சகோதரிகளின் கவனத்துக்கு
"ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.
''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.
''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?
''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.
'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா
ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!
|
No comments:
Post a Comment