Thursday, April 7, 2011

மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்

குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்னைகள் வருகின்றன?’
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா பழக முடியல.’
சொன்னவனின் சிக்கல் குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
ஆண்ட்ரூ கார்னகி என்று அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரர். அமெரிக்காவின் முதல் பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி தொழில் துவங்கி, பெரும் பணக்காரர் ஆனவர்.
ஒருமுறை அவரிடம் இன்னொரு தொழிலதிபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“எப்படி உங்களால் இவ்வளவு முன்னேற முடிந்தது. நானும் உங்களை மாதிரிதான் தொழில் துவங்கினேன். ஆனால் என்னால் வளர முடியவில்லையே?’ என்று கேள்வியைக் கேட்டார்.
“என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய ஊழியர்கள். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது’ என்ற கார்னகி பதிலளித்தார்.
“உங்களுக்கு மட்டும் எப்படி நல்ல ஊழியர்கள் கிடைத்தார்கள். எங்கள் நிறுவனத்துக்கு அப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கவில்லையே. நானும் எத்தனையோ பேரை முயற்சி செய்து பார்த்துவிட்டேன்!’
அதற்கு கார்னகி அந்த தொழிலதிபருக்கு ஒரு உதாரணத்தைச் சொன்னார்.
“தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கிறவர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களுடைய ஒரே இலக்கு தங்கத்தை சேகரிப்பதாகத்தான் இருக்கும். அப்படி தங்கத்தை எடுக்கும் போது வரும் மாசுக்களை பொருட்படுத்துவது கிடையாது. மாசுக்கள் நீக்கினால் தங்கம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் நான் மனிதர்களிடத்தில் இருக்கும் நல்ல திறமைகளை மட்டுமே பார்க்கிறேன். அவற்றை மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன். மாசுக்களை பொருட்படுத்துவதில்லை.’
கார்னகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னிடம் உள்ள குறை புரிந்தது. அப்போது குரு, அவனுக்கு சொன்ன WINமொழி:
மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்.

வேர்ட் டிப்ஸ்-வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த



வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த
வேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப்பட்டிருக்கும் வரிசை சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற்கும் இடையே வைத்திட எண்ணுகிறீர்கள். நான்காவ தனை இறுதியாகக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பு கிறீர்கள். அல்லது நெட்டு வரிசையிலும் இதே போல மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிடுகிறீர்கள். மாற்றங்கள் அதிகம் தேவைப்படுவதால், புதிய டேபிள் ஒன்றை உருவாக்கி, அதில் படுக்கை மற்றும் நெட்டு வரிசைகளைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட எண்ணலாம். அல்லது, இருக்கின்ற டேபிளிலேயே வரிசைகளைக் காப்பி செய்து மேலும் கீழுமாக மாற்றலாம். ஆனால் இவற்றில் குழப்பம் தான் மிஞ்சும். மேலும் காப்பி அண்ட் பேஸ்ட் செய்வதில் தவறு ஏற்பட்டால், மொத்த வேலையும் வீணாகும்.
இதற்குப் பதிலாக, வேர்ட் ஓர் எளிய வழியைத் தருகிறது. நகர்த்த வேண்டிய படுக்கை அல்லது நெட்டு வரிசையினை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அதில் கர்சரை வைத்து அழுத்தியவாறு எங்கு அந்த வரிசை அமைய வேண்டுமோ, அந்த இடத்தை நோக்கி இழுக்கவும். இப்போது வரிசையோ அல்லது அதில் உள்ள டேட்டாவோ நகராது. அதற்குப் பதிலாகச் சற்றுப் பெரிய கர்சர் ஒன்று நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். மவுஸ் கர்சரை விட்டவுடன், குறிப்பிட்ட வரிசை, கர்சரை எங்கு இழுத்துச் சென்றீர்களோ, அங்கு அதன் டேட்டாவுடன் அமைக்கப் படுவதனைப் பார்க்கலாம். படுக்கை வரிசையினை நகர்த்துகையில், தேர்ந்தெடுத்த பின்னர், அதன் இடது ஓர செல்லில் கர்சரை வைத்து இழுக்கவும். வேறு செல்லில் கர்சரை வைத்து இழுக்கையில், டேட்டா மட்டும் வரிசையின் இறுதி செல்லுக்கு எடுத்துச் செல்லப்படும்.
மெனுவிலிருந்து எஸ்கேப்: 
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட் டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனு மீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

பாரா காப்பி:
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.
இருவகை அடிக்கோடு:
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டபிள்யு.
வேர்டில் டேட்டா சார்ட்டிங்: ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள் ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப் படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப் படுத்தலாம்.
தொடக்கங்களுக்குச் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
இப்படியும் டேபிள் உருவாக்கலாம்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் — டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக படுக்கை வரிசைத் தகவல்களை ஒரு கமா இட்டு அடிக்க வேண்டும். இதே போல நெட்டு வரிசைகளையும் வரிசையாக அமைக்க வேண்டும். பின் இவற்றை செலக்ட் செய்து “Table > Insert Table”. செலக்ட் செய்து கிளிக் செய்தால் டேபிள் உருவாகி நீங்கள் டைப் செய்த தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் அமர்ந்திருக்கும். அகலத்தினை சுருக்கலாம்; நீட்டலாம். இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் “Table > Table Autoformat” என்ற பிரிவில் கிளிக் செய்தால் பல வகை டேபிள்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் தேவையான டேபிள் அமைப்பைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
எழுத்துக்களின் அளவு
வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகையின் அளவு அமைப்பதுபற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே டைப் செய்திடலாம். 1 முதல் 1638 வரை இதன் அளவை அமைக்கலாம். எழுத்தின் அளவை அரை மாத்திரை கூட கூட்டலாம். எடுத்துக் காட்டாக 11.5, 12.5 என்று கூட அமைக்கலாம்.
எழுத்தின் அளவினை அமைக்க, அதன் கட்டத்தில் கர்சரை எடுத்துச் செல்லாமலும் அமைக்கலாம். இதற்கு [Ctrl][Shift]> என்ற கீகளை அழுத்தினால், எழுத்தின் அளவு கட்டத்தில் அளவு அதிகமாவதைக் காணலாம். நீங்கள் விரும்பும் அளவு வந்தவுடன் அப்படியே விட்டுவிடலாம். இதனையே குறைக்க வேண்டும் என்றால் [Ctrl][Shift] என்ற கீகளை அழுத்தலாம்.
எழுத்தின் அளவை ஒரு பாய்ண்ட் அதிகரிக்க Ctrl+] என்ற கீகளை அழுத்த வேண்டும். இதனையே குறைக்க எனில் Ctrl+[ என்ற கீகளைப் பயன்படுத்தவும்.

மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்


நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில்லை. மின்சக்தியைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அதனால், மின்சக்தி செலவாகிறது என்பது நம் கண்கூடாகக் காணும் ஒரு விஷயமாகிறது. ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இதன் பயன்பாட்டில் நாம் மிச்சப்படுத்தும் மின்சாரமும் நமக்கு ஒரு சக்திதான். எனவே எந்த வகையில் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம் எனச் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.
1: ஸ்விட்ச் ஆப்: பயன்படுத்தாத போது மின் சக்தியை நிறுத்திட வேண்டும். அல்லது ஹைபர்னேட் மோடில் நிறுத்திட வேண்டும். கம்ப்யூட்டர் அப்போது “உறக்கத்தில்’ (Sleep mode) இருக்கும். தேவைப்படுகையில், மீண்டும் இயக்கத் திற்குக் கொண்டு வரலாம்.
2. துணை சாதனங்களை விலக்கல்: நாம் பயன்படுத்தாத போது, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர், பிரிண்டர், ஸ்பீக்கர்களின் இணைப்பை நீக்கலாம். இந்த துணை சாதனங்கள் ஏதேனும் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப் பட்டு, அந்த ஸ்விட்ச் போர்டின் மின் இணைப்பை மொத்தமாகத் துண்டிக்க வசதி இல்லை என்றால், இவற்றின் இணைப்பு கேபிளை நீக்கிவிடலாம். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில் சிறிய அளவு மின் சக்தியை இவை பெற்றுக் கொண்டிருக்கும். குறைந்த வாட் அளவு மின் சக்தியை இவை எடுத்துக் கொண்டிருந்தாலும், அதனை நிறுத்துவது, தொடர் நாட்களில் பெரிய அளவில் மின் சக்தியை மிச்சப்படுத்தும்
.
3. பவர் மேனேஜ்மெண்ட்: நம் கம்ப்யூட்டரில் பவர் மேனேஜ்மெண்ட் பிளான் என்னும் திட்டம் பதியப்பட்டு தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டர் தன் செயல்பாட்டிற்கு எப்படி மின் சக்தியை இழுக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Start கிளிக் செய்து, Control Panel செல்லவும். Hardware And Sound என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் பவர் திட்டங்களை ஆய்வு செய்திடவும். Change Plan Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு display, sleep, and brightness settings ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்திடவும்.
4.ஸ்கிரீன் சேவர் தேவையா? பலர் கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் சேவர் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். இதற்காக விதம் விதமாய் ஸ்கிரீன் சேவர்களை இணையத்தில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் பெற்று பயன்படுத்துகின்றனர். இந்த ஆசை கொண்டவர்கள், பெரும்பாலும் அனி மேஷன் உள்ள ஸ்கிரீன் சேவர்களையே அமைக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கிய காலத்தில், திரைக் காட்சிகள் உறையாமல் இருக்க இது தேவையாய் இருந்தது. நவீன தொழில் நுட்பத்தில் ஸ்கிரீன் சேவர்கள், செயல் அடிப்படையில் தேவையற்ற ஒன்றுதான். எனவே அவற்றை எடுத்துவிடுங்கள். அல்லது மானிட்டரையே ஸ்விட்ச் ஆப் செய்து, பின் தேவைப்படும்போது ஸ்விட்ச் போட்டு காட்சியைக் கொண்டு வரலாம்.
5. ஒரு கண் வைக்கவும்: மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களுடன், உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. நான் பயன்படுத்துவது co2saver என்பதாகும். இதனைhttp://co2saver.snap.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத் தூண்டும்.

மொபைல் போன்: சில ஆலோசனைகள்


மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

வானிலையை எப்படி அறிகிறார்கள்?


வானிலையியல் என்பது வளிமண்டலத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களால் உண்டாகும் காற்று, மழை போன்ற இயற்கையின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான முறையாகும். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய வானிலையியல், சற்றுக் கடினமான ஒரு விஞ்ஞானம் ஆகும்.
நவீன வானிலையியல், கி.பி. 1709-ம் ஆண்டு காற்றழுத்தமானி, பாதரச வெப்பமானி போன்ற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தோன்றியதாகக் கூறலாம்.
இந்தியாவில் முதல் வானிலையியல் ஆய்வுக் கூடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 1892-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியால் தொடங்கப்பட்டது.
பல தீவிரமான புயல்கள், மழையின்மை காரணமாக உண்டான கடும் பஞ்சங்கள் அன்றைய அரசாங்கத்தை உலுக்கின. அதன் விளைவாக, 1875-ம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய வானிலைத் துறை அமைக்கப்பட்டது. அதன் கிளை தற்காலிகமாக சிம்லாவில் நிறுவப்பட்டது.
ஆரம்ப காலத்தில், வானிலை ஆய்வுக் குறிப்புகளைப் பதிவு செய்ய சில நிலமட்ட ஆய்வுக் குறிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. அவற்றில், காற்றின் அழுத்தம், வெப்பநிலை, காற்றின் திசை, வேகம், மழை அளவு, காற்றில் உள்ள ஈரப்பதம், மேகங்களின் தன்மை, அளவுகள், சமநோக்குதூரம், அப்போதைய வானிலையை அளப்பதற்கு முன், ஒரு மணி நேரத்தின் வானிலை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் தற்போது இந்தியாவில் 571 நிலமட்ட வானிலை ஆய்வுக்கூடங்கள் உள்ளன. தென்துருவத்துக்கு அருகில் அண்டார்டிகாவிலும் நமது வானிலை ஆய்வுக்கூடம் உள்ளது.

இவற்றில் பெரும்பாலான நிலையங்கள் மூன்று மணிக்கு ஒருமுறை மேலே குறிப்பிட்ட வானிலைக் குறிப்புகளைச் சம்பந்தப்பட்ட வானிலை மையங் களுக்கு அனுப்புகின்றன. அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற நிலையங்கள் உள்ளன.
பலூன் மூலம், மேல்மட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் கணிக்கும் 63 ஆய்வுக்கூடங்கள் நம் நாட்டில் உள்ளன. பலூன் மூலம் ஆய்வு நடத்தும் `ரேடியோ சாண்ட்’ வாயிலாக வளிமண்டலத்தில் 25- 30 கிலோமீட்டர் உயரத்தில் வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் பற்றி ஆராயவும் 34 கூடங்கள் உள்ளன. ரேடியோ நுண்ணலைகள் வாயிலாக காற்றின் திசை, வேகம் அறியும் ரேடார் நிலையங்கள் உள்ளன. புயலைக் கண்டறியும் ரேடார்களும் உள்ளன.
ஒரு வானிலை அறிவிப்பில் மூன்று வகையான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
முதல் வகையில், எந்த வகை சந்தேகமும் இல்லாத வாக்கியங்கள் உபயோகிக்கப்படும். உதாரணமாக, `இன்று வானம் தெளிவாக இருக்கும்’, `நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும்.’
இரண்டாவது வகையில் சந்தேகம் தொனிக்கும். `அனேகமாக’, `உண்டாகக்கூடிய’, `வாய்ப்புகள்’ போன்ற வார்த்தைகள் இடம்பெறும்.
மூன்றாவது வகையில், `மழை உண்டாகக்கூடிய சூழ்நிலைகள் சாதகமாக உள்ளன’, `மழை பெய்யலாம்’ என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கும்.
———————————————————-
`மிகைப்படுத்தல்’ ஏன்?
ஒரு வானிலை முன்னறிவிப்பில் சிலநேரங்களில், `சற்றே மிகைப்படுத்தல்’ தவிர்க்க முடியாதது. சிறிய வாய்ப்பே இருந்தாலும், பலத்த காற்று பற்றிய எச்சரிக்கையை வானிலை மையங்கள் வெளியிடும். அதை ஆங்கிலத்தில், `To erron the safeside’ என்கிறார்கள். இதில் பலத்த காற்று வீசும் வாய்ப்புக்கான சதவீதம் குறைவாக இருந்தாலும், ஒருவேளை பலத்த காற்று வீசினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

Tuesday, April 5, 2011

தமிழ் குரோம் Transliterate extension


அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!




நுட்பங்களின் அறுசுவை


கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது