழுக்க அலையோ அலைன்னு அலைஞ்சு எனக்கு வெறுத்துப் போச்சு..

வருஷம் ஓடிருச்சுங்க.. ஒரு அஞ்சாறு வருஷமாயிருக்கும். திண்டுக்கல் எம்.வி.எம். காலேஜ்ல படிச்ச என்னோட சொந்தக்கார அக்கா ஒருத்தங்க சர்டிபிகேட் வாங்க காலேஜுக்கு போனாங்க. நானும் துணைக்குக் கூடப் போயிருந்தேன். காலேஜ் ஆபீஸ்ல அவுங்க சர்டிபிகேட் வாங்க உள்ள போக நான் வெளியே காத்திருக்க..
அப்ப பாருங்க.. அந்தக் கண்ணு.. அதாங்க நம்ம மயிலு.. கண்ணு காட்டிக் கொடுத்திருச்சே.. எதுத்தாப்புல வருது.. நமக்கு அப்படியே காணாததைக் கண்டவன் மாதிரியாயிருச்சுங்க.. ஏதோ கவிதை, கதைல எழுதுவாங்களே.. மூளைல நட்சத்திரம் வெடிச்ச மாதிரி.. பல்பு எரியற மாதிரின்னு.. அப்படித்தான்.. நானும் அவுங்களை நோக்கிப் போறேன்.. அவுங்களும் நம்மளை நோக்கி வர்றாக. திடீர்ன்னு பார்த்தா நம்மளை பார்த்துக்கிட்டே உள்ள போறாக.. அப்படியே அசந்துட்டேன் போங்க.

பின்னாடியே ஒரு ஆள் வேற போறான்.. 'என்னடா இது? இவன் யாரு புதுசா இருக்கு?'ன்னு யோசிச்சுக்கிட்டே நிக்கேன்.. நிக்கேன். நின்னுக்கிட்டே இருக்கேன்.. பத்து நிமிஷம் கழிச்சு மயிலு வெளில வந்து வாசல்ல நின்னுச்சா.. இப்பத்தான் சாமி முழுசா பார்த்தேன் என் மயில..! வயிறு வீங்கிப் போயிருந்துச்சு..

"எனக்கு எப்படி இருந்திருக்கும்?" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. சினிமால வர்றா மாதிரி கூட வந்தவன் அவ தோள்ல கை போட்டு நடக்க அதுவும் நடக்குது.. நானும் அப்படியே பின்னால நடக்குறேன்.. என்ன செய்றதுன்னே தெரியலை..

மயிலோட வூட்டுக்காரன் வண்டியை ஸ்டார்ட் செஞ்சு கிளப்புறான்.. மயிலு வண்டில உக்காருது.. நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். வண்டி கிளம்புது. நான் முன்னால நடக்குறேன்.. காலேஜ் மெயின் கேட் பக்கத்துல வந்தவுடனே மயில் லேசா திரும்பி என்னைப் பார்த்து தன்னோட இடது கையை தன் வயித்து மேல வைச்சு லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுச்சு பாருங்க..

அதே சிரிப்புதான்.. என் கையெழுத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. கடலைமிட்டாய் வாங்கிட்டு சிரிச்ச சிரிப்புத்தான்.. நான் வரைஞ்சு கொடுத்த ஓவியத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. எந்த வித்தியாசமும் இல்லீங்கண்ணேன்.. சென்ஷியண்ணேன்.. சத்தியமா சொல்றேன்.. அடுத்த ஆறு மாசத்துக்கு அண்ணன் தேவதாஸ் மாதிரிதான் திரிஞ்சேனுங்க..

இன்னிவரைக்கும் அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் என்னன்னுதான் தெரியலீங்க.... என்னை அடையாளம் கண்டுக்கிட்டதா நினைச்சு சிரிச்சாளா? இல்ல.. எவனோ ஒருத்தன் தன்னை பார்த்துக்கிட்டு நிக்குறானேன்னு நினைச்சுப் பார்த்தாளா? படிக்கிற நீங்களாச்சும் எனக்குச் சொல்லுங்க..

ஆனா ஒண்ணு சாமி.. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி.. இந்தக் 'கண்ணு' மேட்டர்ல மட்டும் ஒருத்தன் சிக்குனான்னு வைங்க.. அவன் நாயுடு கடை கொத்து புரோட்டாதான். இது என் அனுபவம்.. சொல்லிப்புட்டேன்.. பார்த்து நடந்துக்குங்க..

அண்ணன் சென்ஷி அவர்களே.. உங்க புண்ணியத்துல என் மனசுல இருந்ததைக் கீழ கொட்டிட்டேன்.. இம்புட்டுத்தான் நம்மளோட பர்ஸ்ட் லவ்வு மேட்டர்.. இதைப் படிச்சுப்புட்டு இளதாரிப் பயலுக அல்லாரும் சுதாரிப்பா இருந்துக்கணும்னு நாலு பயபுள்ளைகளுக்கு புத்தி சொல்லி திருத்துங்க.. இன்னா.. வரட்டா..?

No comments:

Post a Comment