Tuesday, November 22, 2011

பூந்தோட்ட காவல்காரனாகிறார் வல்லரசு!

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றியை தக்க வைத்த, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அடைந்த மோசமான தோல்வியால், துவண்டுபோய் உள்ளனர். பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஓட்டு போட்ட வாக்காளர்கள், எம்.எல்.ஏ.,க்களை தேடும் நிலை தான் அதிகம் உள்ளது.
ராஜ்ஜியம்: தமிழகத்தில், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்த வேளையில், 2005ல் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு, தே.மு.தி.க., எனும் கட்சியை உருவாக்கினார் நடிகர் விஜயகாந்த். "அ.தி.மு.க.,- தி.மு.க., இரண்டு கட்சியுமே, ஊழல் நிறைந்த கட்சி, எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது; மக்களுடன் மட்டுமே கூட்டணி' என, மார்தட்டிக் கொண்டிருந்தார். பா.ம.க., போன்ற கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள் எல்லாம், தே.மு.தி.க.,வில் இணைந்து கட்சி பதவிகளை பிடித்தனர். தனியாக களமிறங்கி, ஓரளவு ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் தே.மு.தி.க., தனித்துவமிக்க கட்சியாக வளர்ந்துள்ளது என, போகும் இடமெல்லாம் விஜயகாந்த் கூறி வந்தார்.
பால பாடம்: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், கட்சி இல்லாமலே போய் விடும். கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் வற்புறுத்தலால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தனர். தேர்தலில், அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆளும் கட்சியாகவும், 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தன. ஆளுங்கட்சியின் தயவால், எப்படியும் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என, தே.மு.தி.க.,வினர் மனக்கணக்கு போட்டனர். இருப்பினும், சட்டசபையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியைப் பற்றி முன்னுரையுடன் பேசிய போது, எங்களுக்கு பால பாடம் நடத்த வேண்டாம் என, முதல்வர் கூறியதைக் கேட்டு, நொந்து போயினர்.உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, ஓரளவு உள்ளாட்சி பதவிகளில் அரியாசனம் ஏறலாம் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வேளையில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பைக் கேட்டு, விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க.,வினர், கதிகலங்கிப் போயினர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர்.

கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்கள், தாங்களும் தலைவர், கவுன்சிலர் பதவியில் அமரலாம் என நினைத்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவில், மோசமான தோல்வியைத் தழுவியதால், கட்சியின் நிலை என்ன என்பது தெரியாததால், கட்சியை விட்டே சென்று விடும் முடிவுக்கு பலர் வந்துள்ளனர்.

ரமணா: ஒரு சிலர், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். தேர்தலுக்குப் பின் ஆளுங்கட்சி தயவில், நாலு காசு பார்த்து விடலாம் என கணக்கு போட்டு செலவு அளித்த நிர்வாகிகள், செய்வதறியாது நிற்கின்றனர். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் நிலையோ பரிதாபமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த, "எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எந்த ஒரு கான்ட்ராக்டிலும் கமிஷன் வாங்கமாட்டார்கள். கமிஷன் வாங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிப்பேன்' என உறுதிமொழியளித்தார். லட்சக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற பிறகு, போட்ட காசை எடுக்க வேண்டாமா என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் முணகுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் எங்கே இருக்கின்றனர் என, பொதுமக்கள் தேடும் நிலை உள்ளது.மக்களின் அடிப்படை பிரச்னைகள், மக்கள் நலப்பணியாளர் நீக்கம், பஸ், பால் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆதரவாக, சாதாரண அமைப்புகளே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் போது, மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல், தே.மு.தி.க.,வினர் இருப்பது, பொதுமக்களையும், ஓட்டு போட்ட வாக்காளர்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

ஊமை விழிகள்: ஆரம்பத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் வலம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், இப்போது, "கப்சிப்' என உள்ளனர். தொகுதி பக்கமும் செல்வதில்லை. உள்ளாட்சி நிர்வாகிகள் கட்சி தாவும் நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களில் சிலர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக நேரம் பார்த்து வருகின்றனர். மக்கள் பிரச்னைக்காக போராடாத கட்சியினர், எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள். அரசியல் என்ன லாபம் பார்க்கும் வியாபார தலமா என, எதிர்க்கட்சியினர், தே.மு.தி.க.,வை கேலி செய்யும் நிலை உள்ளது. இதற்கிடையில், விஜயகாந்தின் நடவடிக்கையை வைத்து, அதிரடி நடவடிக்கையில் இறங்க, ஆளுங்கட்சி தரப்பிலும் காய் நகர்த்தும் படலம் துவங்கி விட்டது. கணிசமான எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் மூலம், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சிக்கல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுநாள் வரை, கட்சியினர் மத்தியில், நானே ராஜா, நானே மந்திரி என ராஜநடை போட்டு வந்த வல்லரசு, இப்போது தனது கட்சியின் பூந்தோட்டத்தை ( எம்.எல்.ஏ.,க்களை) பாதுகாக்க வேண்டி, காவல்காரனாக வலம் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கேயும் விருந்தா...:தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி அடைந்தவர்களுக்கு விருந்து வைத்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அவர்களை கட்சியிலேயே தொடர்ந்து நீடிக்க வைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.தேர்தலில் தோற்றவர்களைத் தேற்றவும், வெற்றி பெற்றவர்களை, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்க வைக்கும் புது வியூகத்தை, தே.மு.தி.க., தலைமை அரங்கேற்றி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலில் வெற்றி, தோல்வி அடைந்த நிர்வாகிகள், அதற்காக உழைத்த தொண்டர்களை வரவழைத்து விருந்து நடத்தப்படுகிறது. சமீபத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், புழலில் முதலில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய நான்கு சென்னை மாநகராட்சி மண்டலங்கள் இடம்பெறுகின்றன. அதனால், இந்த விருந்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற தே.மு.தி.க.,வினர் பலர் பங்கேற்றனர்.வழக்கமாக தே.மு.தி.க., விழாக்களில் மட்டன், சிக்கன் வறுவல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கார்த்திகை மாதம் என்பதால், அசைவ உணவுகளுக்கு பதில், "மஸ்ரூம்' பிரியாணி, முந்திரி அல்வா, பாதாம் கீர் ஆகிய சைவ உணவுகள் மட்டும் பறிமாறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.,விலும் இதேபோன்ற விழா அரங்கேறியுள்ளது. இவ்விழாவின் போது, விஜயகாந்த் எழுதிய வாசகங்கள் அடங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனர். சில மாவட்டங்களில் தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, "உற்சாக' விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாணியில் அடுத்தடுத்து விருந்தளித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருக்கிறது.

நாள் குறிச்சாச்சு நாளை மறுநாள் உண்ணாவிரதம் : பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து வரும் 24ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மதுரையில், நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் பேசிய அவர்,"விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார். அதன்படி வரும் 24ம்தேதி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அதேநாளில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியை முடக்குகிறது அமலாக்கப் பிரிவு

தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் ‌வெளியாகி உள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவ‌தாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வைத்துள்ளவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கப்பிரிவு களமிறங்கியது.

முதற்கட்டமாக, ஷாகித் ஹுசேன் பால்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் வரை நிம்மதியாக இருங்க...

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துரத்தும் நஷ்டக்கணக்கு... : புதிய கட்டண முறை, வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வு குறித்த மின் வாரியத்தின் கணிப்பு பட்டியலுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து, மாற்றமின்றி அமலுக்கு வந்தால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும்.அதேநேரம், 2012-13ம் நிதியாண்டிற்கான கணக்கில், 63,593 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆண்டு நஷ்டம், 14,500 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், வாரியத்திற்கு வரும் 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் போக, மீதமுள்ள 5,000 கோடி ரூபாய், மின் வாரிய நஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல், நிலக்கரி இறக்குமதி, வெளிச்சந்தை மின்சாரம், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பென்ஷன், தேய்மானம், பராமரிப்பு, மின்பகிர்மான இழப்பு ஆகிய செலவுகளை கணக்கிடும்போது, மின் கட்டணத்தை உயர்த்தினாலும், மின் வாரியம் மீள முடியாத நிலையையே காட்டுகிறது.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.

மக்களிடம் கருத்து கேட்பு...:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

அறிவில் மனிதனை கம்ப்யூட்டர் மிஞ்சிவிடும் அபாயம்


இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.


இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
கணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.

இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.

அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.

எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.

இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.

அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்

இன்னொரு வாழைப்பழ ஜோக்

ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் என்பார்கள். வாழைப்பழங்களிலும் ஒவ்வொரு வகை உண்டு என்பது நாமறிந்ததே.

இந்த வாழைப்பழங்களுக்கும் வித்தியாசமான உருவங்கள் அமைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது ஒருவருக்கு. ஜப்பானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைக் கொண்டு தனது கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.



பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம்


முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)






நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர். சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..

Google தந்திரங்கள்!


கூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள் வழங்கும் சேவைகளான மின்னஞ்சல் (Gmail), யுடியூப் (You Tube) ஆகியன பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான கூகிள் வழங்கும் இணைய சேவைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் பயன்மிக்க சில சிறப்பியல்புகளை(Features) சுட்டிக் காட்டுவது தான் இந்தப் பதிவின் நோக்கம். 
எல்லா வகையான கோப்புகளையும் (Files) இணைய மேலோடியினுள் (Browser) பார்வையிடல். 

Google Docs Viewer என்ற இணையப் பக்கதிற்கு சென்று நீங்கள் பார்வையிட விரும்பும் கோப்பின் முகவரியை தருவதன் மூலம் அதனைப் பார்வையிட முடியும். எந்தக் கோப்புகளைப் பார்வையிடலாம் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு அழுத்துங்கள்.

பொதுவாக ஜிமெயிலில் உங்களுக்கு இணைப்புகள் (Attachments) அனுப்பப்பட்டிருப்பின் அவற்றை தரவிறக்காமல் பார்வையிடுவதற்கான வசதியை ஜிமெயில் வழங்குவதை பலரும் அறிந்திருக்கலாம். (படம் பார்க்க)

கோப்பு ஒன்றினை பார்வையிடுவதற்கான முகவரியை அனுப்புதல் 


மேலே குறிப்பிடப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தி ஒரு கோப்பிற்கான முகவரியை உருவாக்கி அதனை மற்றவா்களோடு பகிர்வதன் மூலம் அவா்கள் அந்தக் கோப்பினை பார்வையிட முடியும்.

இதன் மூலம் உருவாக்கப்படும் முகவரி இவ்வாறு தொடங்கும்.

http://docs.google.com/viewer?url=

இதன் பின் பகுதியில் உண்மையில் பார்வையிட வேண்டிய கோப்பின் முகவரி இடம்பெறும்.

உதாரணமாக கோப்பின் முகவரி - http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd (இது ஒரு Photoshop கோப்பு)

இதனை பார்வையிடுவதற்கான முழுமையான முகவரி

http இற்குப் பதிலாக https ஐ பயன்படுத்தி பாதுகாப்பாக கூகிளின் சேவைகளை பயன்படுத்தல். 


பொதுவாக கூகிளின் சேவைகளை http இற்கு “s” சோ்த்து பயன்படுத்த முடியும். உதாரணமாக மேலே சொல்லப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தும் போது http://docs.google.com/viewer இற்குப் பதிலாகhttps://docs.google.com/viewer மூலம் இதனை அணுகலாம்.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது எப்போதும் https ஐ பயன்படுத்துமாறு மாற்றி அமைப்பதன் மூலம் பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தலாம். இதனைச் செய்வதற்கு உங்கள் ஜிமெயிலின்Mail Settings சென்று Always use https என்பதைத் தெரிவு செய்யவும்.

உங்கள் மின்னஞ்சல்(அதாவது Gmail) எப்போது எங்கிருந்து எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ளுதல் 


கடைசியாக உங்கள் Gmail எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ள Gmail ஐ திறந்து கீழே சென்றுDetails என்பதை கிளிக் செய்து கடைசி 10 முறை எவ்வாறு அணுகப்பட்டது என்று பார்க்கலாம். (ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அணுகல் இருப்பின் கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது.)

கூகிளின் சேவைகள் தடையின்றி இயங்குகின்றனவா என்று தெரிந்து கொள்ளல் 


சில நேரங்களில் கூகிளின் சேவை ஒன்று ஒழுங்காக அல்லது முற்றாக வேலை செய்யாமல் எம்மை வெறுப்பிற்கு உள்ளாக்கும். கூகிளின் சேவைகள் வேலை செய்கிறதா என்று பார்க்க Google Apps Status Dashboard இற்குச் செல்லுங்கள்.