Tuesday, July 12, 2011

ராணா படத்தில் ரஜினியுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா?

ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.


ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ராணா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் அவருடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பதும் தெரிந்ததே. இதைத் தவிர மற்ற தகவல்கள் காற்றுவழிச் செய்தியாகவே இருந்தன.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ராணா படத்தை பற்றி கற்பனையான தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு தகவல்கள் வந்ததில்லை.
'சுல்தான் தி வாரியர்' படத்தைத்தான் 'ராணா' என்ற பெயரில் தயாரிப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். 'சுல்தான் தி வாரியர்' படத்தை நான் இயக்குவதாக இருந்தது உண்மைதான். பின்னர் அது உறுதி செய்யப்படவில்லை.

ரஜினிகாந்த் என்னிடம் வேறு ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 'சுல்தான் தி வாரியர்' கதைக்கும், 'ராணா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. 'சுல்தான் தி வாரியர்,' சௌந்தர்யாவின் படம். அந்தப் படத்தை அவர்தான் டைரக்டு செய்கிறார். 'ராணா' படத்தில், அவர் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார்.

ரேகாவுடன் பேசவே இல்லை!

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ரேகா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளியான தகவல், முற்றிலும் தவறானது. சத்தியமாக நான் ரேகாவுடம் பேசவில்லை. அதுபோல் ஹேமாமாலினியுடனும் பேசவில்லை.

அசினுடனும் நான் பேசவில்லை. அவர் என் டைரக்ஷனில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை வந்தால், என் அலுவலகத்துக்கு வருவார். நான் மும்பை சென்றால், அவருடைய வீட்டில் போய் சாப்பிடுவேன். அவ்வளவு நட்பானவர், அசின். அவருடன் பேசியதாக வெளியானதும் தவறான தகவல்தான்.

சரித்திர படம்

நிறைய கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்பது உண்மை. படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன. 'ராணா,' ஒரு சரித்திர படம். வேறு எந்த படத்துடனும் இந்த படத்தை ஒப்பிட விரும்பவில்லை.

12 வருடங்கள் கழித்து நான் ரஜினி படத்தை டைரக்டு செய்கிறேன். என்றாலும் இடையில் நாங்கள் இருவரும் பேசாமல் இல்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்.

7 கதாநாயகிகள்... மூன்று ஜோடிகள்!

'ராணா,' 17-ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. இந்த படத்தில், ரஜினியுடன் ஆறு அல்லது ஏழு கதாநாயகிகள் இணைந்து நடிப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு ஜோடி அல்ல. மூன்று கதாநாயகிகள்தான் அவருக்கு ஜோடி. தீபிகா படுகோனே மட்டும் 'மெயின்' கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். வித்யாபாலனுடன் நான் போனில் பேசியது உண்மைதான். ஆனால், அவர் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினியுடன் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக, கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ரூ.100 கோடி செலவில்...

'ராணா' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் லண்டனில் தொடங்கும். சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடைபெறும்,'' என்றார் ரவிக்குமார்.

No comments:

Post a Comment