*************************************
நான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.
அசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.
நிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.
இதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். "உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்".
ஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்திற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.
சில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.
"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.
|
No comments:
Post a Comment