Wednesday, December 29, 2010

பொழுதுபோக்கு பௌதிகம் - யா.பெரல்மான்

 முழுப்புத்தகம் வாசிக்க இங்கே கிளிக செய்யவும்
http://enayamtahir.blogspot.com/2010/12/blog-post_9971.html


நத்தையின் வேகம் விமானத்தின் வேகத்தைவிட எத்தனை மடங்கு குறைவு என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? வெள்ளை நிறத்தை விட, கறுப்பு நிறம் அதிக வெப்பத்தை உள்வாங்கும் என்பதை நீங்கள் எந்த வகுப்பில் படித்தீர்கள்? ஆப்டிகல் இலூஷன்(Optical Illusion) எனப்படும் மாயபிம்பப்(காட்சிப் பிழை) படங்களை பார்க்கும்பொழுது அவை நம் கண்களில் எப்படி செயல்படுகின்றன என்று சிந்தித்திருக்கிறீர்களா? ஸ்லோமோஷன் காட்சிகளை எப்படி எடுக்கிறார்கள் என்பது எந்த வயதில் உங்களுக்குத் தெரியும்? தண்ணீர் குடிக்கிறீர்கள்; தண்ணீர் எப்படி உங்கள் வாய்க்குள் செல்கிறது(விண்வெளியில் இருந்தால் அப்படி செல்லாது!)?




மேற்சொன்ன விஷயங்களில் சில உங்களுக்கு, "இதெல்லாம் என்ன அற்ப விஷயம்!"
என்று தோன்றியிருக்கலாம். ஆனால் அந்த அற்ப விஷயங்களுக்கு பின்னால் எவ்வளவு விஞ்ஞானம் ஒளிந்திருக்கிறது என்பதை மிக எளிமையாக புரியும்படி இந்த புத்தகம் விளக்கிச் செல்கிறது. தண்ணீர் குடிப்பது போன்ற அற்ப விஷயங்களை மட்டுமல்ல, ஒரு செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதையில் நிறுவ எவ்வளவு வேகம் கொடுக்க வேண்டும் என்பது கூட அதே எளிமையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற விஷயங்களெல்லாம் எனக்கு பத்து வயதிலேயே தெரிந்ததற்கு, பெரல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம் முதல் இரு தொகுதிகள், சிறு வயதிலிருந்தே எங்கள் விட்டிலிருந்ததுதான் காரணம். எந்தவொரு விஷயத்தையும், அவை சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும், அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தத்துவத்தை அலசி ஆராயும் எனது சிந்தனை போக்குக்கும் இதுதான் காரணம். ஒரே ஒரு சின்ன விஷயம். இதைப் படித்து முடித்ததும், உங்களுக்கு உலகத்தில் எல்லாமே தெரிந்து விட்டதாக ஒரு நினைப்பு தோன்றும். அதிலிருந்து இறங்கி வர சில நாள்/வாரங்கள் ஆகலாம். இன்னொரு சின்ன விஷயம், இது கதையோ கட்டுரைத் தொடரோ அல்ல என்பதால் இதை ஒரே மூச்சில் முழுதாக உங்களால் படித்து முடிக்க முடியாது. அப்படி இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிப்பது ஒரு வகையில் வீண்தான். கொஞ்சம் கொஞ்சமாக, முதலில் விருப்பமுள்ள பிரிவுகளை படிக்கத் தொடங்கினால், பிறகு மற்ற பிரிவுகளும் படிப்பதற்கு தானாகவே விருப்பம் வந்துவிடும்.

முன்னேற்ற பதிப்பகத்தார் பிரசுரித்த இந்த இரு தொகுதிகள் போக பெரல்மான் மேலும் சில தொகுதிகள் எழுதியிருந்தாலும், அவை தமிழில் பிரசுரமானதாகத் தெரியவில்லை. இந்த இரு தொகுதிகள் கூட இப்பொழுது விற்பனையில் இல்லை. ஆனால் இப்பொழுது பல பேர், முன்பு தங்கள் வீட்டிலிருந்ததாக சொல்லக் கேட்கிறேன். ஒரு ஆர்வலர், இதை மீண்டும் எளிமைப்படுத்தி தமிழில் புத்தகமாகப் போடப்போவதாக கேள்வி! நடக்குமா என்றுதான் தெரியவில்லை?

No comments:

Post a Comment