Thursday, December 15, 2011

கருணாநிதி தப்பா பண்ணார் .. ஜெயலலிதா ரொம்ப தப்பா பண்றார்..

ராமதாஸிடம் விறுவிறுப்பான பேட்டி தட்டலாம் என்று தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றால், ''இங்கே என் மேற்பார்வையில் வளர்க்கப்படும் 200 வகை பூச்செடிகள் இருக்கு. பார்த்துட்டு வாங்க... பேசலாம்!'' என்று எனக்கு அசைன்மென்ட் கொடுத்தார். 'பூக்கள் பூத்த தருணத் துக்கு’ப் பிறகு பூகம்பம் வெடித்தது. 

'தமிழக அரசு உயர்தர வசதிகள்கொண்ட 'எலைட் பார்’கள் அமைப்பது குறித்து?'' 

'' 'குடி உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு’ என்று அரசே அச்சிட்டு மதுபான பாட்டில்களில் எழுதி விற்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு டாஸ்மாக் இருப்பதே அவமானம். அதிலும் இந்த எலைட் பார்கள் பெருத்த அவமானம்!'' 

''பா.ம.க. உறுப்பினர்கள் அனைவரும் மது அருந்தாதவர்களா?'' 

'மது, புகை, கஞ்சா, லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவோம்’ என்பது உட்பட 10 உறுதிமொழிகளை ஏற்றால்தான், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி, இளம்பெண்கள் அணி இரண்டிலுமே உறுப்பினராக முடியும். (உறுதி ஏற்புப் படிவங்களைக் காண்பிக்கிறார்) எதிலும் சமத்துவம் வேண்டும் இல்லையா?'' 
''அப்படி என்றால், சென்னையில் நடைபெற்ற பா.ம.க-வின் மது ஒழிப்பு மாநாடு முடிந்த கையோடு 'மதுவை ஒழிப்போம்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களோடு உங்கள் கட்சியினர் டாஸ்மாக்கில் மது வாங்க நின்றார்களே?'' 

''அது கொள்கை தெரியாத பையன்கள் யாராவதாக இருக்கும். தற்செயலாக 'நானும் வருகிறேன்’ என்று யாராவது மாநாட்டுக்குச் செல்லும் வண்டியில் ஏறி இருப்பார்கள். அவர்களுக்கும் கட்சிக்காரர்கள் டி-ஷர்ட் கொடுத்திருப்பார்கள்!'' 

''ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கிறது?'' 

''பாராட்டும்படியாக எதுவுமே இல்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்ததைவிட விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. முதல் கோணலே முற்றும் கோணல் என்பது மாதிரி சமச்சீர் கல்வி தொடங்கி நதி நீர்ப் பிரச்னைகள் வரை எதிலுமே சொல்லிக்கொள்ளும்படி ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. எந்தக் கட்சியும் அமைப்பும் அழைப்பு விடுக்காமல் தன்னெழுச்சியாக, முல்லைப் பெரியாறு நோக்கி ஒரு லட்சம் மக்கள் திரண்டு வருகையில் போலீஸ் தடியடி நடத்தி அந்த எழுச்சியைக் குறைக்கிறது. அரசு செய்ய வேண்டியதை மக்கள் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது அரச வன்முறை பிரயோகிக்கப்படுகிறது!'' 

''அதே விவகாரத்தில் 'கேரளா நம் சகோதர மாநிலம்’ என்கிறாரே கருணாநிதி?'' 

''இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் தமிழர்களுடைய நலன்களை, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இதில் கருணாநிதி செய்தது தப்பென்றால், ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துகொண்டு இருப்பது ரொம்பத் தப்பு!'' 

'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு உணவு உற்பத்திப் பொருட்கள் செல்லும் எட்டு சாலை களையும் அடைக்க வேண்டும் என்கிறீர்கள். அதுதான் பிரச்னைக்கான தீர்வா?'' 

''நிச்சயமாக! 'உணவு கொடு’ என்று அவர்கள் கேட்டால், பதிலுக்கு 'தண்ணீர் கொடு’ என்று நாம் கேட்க முடியுமே! இப்போதே அங்கே தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய். இன்னும் எட்டு வழிகளையும் அடைத்துவிட்டால், அவர்கள் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்!'' 

''பிரதான எதிர்க் கட்சியான தே.மு.தி.க-வின் செயல்பாடுகள் குறித்து?'' 

''பிரதான எதிர்க் கட்சியா... தே.மு.தி.க- வா? அதெல்லாம் கிடையாது! பா.ம.க-தான் உண்மையான எதிர்க் கட்சி. வேறு ஒரு கட்சியும் எங்களைப் போலச் செயல்படவில்லை. எங்களோடு ஒப்பிடுகையில், இடது சாரிக் கட்சிகள் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை!'' 

'இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நம்பலாமா?'' 

''இதைச் சொல்வதற்கு தி.மு.க-விடம் இருந்தே வார்த்தைகளைக் கடன் பெற்றுக்கொள்கிறேன்... கார் உள்ளவரை, கடல் நீர் உள்ளவரை, பார் உள்ளவரை (டாஸ்மாக் பார் இல்லை... இது உலகம்!) பைந்தமிழ் உள்ளவரை திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது!'' 

''அணி மாறி மாறி சந்தர்ப்பவாதக் கட்சி என்று பெற்ற பெயரை எப்படிப் போக்குவீர்கள்?'' 

''யார்தான் அணி மாறவில்லை? நாங்கள் மட்டும்தான் அணி மாறுகிறோமா? கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாறவில்லையா? அவர்களிடம் போய்க் கேட்க வேண்டியதுதானே? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுவது இதுதான் கடைசித் தடவையாக இருக்கும். இப்படி இனி ஒரு முறை கேட்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்!'' 

''வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள பா.ம.க, 2016-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?'' 

''1989-ல் கட்சி தொடங்கி, ஐந்தே மாதங்களில் தென் தமிழகத்தில் உள்ள பெரியகுளத்தில் 70,000 வாக்குகள் பெற்றோம். 1999-2000 காலகட்டத்தில் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடு நடத்தினோம். 'எங்களுக்குச் செல்வாக்கு இல்லை’ என்று சொல்லப்படுகிற தென் மாவட்டங்களில் சராசரியாக 5,000 பேர் மாநாட்டுக்கு வந்தனர். வட மாவட்டங்களில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். அப்படி என்றால், எல்லாத் தொகுதிகளிலும் எங்களுக்கு வாக்குகள் உள்ளன என்றுதானே அர்த்தம்? 1949-ல் தி.மு.க. உதயமானது. 1952 தேர்தலில் 15 எம்.எல்.ஏ-க்கள். அத்தனை பேரும் வட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதன் பிறகு 1962 தேர்தலில் 50 இடங்களை வென்றது. அப்போதும் வட மாவட்டங்கள்தான் கைகொடுத்தன. தெற்கிலோ, மேற்கிலோ, ஓர் இடம்கூடக் கிடையாது. 1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தபோதும் பெரும்பாலான இடங்கள் வட மாவட்டங்களில் இருந்துதான் கிடைத்தன. பா.ம.க-வைப் பொறுத்த வரை வட மாவட்டங்களில் சர்வசாதாரணமாக 100 இடங்களைப் பெற முடியும். மிச்சம் 17-தானே?'' 

''உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், தி.மு.க. அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பொதுக் குழுவைக் கூட்டிப் பரிசீலிப்பதாக திருமாவளவன் அறிவித்தார். உடனே தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பிறகு நீங்களும் தனித்துப் போட்டி என்று சொல்லி விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்தியது நியாயமா?'' 

''நாங்கள் எங்கே அழைப்புவிடுத்தோம்? அவர்கள்தான் இங்கே வந்து நான்கு மணி நேரம் பேசினார்கள். அவர்கள் ஒன்றும் பரிசீலிப்பதாகச் சொல்லவில்லை. அவர்கள் விடுத்த அழைப்பைப் பரிசீலிப்பதாக நாங்கள்தான் சொன்னோம். பின்னர், தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்தோம். அதை அவர்களுக்கு முறையாகத் தெரிவித்தும்விட்டோம்!'' 

''சாராயம், சினிமா, இலவசம் மூன்றும்தான் தமிழ்நாட்டைச் சீரழிக்கின்றன என்று சொல்லி இருக்கிறீர்களே?'' 

''நான் ஒன்றும் சினிமாவுக்கு எதிரி அல்ல. நானும் சினிமா பார்ப்பேன். சமீபத்தில் 'அபியும் நானும்’ படம் பார்த்தேன். அப்புறம் 'மொழி’, 'வாகை சூடவா’ பார்த்தேன். இந்தப் படங்களில் எல்லாம் எந்தக் குத்துப் பாட்டும் இல்லை. அரைகுறை ஆடைகள் இல்லை. காதல் இருக்கிறது. ஆனால், கண்ணியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க அரசே வட்டி இல்லாத கடன் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். நம் பண்பாட்டை, கலையை வளர்த்தெடுக்கும் இளம் இயக்குநர்கள் எடுக்கும் இது போன்ற படங்களை மட்டுமே தமிழில் தயாரிக்க வேண்டும் என்று அரசு ஒரு சட்டம் போட்டுவிட்டால், மக்களின் ரசனை மாறிவிடும். அப்புறம் ஏன் தமிழன் 'மானாட மயிலாட’ பார்க்கப்போகிறான்?'' 

''பா.ம.க-வின் பழைய வேகமும் போர்க் குணமும் நீர்த்துப்போய்விட்டதோ?'' 

''அரசியல் கட்சிக்கு என்று சில நெறிமுறைகள் உண்டு. வன்னியர் சங்கமாக இருந்தபோது ஏழு நாட்கள் சாலை மறியல் செய்து ஸ்தம்பிக்கவைத்தோம். ஆனால், அப்படி எல்லாம் இப்போது போராட முடியாது. அற வழியில்தான் போராட வேண்டும். வன்முறைக்கு இடம் இல்லை. ஓட்டு அரசியலுக்கு வந்துவிட்டால் அப்படித்தான். முன்புபோல சாலை மறியல் செய்தால், பொதுமக்கள் 'இதென்னடா தொல்லை இவங்களாலே!’ என்று எங்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஓட்டு அரசியலில் இதெல்லாம் சகஜம்.'' 

''ஆனால், கட்சியில் இருந்து நிறைய இளைஞர்கள் வெளியேறுவதாகச் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே?'' 

''இல்லை. போன வாரம்கூட சேலத்தில் அன்புமணி பேசிய கூட்டத்தில் 15,000 பேர் கலந்துகொண்டனர். அதில் 95 சதவிகிதம் இளைஞர்கள்!'' 

''பத்திரிகையாளர் சந்திப்புகளில் வேல்முருகன் நீக்கம்பற்றிக் கேள்வி கேட்டால், ஏன் அவ்வளவு கோபம்? அதிலும் குறிப்பாக சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில்..?'' 

''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப்போவது இல்லை. எல்லாக் கட்சிகளிலும்தான் யார் மீதாவது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா?''

விருமாண்டிப் பார்வையில் ஒரு கல்யாணம்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

=====

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்! எந்த விதத்தில்?

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.


336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.) 

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட 
இந்தப் பெண்ணால் 
பகை வளர்கிறது 
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - "அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

நாட்டின் 10 வெட்கப்பட வேண்டியர்களின் பட்டியல்


சமிபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். அங்கே மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலைச்செய்து வருவதைக் கண்டித்து நடந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். 

நமக்கு அந்தப் படுகொலைகளப்பற்றி தெரிந்ததெல்லாம், மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும், சமிபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாக அறிந்து வைத்திருக்கிறோம்.

அந்த மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காகத்தான் அரசாங்கம் போராடி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த ' ஆப்பரேஷன் கிரின் ஹண்ட்' நடைபெறுவதாகவும் அரசும் ஊடகங்களும் சொல்லுகின்றன. நாமலும் 'ஐய்யோ என்ன அநியாயம்' என்பதாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ காதில் கேட்டுவிட்டு கடந்துப்போய் விடுகிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிய நாம் எந்த வித பிரயாத்தனமும் படுவதில்லை. அதன் போக்கில் ஊடங்களின் கத்தலிலால் நம் காதில் விழுவததுதான் நாம் அந்த பிரச்சனையினைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதெல்லாம். அதைப்பற்றி நாம் விவாதிப்பதோ கூடுதல் தகவல் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பதோ இல்லை, குறைந்தது உண்மை என்ன என்று கூட அறிந்துக்கொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த கட்டுரை அதை உங்களுக்கு சொல்லுவதின் நோக்கம் கொண்டதுமில்லை. அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதும், நம்மை சுற்றி இருக்கும் உலகத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் கவலையும், ஏமாற்றமும், ஆதங்கமும், கோபமும் வருகிறது. நம் வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மையும், கையாகாலத்தன்மையும் என்னை ஆற்றாமையில் தள்ளிவிட்டன. 

அங்கே மேற்குவங்கம்,ஜார்க்கண்ட்,ஒரிசா,சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரம் உட்பட மத்திய மாநிலங்களில் என்னதான் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டால்தான், அதன் வலியை உணரமுடியும்.

ஒரு நாட்டின் வளங்களைப்பற்றிக் குறிப்பிடும் போது, அந்த நாட்டின் கனிம வளங்களைப்பற்றி குறிப்பிடுவார்கள். கனிம வளங்களின் மதிப்பைப் பொருத்து அந்த நாட்டின் பொருளாதார மதிப்பீடுகள் மதிப்பிடப்படும். அந்த வகையில் தன் எல்லைக்குள்ளிருக்கும் கனிம வளங்களை பயன்படுத்திக் கொள்ளுவது அந்த நாட்டின் உரிமை. அதைத்தான் இந்திய அரசாங்கம் செய்ய நினைக்கிறது. அதைபோய் குற்றம் சொல்லலாமா?

அப்படி தண்டகாரண்யா என அழைக்கப்பட்ட காடுகளில் அரிய கனிம வளங்களான 'பாக்சைட், இரும்புதாதுகள், நிலக்கரி, யுரேனியம்,டாலமைட்,வெள்ளீயம்,கிரானைட், மார்பிள்,செம்பு,வைரம்,தங்கம்,க்வார்ட்ஸைட்,கோரண்டம்,பெரில்,அலெக்சாண்டரைட்,சிலிக்கா,புளூரைட்,கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிம பொருட்கள் புதைந்துக்கிடக்கின்றன. அந்த வளங்களை தோண்டி எடுக்க நினைத்து. அதை தனியார், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தாகிவிட்டது. அவர்கள் அங்கே தோண்டப் போகிறார்கள். அதற்கு இடையூரு செய்யலாமா?. அவர்கள் தோண்டுவதிற்கு வசதியாய் அங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் நகர்ந்து நின்று வழி கொடுக்க வேண்டும். முடிந்தால் சம்மட்டி, கடப்பாறை கொடுத்து உதவி செய்யனும், அதானே மனிதத் தன்மை. ஆனால் அங்கே இருக்கும் மக்கள் அதை எதையும் செய்யாமல், தோண்டவும் விட மாட்டேன் என்று தகராறு செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டால் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். என்ன கொடுமை சார்? சரி அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா? நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டாமா? சொல்லுங்க. உங்களுக்கு அந்த கனவு இல்லை?. எத்தனைபேரின் கனவு அது. அப்துல் கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை நாடுமுழுவதும் ஏற்படுத்தினார். அதை வெறும் கனவாக போய் விட அனுமதிக்க முடியுமா? சொல்லுங்க.. அதற்காகத்தான் இந்த 'ஆப்ரேஷன் கிரின் ஹண்ட்'(பச்சை வேட்டை). 

சரிப்பா அதில் என்ன தான் செய்யப்போகிறீர்கள் என்றால். ஒன்றுமில்லை. தோண்டுவதிற்கு தடையாக இருக்கும் நபர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்போகிறோம் அவ்வள்வுதான். என்கிறது அரசாங்கம். நமக்கும் சரி என்றாகத்தான் படுகிறது. ஆனால் நண்பர்களே அவர்கள் அப்புறப்படுத்துவது என்பதற்கு அர்த்தம் நாம் நினைப்பதைப்போலில்லாமல், அரசாங்கத்திற்கே உரிய தனிப்பட்ட அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. 

புதிதாக ஒன்றுமில்லை நண்பர்களே. வழக்கம் போலத்தான். அரசாங்கம் தன் நண்பர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது. தம் தேர்தல் செலவுகளை கவனித்துக்கொண்டவர்களுக்கும், தன்னுடைய பொருளாதார தேவைகளை கவனித்துக் கொள்பவர்களுக்கும் பிரதி உபகரணம் செய்ய நினைக்கிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுச்செல்ல முயற்சிக்கிறது, நாட்டை வல்லரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. அவ்வளவுதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? வேறென்ன.!..வழக்கம் போலத்தான், ஏழைகளை ஒழிக்கவேண்டும். நாடு பணக்கார நாடாக வேண்டுமானால் ஏழைகளே இல்லாமல் ஆக்க வேண்டும். ஏழைகளே இல்லாமல் செய்ய சுலபமான வழி ஏழைகளை அழித்துவிடுவது. நண்பர்களே இங்கே தான் நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும். ஏழ்மையை அழிப்பதில்லை, ஏழையை அழிப்பது.

இது ஒன்று புதிய யுத்தி இல்லை. வழக்கமானதுதான். பல நாடுகளில் சரித்தரபூர்வமாக பின்பற்று வழிதான் அது. காலம் காலமாக நல்ல பலன் தரும் முறை. நம்பகமான முறை. உத்தரவாதம் தருவதிற்கு பல நாடுகள் இருக்கின்றன. அதைத்தான் இங்கே இந்திய அரசாங்கமும் நடைமுறைப் படுத்துகிறது. அதைப் போய் குற்றம் சொல்லலாமா?

சரி வழிமுறை இருக்கிறது. அதை எப்படி செயல்படுத்துவது. அது அந்த அந்த நாட்டின் சாமார்த்தியம். அங்கே அரசாங்கம் என்ன செய்தது. 

அங்கே தோண்டுவதிற்கு இடையூராக இருப்பது ஒருவரோ பத்துபேரா அல்ல. பல லட்சக்கணகானபேர்கள், இவர்களின் எண்ணிக்கை சில நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் எண்ணிக்கையை விட அதிகம். தோண்டுவதிற்கு அவர்கள் தடை சொல்லுவதிற்கு அவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் தோண்டுவது என்வீட்டு தோட்டத்தில் அல்ல. என் வீட்டையேதான் என்கிறார்கள். அதுவும் அதை எல்லோரும் கோரஸாகச் சொல்லுகிறார்கள். ஆம் நண்பர்களே அரசாங்கம் தோண்டப்போகிறேன் என்றுச்சொல்லுவது இவர்களின் வீடுகளைத்தான். அவர்களின் வாழ்விடங்களைத்தான். அவர்கள் உண்டு களித்து வாழ்ந்த இடங்களைத்தான் நண்பர்களே.

அவர்கள் பழங்குடினர், காடுகளையும் மலைகளையும் பரம்பரைப் பரம்பரையாக வாழ்விடங்களாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இயற்கையோடு இசைந்த வாழ்க்கை அவர்களுடையது. காடுகளே அவர்களின் சொத்து, அது கொடுக்கும் வளங்களே அவர்களின் வருமானம். அதுவே அவர்களின் ஆதாரம். அவர்களின் பூமி அது. 

அதைதான் இந்திய அரசாங்கம் தோண்டுவேன் என்கிறது. மக்கள் போராடிப்பார்தார்கள். யாரும் காது கொடுப்பதாக இல்லை. அவர்களுக்கு உதவ மாவோயிஸ்டுகள் வந்தார்கள். மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் வெடித்தது.

அரசாங்கம் என்னச் சொல்லுகிறது. நகர்ந்துப்போங்கள், உங்களுக்கு வேறு இடம் தருகிறோம். முகாம்களுக்கு வாருங்கள். நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்(கவனித்துக்கொல்லுகிறோம்) என்றது. அப்படி எல்லாம் நாங்கள் எங்களில் வீட்டை விட்டுப்போக முடியாது என்ற மக்களை, சரி அப்படி என்றால் செத்துப்போங்கள் என்கிறது அரசாங்கம். எப்படி.. நல்ல முடிவு இல்லையா?!

அதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது. முதலில் 'சால்வா ஜூடும்' என்னும் ஒரு அமைப்பை நிறுவியது(2005-இல்), அது மக்களை கொத்து கொத்தாக கொன்றது. அரசாங்கமே ஏற்படுத்திய அராஜகப் படை அது. 700 கிராமங்கள் கொலுத்தப்பட்டன. கொத்து கொத்தாக மக்களை கொன்றனர். அரசாங்கம் அமைத்த முகாமிற்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வந்து தங்கவேண்டும் என்றனர். உண்மையில் துறத்தப்பட்டனர். பெரும் மக்கள் அண்டை மாநிலங்களுக்கும் தப்பி ஓடினர். சிலர் எதிர்த்து ஆயுதம் தூக்கினார்கள். அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் போராட்ட வழிமுறையும் தலைமையும் கொடுத்தார்கள்.

அப்போதுதான் அரசாங்க அலர ஆரம்பித்தது, ஐய்யய்யோ இந்த மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்கிறார்கள். நாட்டை துண்டாட துடிக்கிறார்கள், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் அலறுகிறார்கள். அரசாங்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் இவைகள் தான்.

மாவோயிஸ்டுகள் பள்ளிக் கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்கிறார்கள். பாதுகாப்புப் படையினரை கொல்லுகிறார்கள். இரயிலை குண்டுவைத்து தகர்க்கிறார்கள். அரசாங்கப் பணிகள் நடைப் பெறாமல் தடுக்கிறார்கள். மக்களைத் திசைத்திருப்புகிறார்கள். 


இதை எதையுமே மாவோயிஸ்டுகள் மறுப்பதில்லை நண்பர்களே. .

மீண்டும் வருமா அந்த இரவின் தொடர்ச்சி...

சூரியன் தன்னுடைய ஆளுமையை வெம்மையாக வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்றுமே உணர்ந்திராததும் மாற்றமுடியாதுமாகிய ஒரு முகமூடியை மாட்டிவிடுவதாயும் பின்னர் அவர்கள் தாங்கள் உண்மையென நம்பும் புனைவுகளை மட்டுமே பேசுபவர்களாகி விடுபவதாகவும், தன்னுடைய வல்லமையை பூமியின் இன்னொருபக்கத்தில் செலுத்த தன் பரிவாரங்களுடன் நகர்ந்துவிட்ட நேரத்திலும் கூட தன்னுடைய பகல் நேர மாயாஜால மகிமையால் மக்கள் சோர்வடைந்து உறக்கத்தில் மூழ்கிவிடுவதாயும் ஆயிரம் பக்கங்களில் விவரித்திருந்த ஆராய்ச்சிக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை தேடிப்படித்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சனிக்கிழமையின் பின்னிரவு நேரம், பெரும்பாலும் காற்றும் நானும் உறவாடும் அலுவலக முக்கோணக்கூம்புகளின் கூட்டில் சற்றும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் பார்த்துவிட்ட இருவரின் வெற்றுடம்புகளின் களியாட்டம் என்னை அந்த ஆராய்ச்சிக்கட்டுரையை நோக்கி இன்னொரு முறை நகர்த்தியது.


ஒளிப்படமாய் அந்தக் கணம் மனதில் பதிந்து விட்டிருந்தது, புதிதாய் பூசிய சுவரில் வேண்டுமென்றே கீறியதைப் போல் அழிக்கமுடியாததாய் அப்படியே தேவையில்லாத ஒன்றாய். வாழ்க்கையின் எத்தனையோ கணங்களை கடற்கரை காற்சுவடுகளில் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டேயிருக்க, இப்படியும் சில விஷயங்கள் இமைகளின் இன்னொரு பக்கத்தில் இருக்கின்றனவோ என்ற சந்தேகிக்கும் வண்ணம் கண்களை மூடியதும் வந்து கண் சிமிட்டுகின்றன தொடர்ச்சியாய். ஒன்றிரண்டு நிமிடங்களின் சேகரிப்பில் கற்பனையின் கள்ளத்தனம் நீச்சள்குளத்தில் தவறவிட்ட நிறக்குடுவையின் லாவகத்துடன் வாய்ப்புக்கள் அனைத்தையும் அபகரித்து விரிவாக்கி எல்லைகளின் இயலாமையை புன்னைகையால் புறக்கணித்து எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கிய ஒலி ஒளிப்படமாகத் உருவாகி எப்பொழுதும் மனதின் திரையில் நகர்ந்து கொண்டிருந்ததை இல்லாமல் போகச்செய்ய வேண்டிய அவசியம் புரிந்தவனுக்கு அந்த ரகசியம் புலப்படவேயில்லை.
மனம் தன் நிலையைக் குவிக்கயியலாமல் போன அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்து நகர்வதே உசிதம் என்று, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெளியேறி ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு அவர்கள் இருவரைப் பற்றிய நினைவுகளைப் புறந்தள்ள போராடிக் கொண்டிருந்தேன். நெருப்பு கேட்டுக் கொண்டு வந்த அலுவலக காவலாளியைப் பார்த்ததும் முகமூடிகளைப் பற்றிய ஆராய்ச்சி மீண்டும் நினைவில் வந்தது. பகற்பொழுதுகளில் இல்லாத எங்களிடையேயான நெருக்கம் இரவில் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் மட்டுமல்ல, மரங்கள், சாலைகள், சுவர்கள், உணவகங்கள் என எல்லாவற்றுடனுமே இரவில் சுலபமாகப் பழகமுடிவதையும் பகலில் அவைகள் நம்மிடமிருந்து விலகி நிற்பதைப் போலவும் நான் அந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்னரே உணர்ந்திருந்ததால் என்னால் அந்தக் கட்டுரையில் இயல்பாய் மூழ்கமுடிந்தது.

மார்கழி மாத முன்பனிக்காலம், ஸ்வெட்டரின் நெருக்கமான பின்னல்கள் உண்டாக்கும் கதகதப்பைத் தாண்டியும் மீறியும் குளிர் உடலைத் தீண்டி, தன் ஆளுமையை நிரூபித்துக் கொண்டிருந்தது. சிகரெட் கொடுத்துக் கொண்டிருந்த கதகதப்பு விரல்களின் இடையில் முடிவடைய அதைத் தொடர்வதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில் தீர்மானிக்க இயலாததாய் சோம்பேறித்தனத்தின் கதவுகளின் பின்னால் ஒழிந்துகொண்டிருந்தது. கடும் பனியும், ஊதல் காற்றும், இன்னும் தன் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்த காவலாளியும் எல்லாவற்றையும் கடந்து நிர்வாணத்தில் மூழ்கி தட்டுப்படாத தரையை நோக்கி விழுந்துகொண்டிருந்தவனுக்கு வேறொன்றை சிந்திப்பதில் இருந்த மூளைப்பற்றாக்குறையும் சேர்த்து முடிவெடுக்கயியலாமல் பாக்கெட்டைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலை ஸ்வைப்பிங் டோரின் ஒலி துண்டிக்க, அந்த இணையில் ஆண் மட்டும் வெளியில் வர, காவலாளி அவரை வணங்கி தன் விசுவாசத்தை நிரூபித்தவாரு நகர்ந்துவிட. எங்கள் இருவரிடையேயும் மௌனம் புகுந்து கொண்டது.

மௌனத்தின் வலிமையான கரங்களில் இருந்து விடுபட நினைத்த எங்களின் முயற்சி சிறுகுழந்தையின் நிலவைப் கையில் பிடிக்கும் பிரயாசையாய் நிறைவேறாமலே போனது. எனக்கு அந்த நபரைத் தெரியும், அப்படியே அந்த இணையின் மற்ற பெண்ணையும் இருவரும் ஏற்கனவே வேறுவேறு நபர்களுடன் மணமானவர்கள். மணத்திற்கு வெளியிலான உறவைப் பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லாததால் எனக்கு நான் பார்க்க நேர்ந்த விஷயத்தைப் பற்றி இயல்பாய் சில கேள்விகள் இல்லை, ஆனால் உறவு நடந்த இடத்தைப் பற்றிய கேள்விகள் உண்டு. ஆனால் என் மன உளைச்சலைவிடவும் அவர்களுடையது அதிகம் இருக்கும் என்பதால் மன்னிப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பக்கத்தில் இருந்து திறந்து வைத்தேன்.

"சாரி..." நான் முடித்திருக்கவில்லை, அவர் என்னைப் பார்த்து "இது இப்படி நடந்திருக்கக்கூடாது! சாரி!" அவ்வளவுதான் சொன்னார். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், இது இப்படி நடந்திருக்கவேகூடாது. அது அவர்களுடைய உறவாக மட்டுமல்லாமல் அதை நான் பார்த்ததையும் சேர்த்துத்தான். அதன் பிறகு தொடர்ந்த உரையாடல் பொதுவானதாக அலுவலகம் வேலை தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருந்தது. அந்த விஷயத்தை அவரால் ஒதுக்கிவிட்டு தன் உரையாடலைத் தொடர முடிந்திருந்தது, அவருடைய மனித மனங்களைக் கணக்கிடும் வலிமை ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்தது. அவர் அளவிற்கு முடியாமலிருந்தாலும் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.

வழமை போல் இரவின் தொடர்ச்சியாக இல்லாமல் பகல் தனக்கான முகமூடியுடன் வெளிப்பட, ஆராய்ச்சியின் முடிவாகக் கட்டுரை சொல்லியிருந்த "தங்களுக்கான முகமூடிகளைப் பற்றியெழும் கேலிகளைப் பொருட்படுத்தாமல், அதே சமயம் நிராகரிக்கவும் முடியாமல் இருத்தலுக்கான சமரசமாக நகர்தலையும், நகர்தலின் சாத்தியமின்மை புன்னகையையும் தோற்றுவிக்கிறது" என்பது என்வரையில் உண்மையானது. இணையில் ஆண் தன் நகர்தலில் வெற்றிபெற, பெண் புன்னகையில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். வாழ்க்கை எங்கள் சந்திப்பின் சாத்தியக்கூறுகளை மறுத்தலித்தபடி சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அசந்தர்ப்பங்களை சந்தர்ப்பங்களாக்கும் வேடிக்கையான விளையாட்டை காலம் தொடங்க, விளையாட்டிற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமலேயே களத்தில் எங்களை இறங்கிவிட்டு காலம் நகர்ந்து கொண்டது.

கொண்டாட்டத்திற்கான நாளொன்றில் உள் அறையின் சுவரெங்கும் எதிரொலித்து இசை தன் பரிமாணத்தை மீறி நடனத்திற்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது. இசையை அதன் பரிமாணத்திலேயே ரசிக்கத்துடிக்கும் என்னை அது இயல்பாய் அறையில் இருந்து வெளியில் தள்ளியது. கோப்பையில் மார்ட்டினி தத்தளிக்க இடது கையில் இருந்த சிகரெட்டை வலது கைக்கு மாற்றியபடி கதவைத் திறந்து வெளியில் வர இன்னொரு கோப்பையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள். வழமையான புன்னகையுடன் என் பொருட்டு திறந்த கதவின் வழி வழிந்த இசையின் இரைச்சல் காதை அடைக்க கதவு தானாக உள்ளும் புறமும் அசைந்து அதற்கேற்ப இசையை கொடுத்து மறுத்து அடங்கும் வரை ஒரு கையால் காதை அடைத்துக் கொண்டிருந்தவள், கைகளை நீட்டினாள் குலுக்களுக்காக.

"கொடுமையா இருக்கு இல்லையா!" அவளுடைய கேள்வியை ஆமோதித்தவனாய் நிசப்தம் கொடுத்த நிறைவு மனமெங்கும் வழிய, "ஆனால் வெளியில் ஏகமாய் குளிர்கிறது" என்னுடையதை ஆமோதித்தவளுக்கும் கூட தொடர்ச்சியாய் என்ன பேச என்று தெரியாததால் சாத்தப்பட்ட கதவுகளினூடாக நுழைந்துவரும் இசையை ரசித்த வண்ணம் எங்களிடையே மௌனம் இடம்பெயற, மௌனத்தின் வலியை உணர்ந்தவளைப் போல் எக்காரணம் கொண்டு அதை அனுமதிக்க மறுத்தவளாய், "எமினெம் இல்லையா?" கேட்க, "ம்ம்ம் ஆமாம், எமினெமும் ஸ்னூப்பி டாகும்..." சிரித்து வைத்தேன்.

தனிமைக்கான பொழுதில்லை அது நிச்சயமாய் கொண்டாட்டத்தின் உச்சமாய் தங்களை மறந்து ஒரு கூட்டம் உள்ளே ஆடிக்கொண்டிருந்தது. மனமொருமித்த நடனம் அல்ல மனம் அலைபாயும் பறக்கும் ஆட்டம், மற்றதைப் போலில்லாமல் என்னை இயல்பாகவே கவரும் வகைதான் என்றாலும் அன்றைய பொழுதை மார்ட்டினியுடன் தனியே கழிக்க விரும்பி வெளியில் வந்தவனுக்கு அமைந்துவிட்ட அவளுடைய அருகாமை ஆச்சர்யமே! இதுநாள் வரை என்னை நானும் அவளை அவளும் ஒருவரிடம் ஒருவர் மற்றவரை மறைத்துக் கொண்டிருந்தோம். இன்றுமே கூட எங்களின் சுயம் தன்னாதிகத்தில் இருந்திருந்தால் இந்தச் சந்திப்பு புன்னகையுடனோ முகமன்களுடனோ முடிந்திருக்கவேண்டிய ஒன்றுதான். ஆனால் உற்சாகபானம் எங்களிடையே கட்டமைக்கப்பட்ட இயல்புகளைத் தகற்தெறிந்து உற்சாகத்தை அள்ளித் தெறித்தப்படியிருந்தது. இரவின் இயல்புகளில் ஒன்றாய் ஆராய்ச்சிக் கட்டுரை குறித்திருந்த விஷயம் தான் இது. கட்டுரையின் 136ம் பக்கத்தில் இரண்டாவது பத்தியில் இதைப்பற்றிய வரிகள் நினைவில் வந்தது, "சுயம் கட்டமைக்கும் கோட்பாடுகள் தகர்க்கக்கூடியதாய் இருப்பதில்லை, பகலின் பிரம்மாண்டம் சுயத்தை மறைத்து கோட்பாடுகளை இறுக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது. இரவின் தனித்த நெருக்கமான பொழுதுகள் கோட்பாடுகளைக் கடந்தும் சுயத்தின் இருப்பை உணர்த்தினாலும் சுயத்தை இழப்பது, இழக்க வைப்பது இரவின் தன்மைகளில் ஒன்றாகயில்லை. ஆனால் சுயம் தானாய் அல்லாமல் வேறுபல காரணிகளால் இழந்து போய்விடூம் இரவில் அது இன்னமும் இயல்பாய் அமையும்."

அந்தப் புத்தகம் மனிதர்களைப் பற்றி வீசியெறிந்த அத்தனை ரகசியங்களும் முகத்தில் பட்டு அதன் துள்ளியமான அவதானிப்பை ஆச்சர்யத்துடன் அணுக வைத்தது. பக்கங்களும் பத்திகளும் வரிகளும் சொற்களும் எழுத்துக்களும் தொடர்ச்சியான வாசிப்பினால் மனனமாகி சுற்றத்தின் செயல்களை வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த ஒவ்வொரு கணமும் புன்னகையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அந்தப் பிரதியின் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகளில் முக்கியமானது இந்தப் பிரதி எழுதி முடித்ததும் அவர் செய்து கொண்ட தற்கொலை பற்றிய இரண்டு வரிகள், காரணங்கள் என்று எதையும் குறித்திருக்காவிட்டாலும் மனப்பிறழ்வு என்ற ஒரு வார்த்தை அவரைப் பற்றிய தேடலைத் தூண்டியது. ஆனால் அந்தப் பிரதியைத் தவிர்த்து அவரைப் பற்றிப் பேச எதுவுமே இல்லை, பிரதியுமே கூட எதையும் சுய அனுபவமாக முன்வைக்கவில்லை.

சிலீரென்று உரசிய குளிர்காற்றொன்று நினைவுகளைப் புரட்டிப்போட கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த உற்சாகப்பானத்தை ரசித்து அருந்தியபடி இருந்த அவளைப்பற்றிய எண்ணம் படரத்தொடங்கியது. சேலைத்தலைப்பை அவள் உடலைச் சுற்றி மூடியிருந்ததாலோ என்னவோ அவளுடைய ஆடையில்லாத உடல் மனதெங்கும் பரவி கொஞ்சம் சூழ்நிலையை அந்நியப்படுத்தியது. கற்பனை தன் கரங்களில் பகடைகளை உருட்டி விளையாடத்தொடங்கிய பொழுதில்,

"அவர் இப்ப இந்தியா ஆபிஸில் இல்லை! தெரியுமா?"

அவள் எப்படி அத்தனை விரைவில் உடுத்திக்கொண்டாள் என்ற ஆச்சர்யத்துடன் அவளுடைய கேள்வியை அணுகினேன்.

"தெரியும்!" அன்றைக்கென்னமோ மார்ட்டினி என்றையும் விட போதையை அதிகம் தருவதைப்போல் உணர்ந்தேன்.

சிரிக்கத் தொடங்கினாள், மழை மேகத்தைப் போல் சிறிதாய்த் தொடங்கியவள், குபீரென்று புயல்மழையைப் போல் தன் சிரிப்பைத் தீவிரமாக்கினாள். அவளுடன் இணைந்து கொள்வதற்கான இடைவெளி தேடியவன் கிடைக்காததால் சட்டென்று இடித்து மின்னும் இடி மின்னலாய் புன்னகையொன்றை மட்டும் அவிழ்த்து விட்டு மீண்டும் உதடுகளை மார்ட்டினியில் முக்கினேன்.

"அவருக்கு உங்களைப் பார்த்து பயம்." இடையில் நிறுத்தி சொல்லிவிட்டு தொடங்கியவள். அன்றைக்குப் பின்னான நிகழ்ச்சிகளை கோர்க்கத் தொடங்கினாள் பூக்களாக, அழகுக்காகவும் வேறுபாட்டுக்காகவும் இடையில் சேர்க்கும் வேறு நிறப்பூவாய் என் சொற்கள் அங்கங்கே இணைக்கப்பட்டு, அரைமணிநேரத்தில் பூமாலை தொடுத்திருந்தாள். காதலுடன் போதையாய் என் கழுத்தில் அனுமதியை புறந்தள்ளி அணிவித்தவளின் வேகம் என்னை பிச்சைக்காரனின் தட்டில் தூரத்தில் இருந்து வீசியெறிப்பட்ட காசாய் தடுமாற வைத்தது. ஆனால் தடுமாற்றம் கிளப்பிய உற்சாகம் அவள் அழைப்பைத் தொடர்ந்து ரிசார்ட்டில் அவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நகரவைக்கும் வல்லமை கொண்டதாயிருந்தது.

அந்த நிலையிலும் கூட எனக்கான வரிகளை மனம் தேடிக்கொண்டிருந்தது, தேடுதலின் வேகம் கொண்டுவந்த சொற்கள் மனதில் கூட்டப்படும் முன்னர், அந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் உளறியபடி வைத்த அவள் முத்தத்தின் சத்தம் ஸ்தம்பிக்க வைத்தது. இரக்கமற்ற முறையில் என் கழுத்து அறுக்கப்பட்டு நிலை தடுமாறி நான் விழுந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ சட்டென்று விழித்துக்கொண்ட சுயம், பொய்களின் மீது கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் நகர்ந்து விளையாடி பிரம்மிக்க வைத்து என் அறைக்கு கொண்டு வந்து தள்ளி தன்னை நிரூபித்துக் கொண்டது.

பலூன் ஒன்றின் மீதான குழந்தையின் ஆவலுடன் ஆராய்ச்சிக்கட்டுரையின் பிரதியைப் புரட்டிப் பார்க்க நினைத்து துலாவியவனின் கையில் சிக்கியது மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் மூல மொழி பதிப்பு. எதோ நினைவாய் புரட்டிய ஒரு எண்ணின் பக்கத்தில் இருந்த பத்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதறிப்போய் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் அதே பக்கங்களைப் சரிபார்க்க, அந்தப் பத்தி மொழிபெயர்க்கப்படாமல் விடப்பட்டிருந்தது புரிந்தது. பத்திகளில் சொல்லப்பட்டிருந்த, பகலில் மாட்டப்பட்டு இரவில் சற்றே இளகும் முகமூடிகளைப் போலில்லாமல் இரவிலும் இளக முடியாத முகமூடிகளுடன் அலையும் மனிதர்களைப் பற்றிய வரிகள் என்னை சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி தொட்டியில் சிதறும் தண்ணீர்த்துளிகளைக் கவனித்தபடியே உள்ளங்கைகளின் மத்தியில் அடங்கமறுக்கும் தேவையாய், பிசுபிசுப்புடன் கைமாற அதிர்ச்சியின் ஆச்சர்யக் கலவையில் அவள் முகம் அந்த அறையின் வெளிச்சத்தில் பிரகாசித்தது. மனித உணர்வுகளை அப்பட்டமாய் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தின் வரிகளாய் அல்லாமல் அப்படியே உணர்வுகளாய் உள்வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு பிரதி எழுப்பும் அகங்காரச்சிரிப்பு தாங்கமுடியாததாய் நீள, உறிஞ்சித் துப்பிய சக்கையாய் அங்கே மௌனம் கவிழ, பிரதியை எரித்து குளிர்காய்ந்தவாறு முகமூடிகளற்ற நிர்வாணம் எகிறிக்குதித்தது.

தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? படம் சொல்லும் பாடம்


வாழ்வில் பயப்படாத நாளே கிடையாது நமக்கு. பயம் எங்களை தினமும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பயத்தினூடாகவே நாம் வளர்ந்திருக்கிறோம். அச்சம் கொள்ளுதல் என்பது எமது உடலோடு மனதோடு கலந்துவிட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது. எல்லோருக்கும் எங்களைப் பயங்கொள்ள வைத்தே வாழப் பழக்கி விட்டிருக்கின்றனர். 

எனது பயம் அம்மாவின் பிரம்பில் இருந்து ஆரம்பிக்கிறது.குழப்படி செய்தால் அம்மா அடிப்பா என்கின்ற பயம் ஒரு கொடும் பயமாக தொடர்ந்துகொண்டே வந்தது. பயத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அம்மா என்மீது தன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தா.வாத்திமாரின் பிரம்புகளுக்கு இன்னமும் அச்சம் ஊட்டும் தன்மை இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதிலும் மிகவும் அச்சமூட்டுபவராக தில்லையம்பலம் வாத்தியாரும் அவருடைய பிரம்பும் இருந்துகொண்டே இருந்தது. பயம் மனித உணர்ச்சிகளை மேவி நிற்கக்கூடிய ஒன்று. பயத்தின் ஊடாக எங்கள் எதிரிகள் சாதித்துவிடுபவை ஏராளம்.வலிமையில்லாதவர்களை வலிமையுள்ளவர்கள் எப்பொழுதும் பயம் காட்டியே வைத்திருக்கிறார்கள்.

ஊரில் உள்ள சண்டியர்கள், கப்பம் வாங்குபவர்கள், தாதாக்கள் எல்லோரும் இந்தப் பயத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளனர்.இயக்கப் பொடியன்களும் ஏ.கே.47 துப்பாக்கிகளை தோளில் போட்டுக்கொண்டு சைக்கிள்களில் சுற்றி வருவார்கள். சிலர் துப்பாக்கியை வெளியில் தெரியக்கூடியவாறும் வைத்திருந்தார்கள். அவற்றை கண்டும் மக்கள் பயப்பட்டனர்.தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களைக் கண்டு பேரச்சம்கொள்ளும் ஒரு நிலமை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. 

உண்மையில் நான் இந்த நிலமையை 'யாழ்தேவி' புகையிரதத்தில்தான் கண்டிருக்கிறேன்.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரைக்கும் நன்றாக தமிழில் பாட்டுப்பாடி சத்தமாகப் பேசிக்கொண்டு வருகின்ற எத்தனையோ பேர் மதவாச்சி வந்தவுடன் பேசாமல் இருப்பார்கள்.சிங்களவர்களின் ஊர் வந்துவிட்டது என்ற பயம்;.பயத்தில் கருகி உறைந்துபோகின்ற எத்தனையோ மனிதர்களைக் கண்டிருக்கிறேன்.எமது கிராமங்களை சிங்கள இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்து கொண்டுபோகும்போது பயத்தால் உயிர் பதறிப்போகும்.

அப்பாவி மக்களைக் கைதுசெய்து கொண்டுபோய் 'தலையாட்டிகள்' என்ற காட்டிக் கொடுக்கும் தமிழர்களுக்கு முன்னால் நிறுத்தும்பொழுது பயம் ஒன்று வந்துபோகுமே அது சொல்லில் எழுதிவிட முடியாத கொடுமை.தலையாட்டிகளின் முன் நின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு தலையசைவில் அந்த மனிதனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். என்ன பெரிய கொடுமை.

அச்சத்தால் இரத்தம் உறையுமே. அது அங்கு நடக்கும்.இன்னும் ஊர்களில் நிம்மதியாக வாழ முடியாத பயத்தினால்தான் எத்தனையோபேர் வெளிநாடுகளுக்கு ஓடி வருகின்றனர். கொழும்பில் இருந்தால் வெள்ளை வான் தூக்கிவிடுமோ என்ற பயத்தில் லண்டன்வந்த பலரை எனக்குத் தெரியும்.யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது, மட்டக்களப்பில் வாழ முடியாது, கொழும்பில் வாழ முடியாது உயிர் அச்சம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை பத்து லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி கனடா, லண்டன், அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து, நோர்வே, ஜேர்மனி, ஹொலண்ட், பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, டென்மார்க், சுவிட்சலாந்து என்று திக்கு திக்காகப் பிரிந்துபோய்க் கிடக்கிறார்கள். எல்லோரும் சுகபோகமாக வாழவில்லை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கையைவிட்டு ஓடியர்கள்தான் இதில் 99 வீதமானோர். ஒரு வீதம்தான் படிப்புக்காக வந்தவர்கள்.

இலங்கையில் வாழ முடியாத உயிர் பயம் காரணமாக ஒரு தலைமுறைத் தமிழர்களை விரட்டிவிட்டிருக்கிறது யுத்தமும் சிங்கள தேசமும்.மட்டக்களப்பில் ஒரு அரசியல்வாதி மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அச்சப் பேச்சும் இன்னும் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.பொதுமக்களைப் பார்த்து சொல்கிறார் 'அரசாங்கத்துக்கு வாக்களித்தவர் யார், வாக்களிக்காதவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவாராம்'. வாக்குச் சீட்டில் என்ன புகைப்படமா ஒட்டுகிறார்கள்? இது அச்சப்படுத்துகின்ற ஒரு அடாவடித்தனம் இல்லாமல் வேறென்ன?

உண்மையில் உயிர் அச்சம் என்ன என்பதனை நான் உயர்ந்தது 'சுடரொளி' குண்டுவீச்சுக்கு பிறகுதான்.'சுடரொளி' இற்கு ஒரு கட்டுரையை கொடுப்பதற்காக சென்றபொழுது யாரோ இரு இளைஞர்கள் 2 கைக்குண்டை வீசவும் நான் கேற்றடிக்குப் போகவும் நேரம் சரியாக இருந்தது.

எனக்குப் பக்கத்தில் கிரனைட் உருண்டுகொண்டு வந்தது. ஒரு 10 செக்கன்தான் ஓடினேன். அது வெடித்தது. காலில் சிறு காயம். எனக்குப் பக்கத்தில் நின்ற செக்கியூரிட்டி ஜோர்ஜ் ஐயா நெஞ்சு வெடித்து செத்துப்போனார்.அதற்குப் பிறகு பயம் காரணமாக இரவில் எனக்குத் தூக்கமே வருவதில்லை. எங்களது வீட்டுக்கு தகர கேட் போட்டிருந்தோம். அது சும்மா தட்டுப்பட்டால்கூட எழுந்து உட்கார்ந்துவிடுவேன் பயம்.இரவு என்பது எனக்கு அச்சத்திற்குரியதாகவே இருந்தது. சிறிய சத்தங்களும் எனக்குப் பயம்கொள்ளும்படியே இருந்தது. வத்தளையில் இருக்கும்வரை எனக்கு இரவு சந்தோசமானதாக இருந்ததில்லை. லண்டன் வந்த பின்னர்தான் பயமில்லாத நித்திரை வந்தது எனக்கு.இப்படி எத்தனைபேர் இன்னும் உயிர் பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நினைக்கும்போது என்னால் உணர முடிகின்ற பயம் இது.'பயப்படாதீங்கோ. ஒன்றும் நடக்காது'. என்ற ஆறுதல் எல்லாம் எடுபடாது. பயம் என்பது மனதை அறுக்கின்ற ஒரு விடயம். அதனைவிட்டு மீளவேண்டுமானால், ஒரு மனிதன் தனது மன அமைதியின் ஊடாகவே முடியும். ஆனால் தமிழனாக பிறந்துவிட்டு சிங்களவனோடு இந்த அளவுக்கு முரண்பாடுகொண்டுவிட்டு அதனை சுமூகமாகத் தீர்க்காதவரை அச்சம்வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.

துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சர்வாதிகாரம் இருக்கும்வரை தமிழர்கள் உயிர்பயம் இல்லாமல் வாழ முடியும் என நான் நினைக்கவில்லை.லண்டனில் நான் சந்தித்த அகதி ஒருவர் அழுதுகொண்டே இருந்தார். 'ஏன்' என்று நான் கேட்டேன்.'பயமா இருக்கு', என்று கூறினார். 'என்னத்துக்கு' என்றேன். 'பொலிஸ் சைரன், அம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலிக்கு', என்றார்.பாருங்கள் அவர் இந்த உலகத்தில் வாழும்வரை பயந்துகொண்டும் அழுதுகொண்டும் இருப்பார். ஏனெனில் இலங்கையில் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டவர்.

லண்டன் வந்தபிறகும் பொலிஸ் காருக்கும் அம்புலன்ஸ் வண்டியின் சத்தத்திற்கும் அச்சப்படுகிறார்.லண்டனில் பொலிஸ் காரும் அம்புலன்ஸ் வண்டியும் ஒரு நாளுக்கு பல தடவைகள் றோட்டால் போய்க்கொண்டிருக்கும். ஆகவே அந்த தமிழரின் நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.அதே உயிர் பயத்தோடு இங்கு வந்த பலர் மனநோய் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். பயத்தின் அடுத்த கட்டம் மனநோய் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடும்.இங்கு டொக்ரர் சசிகாந்த் உடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது யுத்தம் பலரை மனநோயாளியாக்கியிருக்கிறது என்று சொன்னார்.தங்கள் உயிர்களை துப்பாக்கிதாரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பட்டபாடுதான் இந்த மனநோய்க்குக் காரணம் என்றார் அவர்.அத்தோடு ஒரு உதாரணமும் சொன்னார் அவர். நாயொன்று ஒரு மனிதனை கடித்துக் குதறுவதற்காகத் துரத்துகிறது. அப்பொழுது அச்சத்தின் காரணமாக அவன் ஓடுகிறார்.

அது பயம். அந்த நேரம் பயம் காரணமாக மூளையின் தூண்டுதல் காரணமாக சுரக்கின்ற சுரப்புக்கள், மனப் பதட்டம் என்பன நாய் மனிதனைவிட்டுப் போன பிறகு சாதாரண நிலமைக்கு வந்துவிடும். ஆனால் அதே மனப்பதட்டம், சுரப்பிகள் ஒவ்வொரு நாளும் வேலை செய்தால் மனதின் நிலமை என்னவாகும். மனம் சிதைந்துபோகும்.

இப்படியான மனிதர்கள் எத்தனையோபேர் நம்மத்தியில் இருக்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகிவிடுகின்றனர்.இங்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களுக்கான மதிப்பு இருக்கிறது. ஒருவரை அச்சப்படுத்துவது கிறிமினல் குற்றமாகும். அதிலும் உயிர் தொடர்பான அச்சம் விடுவது பாரதூரமான குற்றமாகும்.இலங்கையில் உயிர் எடுக்கவென்றே மக்கள் திரியும்போது இந்த உயிர் பாதுகாப்பு உண்மையில் தமக்கான பாதுகாப்பாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.ஆனால் இங்கும் சண்டியர்கள் ஆயுதங்கள், வாள்கள், பொல்லுகளுடன் திரிந்து தமிழர்களை அச்சப்படுத்துபவர்கள் லண்டனில் இருக்கிறார்கள்.இப்பொழுது பொலிசாரின் கெடுபிடி காரணமாக அவர்கள் கொஞ்சம் அடங்கிப்போய் இருக்கிறார்கள்.

ஊரில் துப்பாக்கிகள், வாள்களோடு பழகியவர்கள் லண்டன் வந்தும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.பொலிசாரின் ஒரு ஒப்பறேசனில் தமிழர்களிடம் பிடிபட்ட ஆயுதங்கள் என லண்டன் தொலைக்காட்சி செய்திகளில் காண்பித்தார்கள்.என்ன நினைக்கிறார்கள் தமிழ் சண்டியர்கள். ஊரில்போல லண்டனிலும் தங்களிடம் பயந்து வாழ வேண்டும். கப்பம் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இங்கு சண்டியன்களாக 18 வயது பொடியன்கள் இருப்பதுதான் கொடுமையான விடயம்.அச்சம் எப்பொழுதும் எம்மை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விடயம்தான்.தைரியம் மட்டுமே அச்சத்தை விரட்டுகின்ற ஒரே ஒரு வழி.

ஆனால் அந்த தைரியத்தையும் மீறி அச்சமூட்டுகின்ற எத்தனை விடயங்கள் மனிதனை துரத்துகின்றன.எத்தனைபேர் உயிர் அச்சத்தினால் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்துபோய் பரதேசிகளாக மாறிவிட்டனர். உண்மையில் பயம் என்பது எம்மை ஒவ்வொரு நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.அதனை வெல்வதற்கான வழிகளைத்தான் ஞானிகள் சொல்கிறார்கள்.இந்த உலக வாழ்வில் பணம், புகழ், பூமி இவற்றை தக்கவைத்துக் கொள்ள மற்றவரை அச்சப்படுத்திக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.தன்னிடம் உள்ளவற்றைப் பறித்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக மற்றவனை இல்லாமலாக்கிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது இலங்கையானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, விதி ஒன்றுதான்.

கரண்டு கட்டணம் உயர்வுக்கு முன் "ட்ரையல்" கட்டணம் ரூபாய் 25

 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாகவே "டெஸ்டிங்' என்ற பெயரில் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் பால், பஸ் விலை உயர்த்தப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மின்சார கட்டணமும் உயருகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சார கட்டணத்தை செலுத்த சென்றவர்களுக்கு நேற்று "திடீர்' அதிர்ச்சி காத்திருந்தது. 

மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாக நேற்று "டெஸ்டிங்' என்ற பெயரில் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் கேட்ட போது சரியாக பதில்களை தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்தனர். மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பாக "டெஸ்டிங்' என்ற பெயரில் கட்டணம் வசூலித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.