Friday, November 25, 2011

லேப்டாப்... வசதியா? அசதியா?

உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது விஞ்ஞானம். ஆனாலும், அதற்கு விலையாக அடுக்கடுக்கானப் பிரச்னைகளும் நம்மிடத்தில் அணிவகுத்து நிற்கின்றன!

'கைக்கு அடக்கமாக இருக்கும்; எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்’ என்பதாலேயே 'லேப்டாப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்! குறிப்பாக, பிஸினஸ் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் - வெளிநாடு என பறந்து கொண்டே இருப்பவர்களிடையே லேப்டாப்பின் பயன்பாடு ரொம்பவே அதிகம்.

தற்போது கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. இப்படி பல்வேறு துறையினரும் லேப்டாப் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், 'அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்’ என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து பொது மருத்துவர் ராஜாமணியிடம் கேட்டோம்.

'கம்ப்யூட்டரைப் போல ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெரும்பாலானவர்கள் லேப்டாப்புக்கு மாறி வருகிறார்கள். மடியில் வைத்துப் பயன்படுத்துதல், படுத்துக்கொண்டே பயன்படுத்துதல், ஹாயாக தரையில் உட்கார்ந்துகொண்டு பயன்படுத்துதல் என ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கேற்ப விதவிதமான முறைகளில் லேப்டாப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும், குறிப்பிட்ட நேரம்தான் என்றில்லை... மணிக்கணக்காக அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால் இடுப்பு, கழுத்து, மூட்டு, தோள்பட்டை என உடம்பில் பல இடங்களில் வலி தோன்றும்.

குறிப்பாக, நீண்ட நேரம் டைப் செய்யும்போது, மணிக்கட்டுப் பகுதிக்கு ரத்தம் வருவது குறைந்து வலி உண்டாகும். விரல்களிலும் இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, தொடர்ந்து தட்டச்சு செய்யவேண்டிய வேலை இருந்தால், அவ்வப்போது விரல்களுக்கு ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். விரல்களை நீட்டி மடக்குவது போன்ற சிறிய பயிற்சிகளையும் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து, புத்துணர்வு ஏற்படும்.

மடியில் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளியாகும் அதிக சூட்டினால் ஆண்களின் விதைப்பை பாதிக்கப்பட்டு, விந்தணுக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் 'குழந்தைப் பேறு கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகலாம்’ என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, சூட்டினால் மடியில் எரிச்சல், புண் போன்ற சருமப் பாதிப்புகள் வரலாம்.

சிலர் துணி அல்லது தலையணையை மடியில் வைத்து, அதன்மேல் லேப்டாப்பை வைத்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால், லேப்டாப்பில் இருந்து வரும் வெப்பம் தங்களைத் தாக்காது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறான விஷயம். ஏனெனில், வெப்பம் வெளியேற வழி இல்லாமல், லேப்டாப் இன்னும் அதிகமாக சூடாகும். சில சமயங்களில் வெடித்து விடவும் வாய்ப்புண்டு.

லேப்டாப்பை மடியிலோ அல்லது தரையிலோ வைத்துப் பயன்படுத்தும்போது குனிந்தே இருப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி உண்டாகும். சிலர் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்யும்போது மார்பு வரை உள்ள உடல்பகுதி மட்டுமே படுக்கையில் பதிந்திருக்கும். தலையும், கழுத்தும் மேலே தூக்கி இருக்கும். இதனால் முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.

இப்படித்தான் அமர வேண்டும், படுக்க வேண்டும் என வரைமுறை இருக்கிறது. இந்த வரைமுறைகளை மீறும்போதுதான் மேற்கண்ட பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, மேஜை அல்லது அதற்குச் சமமான உயரம் கொண்ட இடங்களில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு முதுகு வளையாமல் வேலை செய்யலாம். மேலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவும் செய்யலாம்.

அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இருக்கும் இடங்களில் லேப்டாப் பயன்படுத்தும்போது, அதிகமான ஒளி லேப்டாப் திரை மீது பட்டு, எதிரொளிக்கும். இதனால், கண்களில் உள்ள ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதற்குத் தகுந்தாற்போல் திரையின் பிரகாச அளவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது!' என்கிறார் டாக்டர் ராஜாமணி!

நதியா நிஜ உருவம்

'நதியா?’ -
ஒற்றை வார்த்தை கவிதை தோன்றுகிறது நதியாவைப் பார்க்கும்போது! வசீகரப் புன்னகை, உறுத்தாமல் மிளிரும் அழகு, கூடுதலாக ஒரு இன்ச் சதைகூடப் போடாத உடல்வாகு... அப்போது எப்படிப் பார்த்தோமோ... இப்போதும் அப்படியே இருக்கிறார் நதியா! 

''வயதே ஏறாமல் இருக்க வரம் வாங்கி வந்தீங்களோ?'' எனக் கேட்டால், கன்னக்குழி காட்டிச் சிரிக்கிறார். ''வரம் வாங்கி வரலை... ஆனால், பாரம்பரியம் வாங்கி வந்திருக்கேன். என் அம்மா - அப்பா இருவருமே வயசான பிறகும் ஒரிஜினல் வயசைக் கண்டுபிடிக்க முடியாத இளமையோடு இருக்காங்க. அதே பாரம்பரியம்தான் என் இளமைக்குக் காரணமா இருக்கலாம். 14, 10 வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கணவர், குழந்தை களோடு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோ ஷமாக் கழிக்கிறதும் என் பொலிவுக்குக் காரணம்!''
''உடம்பை எப்படி இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?''

''சிம்பிளான பயிற்சிகளைத் தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுலயே விளையாட்டுல எனக்கு ஆர்வம் அதிகம். காலையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் டிரெய்னிங் பண்றதோட வீட்டு வேலைகளும் எடுத்துக்கட்டி பண்ணுவேன். குடும்பத்தினரோட சந்தோஷமா பேசிச் சிரிக்கிறப்ப, ஆழ்நிலை தியானம் பண்ண மனநிறைவு கிடைக்கும். பெட்ல விழுந்த உடனேயே தூக்கம் வரணும். அப்பதான் நம்ம உடம்பு நல்ல நிலையில் இருக்குன்னு அர்த்தம். நம்ம உடம்பு சரி இல்லைன்னா, அதோட அறிகுறிகள் பசி, தூக்கம் இரண்டிலும் தெரிஞ்சிடும். அது இரண்டும் சரியா இருந்தால், நாம சரியா இருக்கோம்னு அர்த்தம்!''

''உணவு விஷயத்தில் எப்படி?''

''எந்த உணவையும் ஏத்துக்கிற உடம்பு எனக்கு. மும்பை உணவை எந்த அளவுக்கு ரசிச்சுச் சாப்பிடுவேனோ, அதே மாதிரி தென் இந்திய உணவுகளையும் சாப்பிடுவேன். இத்தாலி, ஜப்பானிய உணவுகளும் ரொம்பப் பிடிக்கும். என்னதான் சுவையாக இருந்தாலும், உடலுக்கு எவ்வளவு தேவையோ அதோட நிறுத்திக்குவேன். நிறைய சாப்பிடுறது தப்பு இல்லை. ஆனா, அதில் கிடைக்கிற சக்தி எரிக்கப்படுகிற அளவுக்கு நல்லா வேலை பார்க்கணும். உடல் உழைப்பையும் உணவு அளவையும் ஒப்பிட்டாலே, வீணாக சதை போடுவதை நிச்சயம் தடுத்துரலாம்!''


''முகப் பொலிவு, கூந்தல் மினுமினுப்பு... ரகசியம் சொல்லுங்களேன்?'' 

''எனக்கு இயல்பாவே ஸ்மைலி ஃபேஸ். அதனால பால்யம் மாறாத தோற்றம். மத்தபடி எந்த வயசுலயும் நம்ம முகத்தை ஒரே மாதிரி வெச்சுக்க முடியாது. அப்படி வெச்சுக்க நினைச்சு நாம தடவுற கண்ட கண்ட க்ரீம்கள் தான் முகத்தைப் பாழாக்கும். ஃபேஷியல்ங்கிற பேர்ல முகத்தை ரசாயனத்தால் நனைக்கிறோம். இயற்கைக்கு மாறான எந்த விஷயமுமே அப்போதைக்கு அழகாத் தெரியுமே தவிர, நிலைச்சு நிக்காது. சொன்னா நம்ப மாட்டீங்க, முகத்துக்குன்னு நான் பயன்படுத்துறது நல்ல தண்ணீர் மட்டும்தான். அடிக்கடி முகம் கழுவுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெயால் தலையை மசாஜ் பண்ணுவேன். ஷாம்பு, பவர்ஃபுல் ஹேர் ஆயில்னு எதுவும் பயன்படுத்த மாட்டேன்!''

''திருமணத்துக்குப் பிறகு உடலைக் கவனிக்கும் எண்ணமே பெண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?''

''குடும்பச் சூழல்தான் காரணம்! கணவர் தொடங்கி குழந்தைகள் பராமரிப்பு வரை ஒரு குடும்பப் பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலை. எத்தனை குடும்பங்களில் பெண்களுக்கு உதவியாக கணவர்கள் கைகொடுக்கிறார்கள்? சுதந்திரமாக இருந்த ஒரு பெண் வீட்டுக்குள் அடைபடும்போது, அவளுடைய உடல்வாகு மாறிவிடுகிறது. ஒரு நாளைக் குக் குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு பெண்ணும் சின்னச் சின்ன பயிற்சிகளையாவது மேற் கொள்ளணும். எப்பவும் ப்ரிஸ்க்கா இருக்கணும்னு மனசுல நினைச்சுட்டே இருக்கணும். உணவு தொடங்கி, உடை வரை நம்ம உடலை நாம முதல்ல நேசிக்கக் கத்துக்கணும்!''

''மனசை ரிலாக்ஸா வெச்சுக்க டிப்ஸ் சொல்லுங்க?''

'' 'எதுக்காக நமக்கு இந்தக் கஷ்டம்?’ ரொம்ப டென்ஷனான நேரத்தில் இந்தக் கேள்வியை மனசுக்குள் எழுப்பிப் பாருங்க. ஆபீஸ் கிளம்புற அவசரத்தில் மகளைத் திட்டி இருப்போம். ஆனா, அந்த மக நல்லா இருக்கணும்னுதானே ஆபீஸுக்கு வர்றோம்.

'நமக்குத் தேவையானதைக் கடவுள் கொடுத்திருக்கான்’னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு லேசா மாறிடும். 'போதும்’கிற வார்த்தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!''

நோய் பரப்பும் சாதனை... நாப்கின்கள் ?

பெண்ணாக பிறந்த அனைவருக்கும் 'மாதவிலக்கு’ என்பது தவிர்க்க முடியாத அனுபவம்! மாதவிலக்கு ஏற்பட்ட நாட்களில் மனமும், உடலும் சோர்ந்து மூலையில் முடங்கிக் கிடந்ததெல்லாம் மலையேறி வெகுகாலமாகி விட்டது. 'அந்த’ நாட்களுக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு புன்சிரிப்போடு பெண்களை வலம் வரச் செய்து கொண்டிருக்கின்றன பலவிதமான சானிட்டரி நாப்கின்கள். இந்த நிலையில், 'சானிட்டரி நாப்கின் பயன்படுத்துபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்’ என்றொரு கருத்து, பெண்கள் மத்தியில் மெள்ள அதிர்ச்சி அலைகளைப் பரவவிட்டுக் கொண்டிருக்கிறது.

'இது எந்த அளவுக்கு உண்மை?' என்று மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் பாவ்னாவிடம் கேட்டோம்.

''கெமிக்கல் கலக்காத பஞ்சு, மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிற வுட் பல்ப் போன்ற பொருட்களை வைத்து, சுத்தத்தையும், சுகாதாரத்தையும் காப்பதற்காக தயாரிக்கப்படுபவைதான் நாப்கின்கள். இவற்றின் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கிற சதைப் பகுதியான யூட்ரஸ் (Uterus) உள்ளே உருவாகிற ஒரு மெல்லிய படலம்தான் எண்டோமீட்ரியம் (Endometrium).இதுதான் பெண்கள் தாய்மை அடைவதற்குக் காரணமாக இருக்கிறது. புற்றுநோயானது முதலில் இந்த எண்டோமீட்ரியத்தையே தாக்குகிறது. அதன்பின் சதைப் பகுதியான யூட்ரஸுக்குள்ளும் பரவி கர்ப்பப் பையையும் தாக்கிவிடும். இதைத்தான் கர்ப்பப்பை புற்றுநோய் (Endometrial cancer or Uterine cancer) என்கிறோம்.

கர்ப்பப்பை புற்றுநோயானது, 50 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் அதிகமாக வரும் வாய்ப்பு உள்ளது. கரு முட்டைப் பையில் நீர்க்கோத்தல், உடம்பில் கொழுப்பு அதிகரித்தல், மெனோபாஸ் பிரச்னைகள்... போன்றவை கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஒழுங்கற்ற மாதவிடாய் வரும் பெண்களுக்கு எண்டோமீட்ரியம் 5-மில்லி மீட்டரையும் தாண்டி வளர்ந்துவிடும். கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுவும் முக்கியக் காரணி.

இதைத் தவிர, அம்மா, பாட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்தம் சந்ததியினருக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றபடி புற்றுநோய்க்கும் நாப்கின் பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, 'இறுக்கமான பிரா அணிபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும்’ என்கிற வதந்தி நாடெங்கும் பரவியது. இப்போது 'நாப்கினால், கர்ப்பப்பை புற்றுநோய்’ என்ற புரளி கிளம்பியிருக்கிறது அவ்வளவுதான்'' என்று அதை ஒதுக்கித் தள்ளிய டாக்டர் பாவ்னா,

''மாதவிடாய் நாட்களில் வெளிவருகிற ரத்தம், அசுத்த ரத்தம் என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் நிரம்பி இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் உதிரமானது சுத்தமானதாகவே இருக்கும். ஆனால், நாம் பயன்படுத்தும் நாப்கின் அல்லது துணியில் அந்த ரத்தமானது அதிகநேரம் தேங்கும்போதுதான் அசுத்தமடைகிறது. அதில், பாக்டீரியாக்கள் வளர்ந்து வஜைனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலவித நோய்களை ஏற்படுத்தும்; கர்ப்பப் பைக்கு அருகில் இருக்கும் வால்வுகளையும் அடைத்துவிடும். இதனால் குழந்தையின்மை மற்றும் யுட்ரஸ் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை நாப்கினை மாற்றிக்கொள்வது நல்லது. துணிகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், அதையெல்லாம் தவிர்த்து, நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவதுதான் நோய்கள் வராமல் தவிர்ப்பதற்கான சிறந்த வழி!'' என்றார் அக்கறையோடு!

''அம்மா, பாட்டி காலத்திலிருந்தே மாதவிலக்கின்போது எல்லோரும் துணியைத்தானே பயன்படுத்தினார்கள். அதனால் எந்த பிரச்னையும் வந்துவிடவில்லையே?'' என்ற கேள்விக்கு...

''அதில் ஆரோக்கியமில்லை என்பதுதான் என் கருத்து'' என்று ஆணித்தரமாக ஆரம்பித்தார் மாதவிடாய் ஆரோக்கிய அமைப்பின் எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினராக இருக்கும் ராணி முரளிதரன்.

''மாதவிலக்கின்போது பெண்களுக்கு ஏற்படும் ரத்த வாடையை மோப்பம் பிடித்தே விலங்குகள் மனித நடமாட்டத்தைக் கண்டுபிடித்துவிடும் என்பதால்தான்... ஆதிவாசிகள் காலத்தில் பெண்களுக்கு ஓய்வும் மறைவிடமும் கொடுத்து, தனிமைப்படுத்தினர். அது பரிணாமம் பெற்று... தனி அறை, தனி படுக்கை, தனி தட்டு, தனி டம்ளர் என ரொம்பவே 'தனி'மைப்படுத்தியது. விளைவு... மாதவிடாய் துணிகள்கூட யார் கண்ணிலும் படக்கூடாது குறிப்பாக... காகம், கருடன் போன்ற பறவைகள் பார்த்தால் தோஷம், குழந்தை பிறக்காது என்கிற கட்டுக்கதைகளும் கிளப்பிவிடப்பட்டன. இதனால், சூரிய ஒளியே படாத இடங்களில் துணிகளைக் காய வைத்தார்கள். இதில், பாக்டீரியாக்கள் மறுபடியும் பல்கிப் பெருகி நோய்களைத்தான் ஏற்படுத்தியது.

இன்றும் எத்தனையோ கிராமங்களில் சாக்குத் துணியை பயன்படுத்துகின்ற அறியாமை இருக்கிறது. மேலும் பயன்படுத்திய துணிகளை மீண்டும் பயன்படுத்துவதற்காக வீட்டுக் கூரை, இடுக்குகள் போன்ற மறைவான இடங்களில் செருகி வைக்கிறார்கள். இவற்றில் பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் குடியேறிவிடும். இதைக் கவனிக்காமல் பயன்படுத்தி பல பெண்கள் இறந்திருக்கிறார்கள். இது கர்ப்பப் பை புற்று நோயைவிடக் கொடுமையான விஷயம். முப்பது ரூபாய் கிடைத்தாலும் உடனே செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்வதற்கு தயாராக இருக்கும் நம் சமூகம், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நாப்கின்களுக்கு சிறு தொகையைக்கூட செலவு செய்யத் தயங்கலாமா?'' என்று நியாயமான கேள்வியை எழுப்பிய ராணி,

''கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தியபோது, மாதவிலக்கின்போது துணி பயன்படுத்தும் மாணவிகள் படும் அவஸ்தையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இதை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவுதான்... வரும் நவம்பர் மாதத்திலிருந்து இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிட்டுள்ளது நம் அரசு'' என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

விசாரணைக்குப் பின் கைதானவன் - 4 : தீபத் தீவு!


"சிலிர்த்துப் போனேன்.. உன் 'மகா'னுபவத்தைப் படித்து" என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன் அவனுக்கு.

"செல்லரித்துப் போகின்றன இப்படிப்பட்ட பாராட்டுகள்.." என்று பதில் கொடுத்தான்.

"மனிதன் வார்த்தைகளாலும் வாழ்கின்றான்" என்றேன்.

"வார்த்தைகள் இன்றியும் வாழ நிர்பந்திக்கப்படுகிறான்" என்றான்.

"எப்படி?" என்றேன்.

"வார்த்தைகள் வெளிப்படாமல் காதலை உன்னால் உணரவோ உணரச் செய்யவோ முடியுமா? நான் உணர்ந்தேன். உணர்த்தினாள்" என்றான்.

இது அவனது மூன்றாவது கைது!
தீபத் தீவு!

'தீபங்களின் தீ

தீபமாக நீ

தீபா நீ..'

இப்படித்தான் தொடங்கியது அவளுக்காக நான் எழுதிய முதல் காதல் கடிதம்.

நினைவு, கனவு, கண்ணீர், குருதி, உயிர், உடல் என்று மனதுக்குள் குதித்த வார்த்தைகளை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டு, இடையே சில சினிமா வரிகள், கிரேக்கத் தத்துவங்கள், ஹைக்கூ கவிதைகள் என கலந்துகட்டி எழுதி இருந்தேன். ஒரு துளி உண்மையைக் கூட விட்டுவிடாமல் வடித்துவிட வேண்டுமென்ற வேகத்தில் எழுதினேன். அது கடிதமாக இருந்ததோ இல்லையோ... காதல் அதில் நிறைந்திருந்தது உண்மை!

'இப்படிக்கு அன்புடன்

உன் காதலன்.' என்று எழுதி வழக்கம் போல குருவி பறக்கும் வடிவத்தில் கையெழுத்துப் போட்டிருந்தேன்.

சரி.. காதல் பிறந்தாயிற்று. அவள் கூந்தலின் ஒற்றை இழையைச் சேகரித்தாயிற்று. நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாயிற்று. பிறகு? அவளிடம் எப்படிச் சொல்ல?

காலம் காலமாக கடிதம் கைகொடுப்பதைப் போல வேறொன்றும் நம் உணர்வுகளை மிகச் சரியாகப் பதிய வைப்பதாக இல்லை. மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் போன்றவை எல்லாம் காகித மலர்களாகத்தான் ( இல்லை.. எலக்ட்ரானிக் மலர்களாகத் தான் ) இருக்கின்றன என்பதை எப்போதும் என்னால் உறுதியுடன் சொல்ல முடியும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை சமயம். நூலகத்தின் படிகளை நான் முத்தமிடத் தொடங்கியிருந்தது அந்தக் காலத்தில் தான். சாண்டில்யனும், கல்கியும், பாலகுமாரனும், சுஜாதாவும் அறிமுகமாயிருந்த நாட்களும் அப்போதுதான். வார்த்தை மடிப்புகளாய் தினமும் எதையாவது எழுதி எழுதி கவிதை என்று சொல்லி சேகரித்து வைக்கத் தொடங்கிய தினங்களும் அப்போதுதான். அவளைச் சந்திக்கும் வரம் தந்ததும் அந்த விடுமுறை தான்!


வேறோர் ஊரில் எட்டாம் வகுப்பு வரை படித்து வந்தாள். பெற்றவர்கள் அதே ஊரில் இருக்க, இவள் மட்டும் தன் சித்தி இருக்கும் ஊருக்கு வந்தாளாம். இனி இங்குதான் படிக்கப் போகிறாளாம். சுற்றிச் சுற்றி வந்தாலும் ஐம்பது வீடுகள் மட்டுமே இருக்கும் அந்த ஊரில் எந்த வீட்டில் எது நடந்தாலும் அது அடுத்த நிமிடம் அடுத்த வீட்டில் 'ஃப்ளாஷ் நியூஸ்’ ஆக மனிதர்கள் வாயில் ஓடும்.

என் வீட்டைத் தாண்டித்தான் அவள் வீடு இருந்தது. லாங் சைஸ் நோட்டுக்களை மார்பில் அணைத்தபடி, ரெட்டை ஜடை பின்னப்பட்ட கூந்தலில் ஒன்று முன்புறமிருக்க, பச்சைக் கலர் யூனிஃபார்ம் துப்பட்டா காற்றில் பறந்தாட, கொஞ்சமே கொஞ்சம் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்த மருதாணிப் பாதங்கள் ஒவ்வொரு முறையும் என் தெரு தொடும் போதெல்லாம் 'ஜில் ஜில் ஜில் மனதில்... ஒரு ஜல் ஜல் ஜல் காதல்...!’

கண்கள் பேசியதோடு சரி. வாய் திறக்கவில்லை இருவரும். விரல் கோக்க முடியவில்லை எங்களால். தனிமையில் 'உம்’ கொட்ட வாய்ப்புகள் இல்லை.

தெருவில் அவள் தன் சக தோழிகளுடன் தாண்டித் தாண்டி பாண்டி ஆட்டம் ஆடி... என்னைப் பார்த்தவுடன் லேசாய் உதடு கடித்து வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பாள். அவள் பார்க்கிறாளா என்ற எதிர்பார்ப்புடனே நானும் ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு என் வீட்டுக்குள் நுழைவேன். அவளும் பார்த்தாள். ஹா.. ' மின்சாரம் பாய்ச்சியது போல ' என்ற வாக்கியத்தின் உண்மைப் பொருளை புரிந்து கொண்டது அந்த வேளைகளில் தான்.

" ஹேய்... அந்தச் செம்பருத்தி அழகா இருக்குல்ல...? " -------அவள்.

" ஆமான்டி.. ஆனா அது கிளர்க் ராமசாமி அங்கிள் வீட்டுல இல்ல இருக்கு.." ஒருத்தி.

" அவரு ஒரு மாதிரி முசுடுடி.." இன்னொருத்தி.

" பத்தாததுக்கு அங்க சித்தெறும்பு அதிகம்டி.. ஒரு தடவ நான் ட்ரை பண்ணினேன்.. கால்ல கோலிக்குண்டு கணக்கா அங்கங்க வீக்கமா வந்துடுச்சு " இன்னும் ஒருத்தி.

பேசிக்கொண்டே, விநாயகர் கோயில் படிக்கட்டில் அமர்ந்திருந்த என்னை தாண்டிச் சென்றார்கள். ' உனக்கு செம்பருத்தி தான வேணும்... நான் கொண்டார்றேன்..' என்று மனதுக்குள் கறுவிக் (முண்டாசு கட்டி) கொண்டு வேட்டியை மடித்துக் கொண்டு கிளர்க் சார் வீட்டுக்குச் சென்றேன்.

வெற்று உடம்பும், மலையாளக் கரையோர கைலியும், தேங்காய்ப் பூ துவாலையுமாக என்னை ஏறெடுத்தவர் "என்னடா?" என்றார். பொதுவாக இளம்பெண்கள் முன் என்னை யாராவது ' டா ' போட்டு அழைத்தால் கோபம் பொத்துக் கொண்டு வரும். தற்சமயத்தில் பெண்கள் யாரும் இல்லை என்பதாலும், நான் வந்திருப்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காரியத்துக்காக என்பதாலும் இப்போது என் கோபம் ' கப்சிப்'.

" செம்பருத்தி பறிக்கணும்.. " துருத்தி இருந்த இரண்டு பற்களோடு சேர்த்து மீதி முப்பது பல்லும் தெரியும் அளவுக்கு அகலச் சிரித்து வைத்தேன்.

"என்னாத்துக்கு?"

"அது..." உண்மையைச் சொல்ல முடியுமா..? " நான் சித்த வைத்தியம் செய்யப் போறேன்... செம்பருத்தி தின்றால் ஹார்ட் அட்டாக் வராது" மேதாவித்தனத்துடன் பதில் சொல்லிவிட்டதாய் நெளிந்தேன்.

"கம்னாட்டி பயலே... பத்தாங்கிளாஸ் ரிசல்ட் இன்னும் வரல்லே... அதுக்குள்ள டாக்டராயிட்டீயளோ.." எள்ளலும், ஏளனமுமாக கேள்வி பறந்து வந்தது.

" ஆ... நான் இப்பல்லாம் லைப்ரரிக்குப் போறேனாக்கும்.. சித்தர் பாடல்கள் புத்தகத்திலே ஒரு க்ளூ இருக்கு பெரியப்பா..." ஒரு விதத்தில் அவர் எனக்கு உறவினரும் கூட. ' இவராவது சித்தர் பாடல்களைப் படிக்கிறதாவது ' தோன்றியதெல்லாம் எடுத்துவிட்டேன். என் பதிலைக் கேட்டு ஒரு விசேஷ ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார்.

" ம்... போ... போ... எறும்பெல்லாம் இருக்கு பார்த்து. கைல கால்ல ஊறி எசகு பிசகா எங்கயாவது கடிச்சு வெக்கப் போவுது " கரிசனமும், கேலியும் தெறித்தது.

சில எறும்புக் கடிகளுக்குப் பிறகு செம்பருத்தி என் கையில். அவள் கையில் எப்படி ஒப்படைக்க? யோசித்துக் கொண்டே வீடு திரும்பினேன். செம்பருத்தியைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சைக்கிளை மிதித்தேன். என் வீடு தாண்டி அவள் வீட்டின் முன்புதான் பிரேக் அடித்து நின்றேன்.

சுமார் ஐந்து மணி இருக்கும். நல்லவேளையாக அவள் வீட்டில் யாருமில்லை. எனினும், அவள் மாமன் பற்றி நினைவு வந்ததால் உள்ளே செல்லும் துணிச்சல் வரவில்லை. முன்புற ஜன்னல் கம்பிகளில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்து கூந்தல் பின்னிக் கொண்டிருந்தாள் அவள். ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் பூவை விழச்செய்தேன். அவள் விரல்களோ கம்பிகளைப் பிடித்திருந்தன. லேசாக அவள் விரல்களைத் தடவிவிட்டுச் சென்றேன்.

கார்த்திகை மாதத்தின் அன்றைய இரவில் செம்பருத்தியைச் சூடிக் கொண்டு விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டிருந்த தருணத்தில் மயங்கினேன். அப்போது எழுதியதுதான் அந்த மூன்று வரிக் கவிதை. அடுத்த நாளே கடிதம் எழுதி அவளுக்குத் தர நினைத்தேன்.

அடுத்த நாள் அவள் வீட்டின் முன்புறம் கூட்டம் கூடியிருந்தது. அவளின் தந்தை இறந்து போனாராம். ஐந்து பெண்களைப் பெற்றெடுத்து விட்டு கரைசேர்க்க முடியா கையறு நிலையில் சாராயத்துடன் விஷம் கலந்து குடித்துச் செத்துப் போனாராம். அழுதபடி அவள் பேருந்து ஏறினாள். பிறகு அவள் எப்போதும் திரும்பவேயில்லை.

உன்னைப் பற்றிய கனவுகள் சூழ தீவு போல நான் தனித்திருந்தேன் தீபா. எழுதிய முதல் கடிதத்தைக் கூட அவளிடம் சேர்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக நான் மாறிப்போனேன். அந்த வடு இன்றும் வாழ்க்கையில் இருக்கிறது. என் பெட்டிக்குள் பத்திரமாக மடித்து வைத்திருக்கும் அந்தக் கடிதத்தை இப்போது எடுத்துப் படித்தால்... கடிதத்திற்கான கலையும் இல்லை. காதலுக்கான சந்தோஷமும் இல்லை.

செம்பருத்தி கொடுத்த அந்த நாளின் பின்னிரவில் என் வீட்டின் பக்கவாட்டுத் திண்ணையில் 'ஞி' என்று வெள்ளைப் பெயின்டில் குறியிட்டு, நீ வைத்துச் சென்ற விளக்கு இப்போது வரை அணைந்தே இருக்கிறது தீபா... நீ என்னில் கடந்து சென்றதுக்கான சாட்சியாய்!

மாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்

அதிர்ச்சி என்று தலைப்பில் போடவேண்டுமா என்ன? தலைப்பே அப்படித்தான் இருக்கிறது.எனக்கும் கேட்டபோது அப்படித்தான் இருந்த்து.இப்போதுதான் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவெளிமாவட்ட நண்பர் ஒருவர் துணைவியார் தெரிவித்த விஷயம் இது.

மிகவும் பிரபலமான் மகளிர் மேல்நிலைப்பள்ளி அது. காலையில் வழக்கம்போல பள்ளியை சுத்தம் செய்தவர்கள் குப்பைக்கூடையில் இரண்டு பீர்பாட்டில்கள் இருந்த்தை பார்த்திருக்கிறார்கள்.ஆயா பள்ளி முதல்வரிடம் கொண்டு வந்து பதினொன்றாம் வகுப்பில் ஒரு பிரிவில் இருந்த்தாக ஒப்படைத்துவிட்டார்.
தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பதறியிருக்கிறார்.குறிப்பிட்ட வகுப்பறைக்கு சில ஆசிரியைகலுடன் ஓடியிருக்கிறார்கள்.அதிரடி விசாரணை.மிரட்டல்.”நீங்களே ஒப்புக்கிட்டா,மன்னித்து விட்டுவிடுவோம்’’ ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

தனித்தனியாக ஒவ்வொரு மாணவியையும் அழைத்து விசாரணை நட்த்தியிருக்கிறார்கள்.இதில் ஒரு மாணவி உண்மையைப்போட்டு உடைத்து விட்டார்.யார் கொண்டு வந்த்து என்று தெரிந்துவிட்ட்து.தலைமை ஆசிரியருக்கு அம்மாணவியை கண்டிப்பதா,வேண்டாமா என்று தர்ம சங்கடம்.நகரின் பிரபல வணிகர் ஒருவரின் மகள்.அரசியல் செல்வாக்கு உடையவர்.



மேலும்மேலும் அம்மாணவியை விசாரித்த்தில் வெளிவந்த விஷயம்,வீட்டு ஃப்ரிட்ஜில் நிறைய பீர்பாட்டில்கள் உண்டு.அப்பாவும்,அண்ணனும் ஒன்றாக சேர்ந்தும் குடிப்பார்கள்.பீர் ஒன்றும் போதயில்லை என்று வேறு சொல்லிக்கொள்வார்கள்.மாணவிக்கும் குடித்துப்பார்க்கவேண்டும் என்று ஆசை வந்துவிட்ட்து.தனியாக குடிக்க விரும்பவில்லை.இரண்டு பாட்டிலை வகுப்புக்கு எடுத்து வந்து விட்டார்.


வகுப்பில் உள்ள தனது தோழிகளை குடிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார்.ஆனால் எந்த மாணவியும் ஒப்புக்கொள்ளவில்லை.இது போதை கிடையாது,குளிர்ச்சி,எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது என்று சொல்லிப்பார்த்திருக்கிறார்.உடன் இருப்பவர்களுக்கு விருப்பமில்லை.பயந்து விட்டார்கள்.அவரும் குடிக்கவில்லை.விளையாட்டாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அவர்.டீனேஜ் என்பது எதையும் முயற்சி செய்து பார்க்கும்.வீட்டில் முன்மாதிரிகள் இருக்கும்போது விபரீதம் தெரியாத விளையாட்டாகிவிடுகிறது.ஒரு வழியாக பள்ளி தாளாளர் வழியாக அம்மாணவியின் தந்தைக்கு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.


கிராமங்களில் மது வாங்கிவர,பீடி சிகரெட் வாங்கிவர பிள்ளைகளை அனுப்பும் தந்தைகளை பார்த்திருக்கிறேன்.அவர்கள் நாகரீகம் இல்லாத மனிதர்களாக தோன்றும்.வீட்டையே பார் ஆக்குபவர்களை என்ன சொல்வது? எனக்கென்னவோ காலப்போக்கில் மது டீ,காபி போல ஆகிவிடும் என்று தோன்றுகிறது.(இப்போ மட்டும் என்னவாம்?)

கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்கர்

சேலத்தில் விபச்சார பெண் புரோக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். வாடிக்கையாளர் போல நடித்து திட்டமிட்டு பிடித்துவிட்டார்கள்.கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள ஒரு விஷயம்,கல்லூரி மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது.ஒரு மாணவிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்த்தாக கூறியிருக்கிறார்.தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் என்று பெரும்புள்ளிகள்தான் வாடிக்கையாளர்கள்.

விபச்சாரம் என்ற சொல் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.மரியாதைக்குறைவாக இருப்பதால் பாலியல் தொழிலாளர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.இந்தியா-பாலியலும் பரிதவிப்பும் என்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட்துபோல இம்மாற்றம் எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒன்று.அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நோயை கட்டுப்படுத்துவது கஷ்டம்.

பெண் புரோக்கர் கார்ப்பரேட் லெவலில் தொழில் நட்த்தியிருக்கிறார்.ஆந்திரா சென்று ஒரு வாரத்திற்கு 45000 ரூபாய் பேரம் பேசி இரண்டு பெண்களை அழைத்து வந்த்தாக வாக்குமூலத்தில் பெண்புரோக்கர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலில் இருக்கிறார்கள்.சேலத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.ஏன் ஆந்திரா போக வேண்டும்? கல்லூரி மாணவிகளுக்கு ஏன் வறுமையை பயன்படுத்தி வலை விரிக்க வேண்டும்?

வாடிக்கையாளர்கள் அப்படி தேர்ந்தெடுத்து கேட்பதுதான் காரணம் என்கிறார்கள்.விவஸ்தை கெட்ட பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.நாற்பது சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கும் நாட்டில் இதெல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட சமூகப்பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளவையே! பெற்ற குழந்தைகள் மீது அக்கறையின்றி குடித்துவிட்டு திரிபவன் பிள்ளைகளை பாலியல் தொழிலில் தள்ளுகிறான்.எத்தனை சவரன் போடுவார்கள் என்று கேட்கும் இளைஞன் இவர்களை விபச்சாரத்தில் தள்ளுகிறான்.காதிலோ,கழுத்திலோ தங்கம் இல்லாத பெண் விலை போவது கஷ்டமாக இருக்கிறது.

அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அப்போதுதான் கிழவனுக்கு கல்லூரிப்பெண் கிடைப்பாள்.தவிர இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் தேவைகளும் அதிகமாகிவிட்ட்து.விலைவாசியும் ஏறிப்போய்விட்ட்து.

ஒரே துணியை எத்தனை நாளுக்கு துவைத்து போட்டுக்கொண்டிருப்பது? வீட்டில் ஒரு பொருளும் இல்லை.மாப்பிள்ளை வருவார்களா? இப்படி எத்தனையோ கஷ்டங்கள் ஏழைகளுக்கு! ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருகிறது என்று ஆசை காட்டி பலியாக்குகிறார்கள்.இவர்களை பிரைன்வாஷ் செய்யும் புரோக்கர்களுக்கு இருப்பதில் அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும்.

தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?

மக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.

தமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.

“மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறான்’’ என்கிறார் தியேட்டர் அதிபர் ஒருவர்.”கொஞ்ச நாள்ள அவரும் ஒத்துக்குவார்”என்றேன் நான்.’’பெரும்பாலும் இளஞ்சோடிகள்தான் படம்பார்க்க வருகிறார்கள்.அவர்களும் முடியும் முன்பே கிளம்பி விடுகிறார்கள்’’ என்கிறார்.”தியேட்டரை வேலை செய்யலாம் என்றால் கூட வரும் பணம் போதவில்லை.

சி.டி.யை காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அது முழுதும் உண்மையல்ல! சி.டி.கூட ஓரளவு நல்ல திரைப்படங்களின் சி.டி.தான் விற்பனையாகிறது என்கிறார்கள்.ரசனையில் மாற்றம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. நல்ல கதை,திரைக்கதையின்றி,புதுமையின்றி,உழைப்பில்லாமல் எடுக்கப்படும் சினிமாவும் ஒரு காரணம்.

மோசமான சினிமாக்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து சினிமா ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்றதை தலையில் கட்டுவது ஒரு மோசடியும்கூட.குத்துப்பாட்டு,நாலுஃபைட்,ஆறு பாடல்கள் இருந்தாலே படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு வெந்நீர் ஊற்றிவிட்ட்து.

ஒரு படம் வெளியானவுடன் பிரபல நடிகராக இருந்தால்,அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.மற்றவர்கள் நல்ல விமர்சனம் கேள்விப்பட்டே சினிமாவுக்கு போகிறார்கள்.பிரபல நடிகர்கள் இல்லாத நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் ஓரிருவார இடைவெளியிலேயே வரவேற்பு பெறுவது ஒரு உதாரணம்.

தியேட்டர்களின் லட்சணம்,மூட்டைப்பூச்சி,சமூக விரோதிகள் தொல்லை போன்றவையும் சி.டி. வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்.ஆனால் கிடைக்கும் வருவாயில் பராமரிப்பு செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.அதிக விலை என்றாலும் யாரும் வருவதில்லை.

டி.வி. ஒரு முக்கிய விஷயம்.மோசமான படமென்றால் விரைவில் சின்னத்திரைக்கே வந்துவிட்டுப் போகிறது என்ற நம்பிக்கையும் காரணம்.சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.இதற்கு மோசமான சினிமாவே பரவாயில்லை.

அதிகம் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது ஒரு சூதாட்டம்.நடிகர்,நடிகைகளுக்கும் கவலையில்லை.மிஞ்சிப்போனால் சீரியல்கள் இருக்கிறது.திரைப்பட தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம்.தமிழ்சினிமா தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.