Monday, March 28, 2011

கடவுளுக்கு அருகில்


கடற்கரைக்குச் சென்று பார்த்திருப்பீர்கள், கடல் அலைகள் விம்மித் தவழ்வதும் – நண்டுகளும் – சங்குகளும் கண்டு வியந்திருப்பீர்கள். அலைகள் வரும்; மணல் வரிகள் அமையும்; நண்டுகளின் குழிகள் தெரியும்; அலைகள் திரும்பும்; மணல் சித்திரங்கள் அழியும். நண்டுகளின் குழிகளும் உங்கள் காலடியுடன் அழிந்து போகும்.
அலை உயிரற்றது; நண்டு உயிருள்ளது. உயிருக்கும் , உயிரற்றதற்கும் முக்கியமான வேறுபாடு என்ன ? ஒழுங்கு…
எப்படி ?

இந்த இடத்தில் சிறு அறிவியல் செய்தி தெரிந்து கொண்டு படித்தால்தான் மேற்கொண்டு புரியும். தெர்மோ டைனமிக்ஸ்ஸின் இரண்டாவது விதி பற்றி நீங்கள் அறிய வேண்டும். எளிதாக சொன்னால் ‘ஆதர்ச இயந்திரம்’ என்று எதுவும் கிடையாது. நூறு விழுக்காடு ஆற்றல் கொண்ட இயந்திரம் எதுவும் இருக்க முடியாது. உதாரணம் ஒரு நீராவி இஞ்ஜின் எரிக்கும் நிலக்கரியின் அத்தனை உஷ்ணத்தையும் ஆற்றலாக மாற்றுவதில்லை. கொஞ்சம் உஷ்ணம் விரயமாகவும் , தேய்மானத்திலும் தப்பிவிடும். ஒரு நீராவி இஞ்ஜின் தண்டவாளத்தில் ஓடுவது ஒழுங்கின் அடையாளம். அது சக்தியை விரயம் செய்வது ஒழுங்கின்மையின் அடையாளம்.
உஷ்ணம் என்பது மாலிக்யுல் மூலக்கூறுகள் கன்னா பின்னா என்று அலைவதனால் ஏற்படுகிறது. தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதி பிரபஞ்சத்தில் ஒழுங்கிலிருந்து ஒழுங்கின்மை ஏற்படுவதை திருப்பி அமைக்க முடியாது என்கிறது.
சுருங்கச் சொன்னால் ஒழுங்கின்மை பிரபஞ்சத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதை நிறுத்த முடியாது. பனி உருகுவது, முட்டை உடைவது , கடலலைகளால் காலடிச் சுவடுகள் அழிவது எல்லாம் திரும்பப்பெறமுடியாத இழப்புகள். அலைகளால் காலடி சுவட்டை அழிக்கத்தான் முடியும், உண்டாக்க முடியாது. சூரியனால் பனிக்கட்டியை உருக்கத்தான் முடியும். ஆக்கமுடியாது. அதற்கு மற்றொரு இடத்திலிருக்கும் ஒழுங்கைக் கலைக்கவேண்டும்.
விஞ்ஞானிகள் ஓர் அமைப்பின் ஒழுங்கின்மையை அளக்க என்ட்ரபி ( ENTROPY ) என்ற அளவுகோல் வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment