நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் முடிந்த பின்னும் முற்றிலுமாக ஊழலை ஒழிக்க இயலவில்லை. ஆட்சிக்கு வருபவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் மேடைதோறும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை முற்றிலும் ஒழிப்போம்” எனக் கோஷம் மட்டுமே போடுகிறார்கள். மத்தியிலும் சரி அல்லது மாநிலத்திலும் சரி ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலுக்காக தண்டனை பெற்றார்கள் என்று இதுவரை கூற இயலாது.
நாடு விடுதலை பெற்ற ஆரம்பத்தில் ராணுவத்திற்காக வாங்கிய ஜீப்பில் ஊழல் செய்தார்கள்; ஊழல் புரிந்த கிருஷ்ண மேனன் மத்திய இராணுவ அமைச்சர் பதவி பெற்றார். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் வேறு காரணங்களைக் கூறித் தப்பி விடுகிறார்கள். மிகப் பெரிய ஊழல் நாயகர்களைப் பதவி விலகல் என்று கூறி தப்பிக்க விடுகிறார்கள். இதுதான் கடந்த 64 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடந்து வரும் கதை.
“எம்.எல்.ஏ. க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம்” கொண்டுவரப்பட்டதாக 27.8.1969ல் தமிழக சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி தெரிவித்தார்.
இவ்வளவு வெளிப்படையான கருத்தைக் கொண்ட தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக நாட்டையே தட்டி எழுப்பிய அன்னா ஹசாரேவைப் பற்றி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்றைய தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் அடுத்த ஆட்சி எனது தலைமையில் அமையப் போகுது என்று கூறுபவருமான ஜெயலலிதாவும் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
1967லிருந்து தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் திமுகவும் அஇஅதிமுகவும். கடந்த 44 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் புரையோடியுள்ளது. எல்லா மட்டத்திலும் கையூட்டு இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறாது என்கிற எண்ணம் எல்லா தட்டு மக்களிடமும் காணப்படுகிறது. இந்த எண்ணம் ஏற்படத் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் சுயநல ஆசையே முக்கிய காரணமாக அமைந்தது.
1969ல் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்ட வந்த தமிழக முதல்வர் அன்னா ஹசாரேவின் போராட்டத்தைப் பற்றிய கருத்துக்களைக் கூற முன் வராதது வியப்பளிக்கிறது. உண்மை பல நேரங்களில் ஊமையாகிவிடும் போலும்.
அடுத்து ஆட்சிக்கு வரப் பணம் முக்கிய காரணி எனக் கருதியாதால் ஊழல் ஒரு அரசியல் அங்கமாக மாறிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அங்கம் வகித்து அமைச்சர் பதவியை பெற்றவர்கள் திமுகவினரும் அஇஅதிமுகவினரும்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் திமுக அங்கம் பெற்று முக்கிய இலாக்காக்களை பெற்றுக் கொண்டுள்ளார்கள். தங்களுக்குத் தேவையான இலாக்காக்களைப் பெற டெல்லி சென்ற முதல்வர், உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் 1969லிருந்து கிடப்பிலே இருக்கும் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கலாம்.
1969ல் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளை விசாரிக்க லோக்பால் சட்டமும், மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க லோக் ஆயுத்த குழுவும் நியமிக்கப்பட்ட வேண்டும் என்று நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்த பரிந்துரையைக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமில்லாமல் இந்த மசோதா மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
இருவரும் ஜன் லோக்பால் மாசோதா கொண்டு வர நியமிக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் நம்பகத்தன்மையைப் பற்றிக் கூடத் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கானக் காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்கு பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.
இந்த மசோதாவின் முக்கிய ஷரத்து, குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தித் தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும். இந்த அம்சம் ஜெயலலிதாவிற்கு ஏற்புடையதல்ல. ஏன் என்றால் 2001ல் தொடுக்கப்பட்ட அன்னியச் செலவாணி மோசடி வழக்கிலும், 2000ம் வருடம் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலும் ஆண்டுகள் 10க்கு மேல் ஆனாலும் இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லை. ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.
ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் வழக்குத் தொடுக்க வேண்டுமானால் மாநில ஆளுநர் அனுமதி கிடைக்க வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்குப் பல ஆண்டுகள் ஆன கதையும் உண்டு. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடந்துள்ளது. ஆகவே அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும் என 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு 16 மாதங்கள் வரை பதில் கொடுக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆனால், ஜன் லோக்பால் மசோதா சட்டமானால், பிரதமராக இருந்தாலும் அல்லது முதல்வராக இருந்தாலும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் அனுமதியில்லாமல் வழக்குத் தொடரலாம் என்பது முக்கிய அம்சமாகும்.
ஆகவே, இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும். ஏன் என்றால் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ204 கோடி கிடைத்த வழக்கு வரும்போது நேரடியாக பாதிக்கப்படுவது தமிழக முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனவே இருவரும் இதுவரை கருத்து கூறாதது மசோதாவின் வரைவு அம்சங்கள் அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையே வெளிக்காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இந்த மசோதாவைப் பற்றி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அடுத்த முதல்வர் வேட்பளார் திரு ஸ்டாலின் என எல்லோரும் கூறிக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் துணை முதல்வராவது இது பற்றி கருத்து தெரிவிப்பார் என்றால் அவரும் இதுவரை வாய்திறந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த மசோதா சட்டமானால் தமிழக அமைச்சர்களில் பலர் தங்களது சொத்துகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். 2006ல் நடந்த தேர்தலில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ2.83 கோடி என தனது வேட்பு மனுவில் தகவலை தெரிவித்த அமைச்சர் நேரு, 2011ல் தாக்கல் செய்த மனுவில் ஐந்தாண்டுகளில் சொத்தின் மதிப்பு ரூ 17.77 கோடியாக காட்டியிருக்கிறார். ஐந்தாண்டுகளில் ஏறிய விலைவாசி உயர்வு, தொடர் மின் வெட்டின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டாலும், அமைச்சர்களின் சொத்துக்கள் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.
அமைச்சர் நேருவைப் போலவே உணவு அமைச்சர் எ.வ.வேலுவிற்கு 2006ல் தெரிவித்த சொத்தின் மதிப்பை விட 780 மடங்கு அதிகமாகி தற்போது 17 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. ரூ1.35 கோடியாக தனது சொத்து இருப்பதாக 2006ல் காட்டிய அமைச்சர் பூங்கோதைக்கு 2011ல் ரூ15.43 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆகவே இவர் தான் செய்த மருத்துவத் தொழிலில் உண்மையில் கிடைத்த வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்கிற மசோதாவை சட்டமாக்க முனைப்பு காட்டுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதல்வர் எவ்வழி மற்றவர்கள் அவ்வழி என்கிற புதுமொழிக்கு ஏற்ப 2006ல் 26.52 கோடியாக இருந்த சொத்து 2011ல் ரூ44 கோடியாக உயர்ந்த சூத்திரத்தை அமைச்சர்களுக்கு மட்டுமே முதல்வர் தெரிவித்ததால் திமுக அமைச்சர்கள் அனைவரும் முதல்வரைப் போல் பல மடங்கு சொத்துக்களைக் கடந்த ஐந்தாண்டுகளாக குருவி சேர்ப்பது போல் சேர்த்திருக்கிறார்கள். எனவே இந்த மசோதா சட்டமானால் இந்த நிலக்குருவிகள் சேர்த்த சொத்து பறிமுதல் செய்யப்படும் என்கிற அச்சத்தின் காரணமாக கருணாநிதியும் வாய்முடி மௌனமாக இருக்கிறார்.
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதிலே அதிக கவனம் செலுத்தினார். பாவம்.
இந்த வரைவு மசோதாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் முழுச் சுதந்திரம் போல், முழுச்சுதந்திரம் பெற்ற அமைப்பாக ஜன் லோக்பால் இருக்க வேண்டும், எந்த அதிகாரியும் அல்லது அரசியல்வாதியும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த இயலாத வகையில் அமைக்க வேண்டும் என்பது கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ ஏற்புடையதாக இருக்காது. எனவே, இவர்கள் இருவரும் நாட்டையே உலுக்கிய பிரச்சினையில் தங்களது கருத்துக்களை மக்கள் முன் வைக்கவில்லை. ஏற்படப்போகும் லோக்பால் மசோதாவிற்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமே.
அதிகார பலத்தைக் கொண்டு குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணமும் ஈடு கட்ட இயலாது. ஏன் என்றால் ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைப் பாதுகாப்பது லோக்பால் அமைப்பின் கடமையாகும். அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதும் இவர்களின் முக்கியப் பணியாகும் என்பது வரைவு மசோதாவில் இறுதியாக சேர்க்கப்பட்டுள்ள ஷரத்தாகும்.
கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்த வினாயகம் என்பவர் கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு கொடுத்த தொல்லைகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் பின்னாளில் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார். செல்வி ஜெயலலிதாவும் இம் மாதிரியான காரியங்களை செய்வதில் வல்லவர். கஞ்சா வழக்கு என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகும். ஆகவே இந்த மசோதா சட்டமானால் இருவரும் தங்களின் எண்ணப்படி அதிகார பலத்தை பயன்படுத்த இயலாது என்பதால் வாய் திறக்க முடியாமல் உள்ளார்கள்.
லோக்பால் உருவான கதை
1969ம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன் தனது பரிந்துரையில் உடனடியாக அரசின் செயல்பாட்டில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக்பால் கமிட்டி அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக் ஆயுத்தா குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என கமிஷனின் அறிக்கை தெரிவித்தது. இந்தப் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 1969ல் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தின் மேல்சபையில் இந்த மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தில் இம்மசோதா காலாவதியாகிவிட்டது. ஆனாலும் கூட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இம் மசோதா கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.
இம் மாதிரியான போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய வருடங்களில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்ந்து தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகள் இத்தனைமுறை தாக்கல் செய்ப்பட்டாலும் மசோதா ஏன் சட்டமாகவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகும். காரணம் இம் மசோதாவைக் கொண்டு வருவதில் ஆளும் கட்சிக்கு அக்கறை இல்லை. இழுத்தடிக்கும் போக்கில் பல்வேறு கால கட்டங்களில் இம் மசோதாவானது கூட்டு நடாளுமன்ற குழுவிற்கும், பல்வேறு குழுவின் பரிந்துரைக்கும் மாறி மாறிச் சென்றதால் இம் மசோதா சட்டமாகவில்லை.
நாடு விடுதலை பெற்ற 1947ம் வருடத்திலிருந்து இந்திய வரலாற்றில் ஊழல் கரைபடிந்த எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை விட மோசடிக்குத் துணை போன அதிகாரிகள் கூடத் தண்டிக்கப்பட வில்லை. தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் திகழவில்லை என்பது ஊரறிந்த உண்மையாகும். ஆகவே ஊழலின் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிற கூச்சல் அதிகமானதே தவிர அது தீரும் வழி தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியால் காலம்கடந்த லோக்பால் மசோதாவின் அம்சங்கள்
பத்து முறை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவில் பல அம்சங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஷரத்துக்கள் இடம் பெற்றன. மேலும் காங்கிரஸ் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவானது ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகள் போன்றதாகும். இதற்கு எனத் தனியாக அதிகாரங்கள் கிடையாது. இந்த அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்யும் குழுவாகவே மட்டுமே இருக்குமாறு மசோதாவின் சாரம்சங்கள் இருந்தன. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போல் லோக்பால் அரசியல்வாதிகளின் தவறுகளை விசாரிக்கும் அமைப்பாக இருக்கும். ஆனால், அதற்கு எவ்விதமான சட்ட அதிகாரமும் கிடையாது. லோக்பால் அமைப்பு ஆலோசனைக் குழுவாக செயல்படும்.
லோக்பால் அமைப்புக்குத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டாகச் சேர்ந்த அமைப்பினரின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது போன்ற அம்சங்கள் லோக்பால் அமைப்பின் உன்னத லட்சியத்தையே சிதைத்து விடும்.
புதிய லோக்பால் மசோதாவில் உள்ள ஷரத்துக்கள்
அண்ணா ஹஸாரே தலைமையில் உள்ள குழுவினரால் தயாரிக்கப்பட்ட வரைவு மசோதாவில் உள்ள அம்சங்கள் முக்கியமானவையாகும். இந்த வரைவுப்படி மசோதா கொண்டு வரப்படுமானால் 90 விழுக்காடு சமுதாயத்தில் ஊழலை ஒழிக்க இயலும். எவ்வாறு?
(1) மத்தியில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக்பால் என்கிற அமைப்பும், மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக் ஆயுக்தா என்கிற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.
(2) உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரத்தைப் போல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் போல் லோக்பால் அமைப்பும் ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் லோக்பால் விசாரணையில் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கமோ தலையிடக் கூடாது.
(3) குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணையும் வழக்கும் காலதாமதம் செய்யப்படாமல் விசாரணை என்பது ஒரு ஆண்டுக்குள்ளும், விசாரணைக்குப் பின் நடைபெறும் வழக்கு விசாரணை ஒரு ஆண்டுக்குள்ளும் முடிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு இரண்டு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும். (பத்து ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது நினைவுக்கு வருகிறதா?)
(4) குற்றம் சுமத்தப்பட்டவரால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்குமானால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட காலத்திற்குள் இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும்.
(5) பிரதமர், உச்ச நீதி மன்ற நீதிபதி, முதல்வர், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் போது அனுமதி பெற வேண்டும் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
(6) இந்த மசோதா சட்டமானால் பொதுமக்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தாலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பிரச்சினைக்காகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் பெறப்படவில்லை என்றாலும் இது சம்பந்தமாக லோக்பால் ஒரு மாதத்திற்குள் விசாரித்து பொது மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கு வழி வகை செய்யும்.
அத்தோடு அரசின் சார்பில் போடப்படும் சாலைகள் தரமற்றதாக இருந்தாலும் ரேஷன் கடைகளில் அளவு குறைவான மற்றும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி ஒரு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும்.
(7) லோக்பால் அமைப்பில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
(8) மத்திய அரசின் மத்திய ஊழல் கண்காணிப்பு நிறுவனமும், மத்திய புலனாய்வு அமைப்பும் லோக்பால் அமைப்புடன் இணைந்து விசாரணை நடத்தும்.
ஆகவே இப்படிப்பட்ட ஷரத்துக்களை கொண்ட மசோதா சட்டமானால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சிறைசாலைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மசோதாவை சட்டமாக்க ஊழல் அரசியல்வாதிகள் முன்வருவார்களா என்பதே கேள்வி குறியாகும்.
|
No comments:
Post a Comment