அந்தப் பெண் வழக்கில் வெற்றியடையும் கட்டத்தில், அவருக்குப் பாதகமாக வந்து சேர்ந்தது ஒரு ஆதாரம்!
மெல்போர்ன், ஆஸ்திரேலியா: Skilled migration visa விண்ணப்பம் தமது அலுவலகத்தை ஒரு நிமிடம் தாமதமாக வந்தடைந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என ஆஸ்திரேலிய இமிகிரேஷன் திணைக்களம் தெரிவித்துள்ளது! அத்துடன் குறிப்பிட்ட அந்த விண்ணப்பம் சரியான முறையில் வந்து சேரவில்லை எனவும் கூறியுள்ளது.
Skilled migration visa விண்ணப்பங்கள் இ-மெயில் மூலம், அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய இமிகிரேஷன் தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட இந்த விண்ணப்பம் பேக்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
டடென்டா முராட்சி என்ற 25 வயதுப் பெண்ணின் விண்ணப்பமே இந்தக் காரணங்களால் ஆஸ்திரேலிய இமிகிரேஷனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டடென்டா, ஆஸ்திரேலிய இமிகிரேஷனுக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி விசாவில் படித்துவந்த டடென்டா, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு Skilled migration விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருந்தது. விண்ணப்பம் சரியான முறையில் நிரப்பப்பட்டிருந்தது. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய சகல ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
டடென்டா முராட்சி
அப்படியிருந்தும் விசா நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், ஆஸ்திரேலிய இமிகிரேஷன் இலாகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய இமிகிரேஷன் அதிகாரி, “இ-மெயில் அல்லது கூரியரில் அனுப்பப்படாத காரணத்தால், விண்ணப்பத்தை நிராகரித்தோம்” என்று முதலில் கூறிய காரணம், நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அந்தக் கட்டத்தில் வழக்கில் இமிகிரேஷன் தரப்பு தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.
அதன்பின், பேக்ஸில் வந்த டடென்டா முராட்சியின் விண்ணப்பத்தை ஆராய்ந்தபோது, அதில் பேக்ஸ் வந்து சேர்ந்த தேதி மற்றும் நேரம் ஆகியவை பதிவாகியிருந்தன. மார்ச் 15ம் தேதி 17.01 மணிக்கு பேக்ஸ் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதையடுத்து இமிகிரேஷன் இலாகா, தனது வாதத்தை மாற்றிக் கொண்டது.
“குறிப்பிட்ட விசா விண்ணப்பங்களுக்கான இறுதித் தேதி, மார்ச் மாதம் 15ம் தேதி. இமிகிரேஷன் இலாகாவின் அலுவலக நேரம் 5 மணியுடன் முடிகின்றது. இந்த விண்ணப்பம் 5.01க்கு வந்து சேர்ந்த காரணத்தால், இறுதித் தேதியைக் கடந்து விட்டது” என்பது இமிகிரேஷன் இலாகாவின் புதிய வாதம்.
இந்த வாதம் நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“டடென்டா முராட்சி மீது நான் அனுதாபம் கொள்வதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது. அவரது விண்ணப்பம் 1 நிமிடம் தாமதமாக வந்துள்ளது, விசா நிராகரிப்புக்குச் சரியான காரணமே” என்று கூறியுள்ள நீதிபதி, “மனிதாபிமான அடிப்படையில் கோர்ட் செலவுக்கான பணத்தை இமிகிரேஷன் இலாகா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
ஒரு நிமிடத்தை வைத்து, ஒருவருடைய எதிர்காலத்துடன் விளையாடியிருக்கிறதே இமிகிரேஷன்!
|
No comments:
Post a Comment