ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரம் பவானிசாகர் அணை. இங்கிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. வாய்க்காலில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்துள்ளன. பெரும்பாலும் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்தவர்கள் உடல்கள்தான் வாய்க்கால்களில் மிதப்பது வழக்கம். கீழ்பவானியிலோ, புத்தாடை உடுத்தப்பட்ட சடலங்கள் அதிகளவில் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்களுக்கு புத்தாடை மாட்டி யார் இங்கு தள்ளிவிடுவது என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் வசிக்கும் ஒரு தரப்பு மக்களிடையே வினோத, விபரீத நம்பிக்கை ஒன்று உள்ளது. இறந்தவரது உடலை குளிப்பாட்டி, சடங்குகள் செய்து புத்தாடை அணிவித்து, வாய்க்காலில் வீசி மீனுக்கு உணவாக போட்டால் மறுஜென்மம் நல்லதாக இருக்கும் என்பது இவர்கள் நம்புகிறார்கள். இறந்தவர்களது உடல்களை இவர்கள் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. அலங்கரித்து, பாடையில் தூக்கிவந்து, வாய்க்காலில் வீசிவிடுகின்றனர். இவ்வாறு செய்தால், அந்த ஆத்மாக்கள் பேயாக அலையாது என்றும் நம்புகிறார்கள்.
வாய்க்கால்களில் ஆண், பெண் சடலங்கள் மாலையுடன் மிதப்பது அதிர்ச்சியாகவும் பீதி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. குறிப்பாக புங்கம்பாடி பகுதியில்தான் இவை அதிகம் கரை ஒதுங்குகின்றன.
இதுபற்றி போலீசார் கூறுகையில், “தகவலே இல்லாமல் பல உடல்கள் வாய்க்காலோடு போய்விடுகின்றன. எங்களுக்கு தகவல் வந்தால் உடனே சென்று மீட்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட உடலை மீட்கச் சென்றபோது, அடையாளம் தெரியாத 4 பிணங்கள் கிடந்தன. யார் அவற்றை வீசினர் என்றுகூட கண்டுபிடிக்க முடியவில்லை” என்றனர்.
|
No comments:
Post a Comment