Saturday, March 19, 2011

முத்துக்கு முத்தாக – திரை விமர்சனம்


muthukku-muthaga
வாழும் காலத்திலேயே பெற்றோர்களை பொக்கிஷமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சுமந்து வந்து கொண்டிருக்கும் படம்தான் இந்த ‘முத்துக்கு முத்தாக’.
சரண்யாவும் இளவரசுவும் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் அப்பா, அம்மாவேதான் என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளை பெற்றும், கடைசி காலத்தில் நாதியில்லாமல் சாகும் அவலம். தன் தாய், தந்தையரை நல்ல விதமாகப் பார்த்துக் கொள்ளாத ஒவ்வொருவருக்கும் நெஞ்சுக் கூட்டில் விழும் சம்மட்டி அடி இந்த படம்.

காசு, பணத்தை விட பாசம்தான் பெரிசு என்று காட்டுவதற்கு தன் மகன்களுக்கு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் இளவரசு. அதை நினைத்துப் பார்க்காமல் தன் வீட்டிற்கு வந்த மாமனார், மாமியாரை எடுத்தெறிந்து பேசும் மருமகள், கையாலாகத தனமாய் பஸ் ஸ்டாண்டுக் கடையில் இட்லி வாங்கிக் கொடுத்து தன் நிலையை எண்ணி விகித்து அழும் மூத்த மகன். அவர் தன் பெற்றோர்களிடம் “அடுத்த ஜென்மத்தில் நீங்க எனக்கு பிள்ளைகளாப் பொறக்கணும். நான் உங்களுக்கு சேவை செய்யணும்” என்று வசனம் பேசும் போது நம்மை உருக வைக்கிறார்.
பணக்கார வீட்டுக்கு வீட்டோடு மாப்பிளையாகப் போய் சாப்பிடக் கூட அவமானப்படும் இரண்டாவது மகன். பிள்ளை ஏதோ பிரச்சினையில் வந்திருக்கிறான் என்று தெரிந்தும் அவனா சொல்லட்டும் என்று பிள்ளையின் உணர்வினைக் காயப்படுத்திவிடக் கூடாது என பயப்படும் இளவரசு. இப்படி ஒரு அம்மா அப்பாவா என்று நினைக்கத் தூண்டுகின்றனர். அப்பா அம்மாவுக்காக காதலித்த பெண்ணை கைவிட்டு விட்டு மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் மூன்றாவது மகன். சொந்த மருமகளே சூனியக்காரியாய் மாறி, ‘உங்க கையாலயே அரளி விதையை சாப்பிட்டு சாக வேண்டியதுதானே’ என்று கேட்கும் போது இளவரசுவும் சரண்யாவும் பாதி செத்து விடுகின்றனர்.
அண்ணியை ஆபாசமாய் படம் எடுத்துத் தள்ளுபவனை கொன்று விட்டு சிறைக்கு செல்லும் நாலாவது மகன். ஐ.டி. நிறுவத்தில் வேலைக்குப் போன ஐந்தாவது மகன். இப்படி எல்லோரும் தங்களை விட்டு சென்றுவிட ஆஸ்துமாவிற்கு ஆளாகும் சரண்யா. பேரனைத் தொட்டால் கூட அவனுக்கும் ஆஸ்துமா வந்து விடும் என்று மருமகள் கூறியதைக் கேட்டதும் உடைந்து போய் நிற்கும் இடம் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.
அரளி விதை கலக்கப்பட்ட உணவு என்று தெரிந்தும் சந்தோஷமாய் சாப்பிடும் இளவரசு, சரண்யாவைப் பார்த்து “யாருக்கும் பாரமாய் இருக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டியா தாயி’’ என்று கேட்கும் போது தியேட்டரில் இருக்கும் யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினம்தான்.
இந்தப்படத்தின் மூலமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் இராசு மதுரவன்.
படத்தில் நடித்த அனைவரும் அவர்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியின் காமெடி படத்தின் முன்பாதிக்கு உதவியிருக்கிறது. மருமகள்கள் எல்லோரும் மோசமானவர்கள்தான் என சித்தரித்திருப்பது நடைமுறைக்கு பொருத்தமானதாக இல்லை.
முத்துக்கு முத்தாக இக்கால இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment