விஜய் டிவி மியூசிக் அவார்ட்ஸ் என நிகழ்ச்சி நடத்தினார்கள். எல்லா பாடகர், பாடகியும் கூப்பிட்டு வந்த எல்லாருக்கும் ஏதாவது ஒரு கேட்டகரியில் விருது தந்தனர். இதில் கமலுக்கு "நடிகர்கள் பாடியதில் சிறந்த பாடல் விருது" என நீல வானம் பாட்டுக்காக குடுக்க பட்டது. விருதை வழங்கிய யேசுதாஸ், விருது பெற்ற கமலிடம் ஒரே கேள்வி தான் கேட்டார்: "நீங்க முறைப்படி சங்கீதம் கத்துக்கிடீங்களா ?" இதுக்கு கமல் சொன்ன பதில் இருக்கே ..அடடா ! இதை யாராவது புரிஞ்சிக்கிட்டா அவங்களுக்கு அதுக்கே விருது குடுக்கலாம். அது எப்படி கமல் மட்டும் திடீர்னு கேள்வி கேட்டா கூட இப்படி தலையை & உடலை சுற்றி பதில் தர்றாரோ ! யேசுதாஸ் நம்ம கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு "சரி. நீங்க பாட்டு கத்துக்கிட்டீங்க. யாரிடம் கத்துக்கிட்டீங்க?" என்று கேட்டார். இதுக்கும் தலையை சுற்றி சொன்ன பதிலில் கமல் பால முரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்று கொண்டது தெரிந்தது. கமல் மைக் பிடித்தாலே நமக்கு சில நேரம் கிலியாகிடுது. சில நேரம் சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணி வருது. நடத்துங்கண்ணா !
அம்மாவும் அமைச்சர்களும்
அம்மாவின் அமைச்சர்கள் சிலர் நமக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் தருகிறார்கள். மாதிரிக்கு சில :
உதய குமார் என்பவர் ஐ. டி துறைக்கு அமைச்சர். இவர் காலணிகள் அணிவதே இல்லை. காரணம் கேட்டால், " அம்மா இருக்கும் இடத்தில எப்படி செருப்பு போடுவது?" என்கிறார். எல்லா இடத்திற்கும் செருப்பு அணியாமலே செல்லும் இவர், அரசு நடத்தும் மீட்டிங்குகளில், பல உயர் அதிகாரிகள் பளபளக்கும் ஷூக்களுடன் இருக்க தான் மட்டும் செருப்பின்றி அமர்ந்து மீட்டிங் நடத்துகிறார். (கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்மா இவரை அவசியம் செருப்பு அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்)
செல்ல பாண்டியன் என்கிற தொழிலாளர் துறை அமைச்சர் கதை வேறு விதம். தனது பெண் கல்யாணத்திற்கே இவர் போகவில்லை. அம்மா நடத்துகிற மீட்டிங் தான் முக்கியம். பொண்ணை அப்புறம் பாத்துக்கலாம் " என்பது இவரது கருத்து.
நமக்கு இது மாதிரி சுவாரஸ்ய நியூஸ் இனி நிறைய கிடைக்க போகுது ..
இரு கேள்வி இரு பதில்
கேள்வி : தமிழக அரசிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதிவர் பதில் : (பெயர் வேண்டாம் என சொல்லி விட்டு சொன்னது)
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுடைய முதல் ஏழு கையெழுத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக முதியோருக்கு மாதாந்திரம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. ஆயிரம் பலராலும் வரவேற்கபடுகிறது.
இனி, நாங்கள் தங்களிடமிருந்து உடனடியாக எதிர்ப்பார்ப்பது, தாங்கள்
தேர்தலில் சொன்ன இலவசத்தையல்ல. அதற்கு முன்பு.
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூல் செய்வதையும், கட்டணக் கொள்ளையையும் கட்டுப்படுத்தவும். அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கையும்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில வட்டியில்லாக் கடன் வழங்கவும். தடையில்லா மின்சாரம் கிடைப்பதோடு, தொழிற்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும்.
ரேஷன் கடைகளில் தரமானப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும். தாறுமாறாக ஏறும் விலைவாசியை சீர்ப்படுத்தவும்.
வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத்திருட்டு, சாலை விதி மீறல்களால் ஏற்படும் விபத்து போன்றவற்றை முற்றிலும் தடுக்கவும். அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி போன்ற சட்டவிரோத செயால்களில் ஈடுபடுவோரை ஒழிக்கவும்.
பூரண மதுவிலக்கு அல்லது விற்பனை நேரத்தைக் குறைக்கவும். விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, பொருட்களை அரசே வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும்.
அரசு மருத்துவாமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு, கிராமப்புற மருத்துவனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கேயே தாங்கி பணிபுரிய குடியிருப்புகள் ஏற்படுத்தவும். மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு மற்றும் தைராயிட போன்ற ் நோய்களுக்குரிய மாத்திரைகளை, மாதத்திற்கு ஒரு முறை வழங்கவும். அப்படி வழங்குவதால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படப் போவதில்லை. அதே நேரம் நோயாளிகளுக்கு பொருளாதாரம் மற்றும் நேரம் மிச்சமாகும். இன்னும், சர்க்கரை வியாதிக்கு ஒருநாள், ரத்த அழுத்தத்திற்கு ஒருநாள், வலிப்பு நோய்க்கு ஒருநாள், என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பெரும் பகுதியினருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், போன்றவை சேர்த்தேதான் வருகிறது. இந்நிலையில் இம்மாதிரி நோயாளிகளுக்கு ஒரே நாளில் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்.
அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும். அனைத்துக் கிராமங்களையும், நகரங்களுடன் இணைக்க மினி பஸ் வசதியை அதிகப்படுத்தவும்.
இவைகளையும், இன்னும்பிற மக்கள் நலத்திட்டங்களையும் செய்த பிறகு, இலவசத்தைத் தாருங்கள் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களில் ஒருவன்.
கேள்வி 2 : நமது தற்போதைய கல்வி முறை சரியானது தானா? இதில் அவசியம் செய்ய வேண்டிய மாறுதல்களாக நீங்கள் கருதுவது என்னென்ன?
பதில் : கார்த்திகை பாண்டியன்
ஒரு ஆசிரியராக நான் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். முதலில் இப்போதுள்ள கல்வி முறையை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிகள் இருக்கும் உயர்நிலைக் கல்வி.
பள்ளிக் கல்வியில் என்ன செய்து வைக்கிறோம்? குழந்தைகளின் தகுதிக்கு மீறிய விஷயங்களை அவர்களுக்குள் திணிப்பதானதாகவே இன்றைய பள்ளிக் கல்வி இருக்கிறது. என்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தில்தான் நான் கணினி என்பதையே அறிந்தேன். ஆனால் இன்றைக்கு முதல் வகுப்பில் இருக்கும் மாணவனுக்கு கணினி பற்றி சொல்லித் தருகிறார்கள். வயதுக்கு மீறிய விஷயமாகவே இது எனக்குப் படுகிறது.இதேபோல புரிந்து படிக்காமல் பாடத்தை மனப்பாடம் செய்து தாளில் வாந்தி எடுக்க வைக்கும் தேர்வுமுறையும் மிகக் கேவலமானதே. அருகில் இருக்கும் ஆந்திராவில் பத்தாம் வகுப்பிலேயே அடுத்த உயர்கல்விக்கான தெரிவு முடிந்து மாணவர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பார்களாம். அது போன்ற முறையை இங்கே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து கல்லூரிகள். நான் இருக்கும் துறை சார்ந்து பேச விரும்புகிறேன். பொறியியல் கல்லூரிகள் இன்றைக்கு கலைக் கல்லூரிகளக் காட்டிலும் அதிகமாக இருப்பது பெருங்கொடுமை.ஒரு பிசி போர்டைக் கொடுத்து இது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டால் பதில் வருவது கிடையாது. வெறுமனே புத்தகத்தில் இருப்பதைப் படித்து பரீட்சை எழுதி வேலைக்கு வரும் மாணவர்களுக்கு நிஜத்தில் எதுவும் தெரிவதில்லை. செய்முறை என்கிற ஒரு விஷயம் ஒழுங்காக அமல்படுத்தப்படாத வரைக்கும் சரிப்பட்டு வராது. கோவை பி.எஸ்.ஜி யில் சாண்ட்விக் என்றொரு கோர்ஸ் உண்டு. காலையில் தியரி வகுப்புகளும் மதியத்துக்கு மேல் படித்த விஷயங்களை செய்முறையாக விளக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போல எல்லாக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தினால் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஐ. பி. எல் கார்னர்
ஐ. பி. எல் பைனல் சென்னை வென்றதில் மிக மகிழ்ச்சி. அதிக மகிழ்ச்சி பெங்களூரை தோற்கடித்து ஜெயித்தது. என்ன ஒன்று பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் மேட்ச் one sided ஆக இருந்தது. பழைய ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் ஒரு முறை வென்ற கோப்பையை மறுபடி தொடர்ந்து தக்க வைத்தது (அதற்கு முன்பு எண்பதுகளில் மேற்கிந்திய தீவுகள்). அந்த விதத்தில் சென்னை தனது டைட்டிலை தக்க வைத்து கொண்டது. இந்த முறை ஒரு மேட்சும் நேரில் பார்க்கலை. அதனால தான் ஜெயிச்சுதுங்குரீன்களா? போன முறை நேரில் பார்த்தேனே.. அப்போ கப் ஜெயிச்சுதே !!
கண்டனம்
அமெரிக்காவில் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அவமானம் வருத்தப்பட வைக்கிறது. தனது ஆசிரியருக்கு அசிங்கமான எஸ். எம். எஸ் அனுப்பினார் என குற்றம் சாட்டி, கைது செய்து காவலில் மிக கடுமையாக நடத்தி இருக்கிறார்கள். குற்றங்களை இவர் மறுத்தார். பின் நிஜ குற்றவாளி யார் என தெரிந்ததும் அவரை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து பிரச்னையை முடித்து விட்டனர். Discrimination அமெரிக்காவிலும் இருக்கு !! கிருத்திகா பிஸ்வாஸ் நடத்தப்பட்ட விதத்திற்கு பள்ளியோ, காவல் துறையோ ஒரு மன்னிப்பு கூட கேட்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு
" வாரம் இரண்டு பதிவு " என்கிற கொள்கையுடன் இயங்கி வந்த பிரபல பதிவர் ஒருவர் (என்னது.. வாரம் ரெண்டு பதிவு மட்டும் எழுதினா பிரபலம் கிடையாதா? ரைட்டு !!), இனி பல வாரம் ஒரு பதிவு; சில வாரம் மட்டுமே ரெண்டு பதிவு என்ற முடிவுக்கு வந்திருக்கார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம். நீங்களும் இதே விதமாய் மகிழ்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து அவருக்கு தங்கள் ஆதரவை தருக.
|
No comments:
Post a Comment