அமிர்தசரசில், மனவளர்ச்சி குன்றிய, மாற்று திறனாளியான ஒன்பது வயது சிறுமியை, அவரது பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி, துர்நாற்றம் வீசும் இருட்டறையில் அடைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.பஞ்சாப், அமிர்தசரசை சேர்ந்த பெண் குல்வந்த் கவுர். ஏழையான இவரது, ஒன்பது வயது மகள் சிம்ரஞ்சித் கவுர். மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளியான இச்சிறுமியை, குல்வந்த் கவுரும், அவரின் குடும்பத்தினரும், சங்கிலியில் கட்டி இருட்டறையில் அடைத்து வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசும் அறையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறுமி அடைக்கப்பட்டிருந்தது, தற்போது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தாய் குல்வந்த் கவுர் கூறுகையில், "சிம்ரஞ்சித் கவுர், ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது, இன்னதென்று தெரியாத மர்மமான நோய் அவளை தாக்கியது. அதிலிருந்து அவள், தன்னைத் தானே தாக்கிக் கொள்ளுவது மற்றும் மற்றவர்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டாள். இதனால், அவளை கட்டாயமாக சங்கிலியில் கட்டி வைக்கும் நிலை ஏற்பட்டது. ஆதரவற்றவர்களான எங்களுக்கு, வேறு வழி தெரியவில்லை. ஏழ்மை நிலையில் உள்ளதால், எங்களால் மருத்துவ சிகிச்சை செய்ய முடியவில்லை. சிம்ரஞ்சித் கவுரின் பாட்டி நரீந்தர்கவுர் தான், அவளுக்கு உணவு ஊட்டி, அவளது தேவைகளை கவனித்து கொள்கிறார்.
என்றாவது ஒரு நாள், அவள் குணமடைய வேண்டும் என, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்'என்றார்.இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், சிம்ரஞ்சித் கவுரின் நிலை தெரிந்தாலும், அதுகுறித்து பேசாமல் மவுனமாகவே இருந்துள்ளனர். அடுத்த வீட்டில் வசிக்கும் அமந்தீப் சிங் கூறுகையில், "கடவுளின் திருவுளம் இவ்வாறு இருக்கும் போது, அதற்கு இடையூறாக நாங்கள் இருக்கக் கூடாது' என இருந்தோம் என்றார்.
|
No comments:
Post a Comment