Monday, March 28, 2011

மரு.ரேகா ராமச்சந்திரனின் டௌன் சிண்ட்ரோம் – புத்தகத்தில் குறையொன்றுமில்லை


மருத்துவ புத்தகங்களுக்கு / மருத்துவம் சார் புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் (எனது வலைத்தளத்தில் மற்றும் மருத்துவ சஞ்சிகைகளில்) விமர்சனம் எழுதுவதை கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து வந்தாலும், தமிழில் விமர்சனம் எழுதியதில்லை என்பதால் இதை எழுதுவதற்கு சிறிது தயங்கியது உண்மை தான்.


அதன் பின்னர் தான் ஒரு எளிய உண்மை புலப்பட்டது. இது வரை தமிழில் வரும் மருத்துவ புத்தகங்களின் / மருத்துவம் சார் புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

பொதுவாக தமிழகத்தில் படிப்பறிவு அதிகம். புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் அதிகம் தான் - சொந்தமாக வாங்கி படிக்கும் பழக்கம் குறைவு :( என்பது வேறு விஷயம் - ஆனால் உடல் நலத்தை பற்றி / வியாதியை பற்றி தமிழில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்

தங்களுக்கு / தங்களின் உறவினர்களுக்கு வந்துள்ள நோயை பற்றி ஒவ்வொருவருக்கும் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும். எந்த நோயை எடுத்தாலும் பிணியாளர்களுக்கு வரும் சந்தேகங்கள் பல
  • இதுல பயப்பட ஒன்னுமில்லை தானே,
  • எவ்வளவு நாளாகும் சரியாக,
  • என்ன சாப்பிடலாம்,
  • என்ன சாப்பிடக்கூடாது
  • காபி குடிக்கலாமா,
  • சர்க்கரை போட்டு காபி குடிக்கலாமா,
  • அருகம் புல் ஜூஸ் குடிக்கலாமா,
  • எவ்வளவு நாள் மாத்திரை சாப்பிடனும்,
  • கண்டிப்பாக ஊசி போடவேண்டுமா,
  • மாத்திரையிலேயே கரைக்க முடியுமா அல்ல கண்டிப்பாக ஆபரேசன் தேவையா,
  • ஆபரேசன் பண்ணினால் நோய் முற்றிலும் சரியாகிவிடுமா,
  • ஆபரேசன் பண்ணிய பின்னர் சைக்கிள் ஓட்டலாமா,
  • எவ்வளவு நாள் படுக்கையில் இருக்கவேண்டும்,
  • இந்த ஆபரேஷன் பண்ணிய பின்னர் கல்யாணம் செய்து கொள்ளலாமா,
  • இந்த ஆபரேஷன் பண்ணியதை குறித்து திருமணமான பின்னர் கணவன் / மனைவிடம் சொல்ல வேண்டுமா,
  • மொத்தம் எவ்வளவு செலவாகும்,
  • விட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகள் எதாவது இருக்கிறதா, என்று பல கேள்விகள், சந்தேகங்கள் வருவது இயற்கை தான்.
இதில் பல கேள்விகளுக்கு மருத்துவரே விடை அளிப்பார். ஆனால் அனைத்து கேள்விகளுக்கு விடை அளிக்க நேரம் இருப்பதில்லை. அதே போல் சில கேள்விக்களுக்கு விடை அளிக்க தேவையில்லை என்றே மருத்துவர் நினைக்கலாம் (உதாரணம் – இந்த நோய் எதனால் வருகிறது)

இப்படி பட்ட சூழலில் மருத்துவம் / நோய்கள் / வைத்திய முறைகள் குறித்த நூல்களின் தேவை இருப்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் வெற்றிடத்தை நிரப்ப போதுமான அளவு புத்தகங்கள் இல்லை என்பதையும் நாம் அறிவோம்

கிழக்கு பதிப்பகத்தின் தாய் நிறுவனமான “நியூ ஹொரிசன் மீடியா நிறுவனத்தினின் நலம் “இம்பிரண்ட்” (இதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன) வெளியிட்ட புத்தகங்கள் சிலவற்றை படித்துப்பார்த்த போது அந்த வெற்றிடத்தை நிரப்ப முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதை எளிதாக உணர முடிந்தது. (எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பேலண்ஸ் ஷீட் தான் சொல்ல வேண்டும் :) )

இனி புத்தக விமர்சணம். வழக்கமாக மருத்துவ புத்தகங்களுக்கு விமர்சணம் எழுத நான் பயன்படுத்தும் முறையை இதிலும் பயன் படுத்தியிருக்கிறேன். (உங்களுக்கு சற்று வித்தியாசமாக தெரியலாம்)

மரு.ரேகா ராமச்சந்திரனின் டௌன் சிண்ட்ரோம் – புத்தகத்தில் குறையொன்றுமில்லை

புத்தகத்தின் பெயர் : டௌன் சிண்ட்ரோம் - குறையொன்றுமில்லை
ஆசிரியர் : மரு.ரேகா ராமச்சந்திரன்
பதிப்பகம் : நலம் வெளியிடு. நியூ ஹொரிசன் மீடியா
ஐ.எஸ்.பி.எண்: 978-81-8368-871-0
விலை : ரூபாய் 70
தள்ளுபடி : விபரம் இல்லை
புத்தகத்தின் வகை : ஒரு நோயை பற்றிய புத்தகம்

கூறப்பட்டுள்ள விபரங்கள் : 
  1. நோய்க்காரணம்,
  2. பாதிப்புகள்,
  3. வைத்திய முறைகள்,
  4. சிறப்பு கல்வி
யாருக்காக எழுதப்பட்டுள்ளது : 
  • டௌன் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு
வேறு யாராவது பயன்படைவார்களா : 
  • பிற குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் பயன்படும்
குறிப்பிடத்தக்க அம்சங்கள் :
  1. தெளிவான எழுத்து நடை
  2. நோய்க்கான மூலக்காரணத்திலிருந்து,
    • பாதிப்புகள்,
    • அறிகுறிகள்,
    • பரிசோதனைகள்,
    • பயிற்சிகள்,
    • சிறப்பு கல்வி குறித்த தகவல்கள் என்று தேவைப்படும் அனைத்து விபரங்களும் தரப்பட்டிருப்பது
  3. சிறப்பு பள்ளிகளின் முகவரிகளை சேர்த்தது
  4. எதிர்மறைக்கருத்துகளை பின் தள்ளி நேர்மறை கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருப்பது
அடுத்த பதிப்பில் முன்னேற்றக்கூடிய அம்சங்கள் :
  1. சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் மொழி பெயர்ப்பு (உதாரணம் பிசியோதெரபி என்பதை இயன்முறை வைத்தியம் என்று தான் கூறவேண்டும். உடலியம் சிகிச்சை என்றல்ல)


விமர்சனம் :

தங்களின் குழந்தை ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது குறித்து விரிவாகவே குறிப்பிட்டு உள்ளது இந்த நூலின் சிறப்பு

டௌன் சிண்ட்ரோம் என்றில்லை, பிற வகை மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றொரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தம் என்பது என் கருத்து

உடல் ஊனமுற்றவர்கள் - Handicapped - என்ற வார்த்தை தான் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது

பிறகு அது - Physically Challanged - என்று மாற்றப்பட்டது (இந்த பதத்தை தமிழ் படுத்திய கூத்துக்கள் தனிக்கதை)

அதன் பிறகு அந்த பதமும் அவ்வளவு பொருத்தமில்லை என்பதால், அது கூட எதிர்மறை அர்த்தத்தையே தருவதால் தற்சமயம் மாற்றுத்திறனாளி - Differently abled - என்ற நேர்மறை அர்த்தம் தரும் பதம் பயன் படுத்தப்பட்டு வருகிறது

தமிழக அரசும் இந்த பதத்தையே தற்சமயம் பயன்படுத்தி வருகிறது. 19.03.2010 முதல் ஊனமுற்றோர் நலத்துறை என்பது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது

எழுதியது : புருனோ
எழுதப்பட்டது : 01-05-2009
புத்தகம் கிடைக்குமிடங்கள் : அனைத்து கடைகளிலும்
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : 
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018. Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601 Fax: 91 44 4300 9701 support@nhm.in
பொறுப்பு துறப்பு : மதிப்பிடுவதற்காக பெறப்பட்ட புத்தகம்

No comments:

Post a Comment