ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இயக்கிவரும் ‘BIG Cinemas’ தியேட்டர்கள், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தமது கதவுகளைத் திறந்துள்ளன. வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இது சாத்தியமாகியுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
“இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு வெளிநாடுகளில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ் மீடியா வேர்க்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி அனில் அர்ஜூன், “இதனால்தான், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தியேட்டர்களை வெற்றிகரமாக இயக்க எம்மால் முடிகின்றது” என்கிறார்.
‘BIG Cinemas’ தியேட்டர்கள், 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜேர்சியிலும், ஜோர்ஜியாவிலும் முதன்முதலாகத் தமது தியேட்டர்களைத் திறந்தது. தற்போது ‘BIG Cinemas’ தியேட்டர்கள், Illinois, California, Florida, Georgia, Kansas, Kentucky, Nevada, New Jersey, New York, North Carolina, Ohio, Tennessee, Virginia ஆகிய மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மொத்தம் 24 நகரங்களில், 250 தியேட்டர்களை நடாத்துகின்றது ரிலையன்ஸ். அமெரிக்காவில் திரையிடப்படும் 20-30% ஹிந்திப் படங்களும், 70% தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களும் தமது நிறுவனத்தாலேயே வெளியிடப்படுவதாகக் கூறுகின்றது ரிலையன்ஸ்.
“எமது தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், வெளிநாட்டுவாழ் இந்தியர்களாலேயே அதிகம் பார்க்கப்படுகின்றன என்றும் கூறியுள்ள அனில் அர்ஜூன், ஸ்டார் வேல்யூ உடைய திரைப்படங்களான Dabangg, 3 Idiots, My Name is Khan, Robot போன்றவை, தியேட்டரின் 100% சீட்கள் நிரம்பிய நிலையில் காண்பிக்கப்படுவது சகஜம்” என்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், மலேசியா, மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் தற்போது தியேட்டர்களைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். மலேசியாவில் இவர்களால் 72 தியேட்டர்கள் நடாத்தப்படுகின்றன.
சமீப காலமாக இந்தியத் திரைப்படங்கள் இன்டர்நேஷனல் பேனர்களில் தயாரிக்கப்படத் தொடங்கியுள்ளன. My Name is Khan, Kites ஆகிய திரைப்படங்கள் இப்படித் தயாரிக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படங்கள். ஹாலிவூட் திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் வரிசைகளிலும் இந்தத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆரம்ப நாட்களில் குறைந்தளவு காப்பிகள், மற்றும் தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களை, அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது 3 Idiots திரைப்படம்தான் என்கிறார் அனில் அர்ஜூன். “தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களும், வெளிநாட்டு மார்க்கெட்டையும் மனதில் வைத்தே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் கூறுகிறார் அவர்.
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில், அதிக சதவீதமான ரசிகர்கள் ஈழத் தமிழர்கள் என்பதே நிலை. இதனால், வெளிநாட்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஈழத் தமிழர்களை மனதில் வைத்தும் சில காட்சிகளைச் சேர்ப்பது நடைபெறுகின்றது.
|
No comments:
Post a Comment