பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை எவ்வளவு உயருமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல் பங்குகளே விலையை நிர்ணயிக்கலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதற்கிடையே பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, மறைமுகமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடிக்கையாளர்களின் கவனத்தையும், அவசரத்தையும் அடிப்படையாக வைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது.உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட சென்றால், அவருக்கு 200 ரூபாய்க்கான பெட்ரோல் கிடைத்தால், நிச்சயமாக அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லலாம்.
ஏனெனில், 200 ரூபாய்க்கு கேட்டால், பங்க் ஊழியர், 100 ரூபாய்க்கோ அல்லது 50 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுவார்.வாடிக்கையாளர் மீட்டரைப் பார்க்காமல் சென்று விட்டால், அந்த ஊழியருக்கு லாபம். வாடிக்கையாளர் மீட்டரைப் பார்த்து, குறைவாகப் போட்டு விட்டீர்களே என்று உஷாராக கேட்டால், “100 ரூபாய்க்கு தானே கேட்டீர்கள்’ அல்லது “சாரி சார்… 100 ரூபாய்க்கு தான் கேட்டீர்கள் என நினைத்தேன்’ என வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேசி சமாளித்து, பாக்கி பெட்ரோலைப் போடுவர்.மற்றொரு வகை மோசடி என்னவென்றால், பெட்ரோல் போட “டேங்க்’ மூடியைத் திறந்து நீங்கள் காத்திருக்கும் போது, பங்கில் உள்ள ஒரு ஊழியர் பெட்ரோல் போடுவார்; மற்றொருவர் உங்களது கவனத்தை திசை திருப்பி, “டேங்க் மூடி துருப்பிடித்துள்ளதே, ஆயில் போடுங்க சார்; இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது’ என்பது போல் பேசுவார்.
அதற்குள் மற்றொரு ஊழியர், மீட்டரை ஜீரோ செய்யாமல் ஏற்கனவே பெட்ரோல் போட்ட கணக்குடன் துவங்கி, அடுத்தவருக்கும் போட்டு கணக்கு காட்டி விடுவார்.இந்த மோசடிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களால் நடத்தப்படுகிறது. ஒரு சில ஊழியர்கள் தான் இம்மோசடியில் ஈடுபட்டு, மற்ற ஊழியர்களையும் மிரட்டுவதாக தெரிகிறது.இரவுப்பணி முடித்து தூக்க கலக்கத்தில் வருவோர், அலுவலகப்பணி முடிந்து, அவசரமாக வீடு திரும்புவோர், “சீக்கிரம் பெட்ரோல் போடுங்கள்’ என அவசரப்படுத்துவோர் ஆகியோரை குறி வைத்து, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.சரியான அளவில் பெட்ரோல் அடிக்கவில்லை என்று சந்தேகம் தெரிவித்தால், வாடிக்கையாளர்களை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும் நடக்கிறது.
இவ்வாறு புகார் கூறும்பட்சத்தில், “வேண்டுமென்றால் வாகனத்தில் உள்ள பெட்ரோல் முழுவதையும் எடுத்து அளந்து பார்க்கலாம்’ என்று ஊழியர்கள் சொல்கின்றனர்.பெரும்பாலானவர்கள் வாகனத்தில் ஏற்கனவே பெட்ரோல் வைத்திருந்து, கூடுதலாக பெட்ரோல் போடுவதால் இந்த சோதனையால் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
|
No comments:
Post a Comment