நான் சென்னையைச் சேர்ந்தவள்; வயது 41. எனக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகின்றன. என் கடிதத்தை படித்து, ஒரு ஆண் திருந்தினாலும், மகிழ்ச்சி அடைவேன்.
எங்களது குடும்பம் நடுத்தரமானது. நான் கடைக்குட்டி என்பதால், பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. எனக்கு, இரு அண்ணன்கள், ஒரு அக்கா. நான் அதிகம் பேசாத புத்திசாலி குழந்தையாக இருந்திருக்கிறேன். அதனாலேயே பின்னாளில் பணியில் சேர்ந்த போதும், பணியிடத்தில் நற்பெயர் பெற்று, உயர் பதவியில் இருக்கிறேன்.
எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் வந்தது. பெரும்பாலான மாப்பிள்ளை களின் பெற்றோரால், கறுப்பு என உதாசீனப்படுத்தப்பட்டேன். பெண் பார்க்கும் படலத்துக்கு முன், நான் கறுப்பு, அழகானவள் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது இல்லை. "அக்காவை போஷாக்காய் கவனித்த நீங்கள், என்னை கறுப்பியாய் திகழ விட்டு விட்டீர்களே...' என்று, பெற்றோருடன் சண்டை போட்டேன். தொடர்ந்து நல்ல வரன் அமைய திண்டாடினோம்.
நான் பணிபுரியும் நிறுவனத்தில், உடன் பணி புரியும் ஓர் இளைஞன் முன் வந்தான். நானும், என் தந்தையும் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகிறோம் என்பதை முதலில் சொல்ல மறந்து விட்டேன். நானும், என் தந்தையும் கம்பீரமாக, மிடுக்காக தோற்றமளிப்போம். என் தந்தையோ, "அந்த இளைஞன் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்; தவிர, நல்லவன் இல்லை...' எனக் கூறி, அவனை மறுத்து விட்டார்.
தொடர்ந்தது பெண் பார்க்கும் மேளா. மணப்பெண் கறுப்பு என்ற விமர்சனத்துடன், தொடர்ந்து ஒதுக்கப் பட்டேன். 15 மாப்பிள்ளை வீட்டார் என்னை பார்த்து போயிருந்தாலும் அவர்களில், மூன்று வீட்டார்தான், மாப்பிள்ளை களை அழைத்து வந்திருந் தனர். அக அழகை விட, புற அழகைதான் உலகம் கால காலமாக மதித்து வருகிறது. தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை ஒதுக்குகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பணியிட இளைஞன், மீண்டும் என்னை அணுக ஆரம்பித்தான். அவனது பெற்றோர் என்னை வேண்டாம் என்று சொன்னாலும், அவன் ஒதுங்கப் போவதில்லை என உறுதி கூறினான். தொடர்ந்து என்னை காதலிக்க ஆரம்பித்தான். இந்த தடவை தந்தையின் அபிப்ராயத்துக்கு எதிராக நானும் அவனை காதலிக்க ஆரம்பித்தேன். ஒரு வருட காதலுக்கு பின், இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணமான இரண்டாவது நாளிலிருந்தே என் கணவர் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்; என் தந்தையின் கூற்று உண்மையானது. பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தேன். தற்கொலை முயற்சிகளுக்குப் பின், நான் ஏன் சாக வேண்டும்... நாம் இறந்தால் இவன் இன்னொருத்தியை மணந்து, அவளை படாத பாடு படுத்துவான் என உணர்ந்தேன்
அவன் மூலம் எனக்கு, இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவனுக்கு வயது 15. பத்தாம் வகுப்பு படிக்கிறான்; இளையவனுக்கு வயது11. ஆறாம் வகுப்பு படிக்கிறான். மூத்தவனுக்கு தந்தையின் அட்டூழியங்கள் அனைத்தும் புரிகிறது. ஆனாலும், இரு மகன்களும் தந்தைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, என் கணவனுக்கு
கொடுக்கின்றனர்.
என் கணவன் என்னென்ன அட்டூழியங்கள் செய்கிறான் என கேட்கிறீர்களா?
எங்களது திருமணத்தின் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டார். இலக்கு சாதித்தால் சம்பளம்; இல்லை யென்றால் சம்பளம் கிடையாது என்ற நிபந்தனை விதித்த நிறுவனத்தில் போய் வேலைக்கு சேர்ந்தார். என்றைக்குமே என் கணவர் இலக்கு சாதித்ததில்லை. ஒரு பைசா கூட சம்பளம் என்று வீட்டுக்கு எடுத்து வந்ததில்லை. இதையே காரணம் காட்டி, வேலையை விட்டு நின்று, வீட்டு கணவன் ஆனார். தந்தை ஸ்தானத்துக்கும் லாயக்கில்லாத அவர் குடிக்கும், சிகரட்டுக்கும் அடிமையானார். தொண்டை வரை குடிப்பது, தொண்டை கிழிய கத்துவது அவரின் தினப்படி வேலையாயிற்று. தவிர, சொந்த அத்தை மகளுடன் தகாத உறவு வைத்திருந்தார். அந்த பெண் வேறொருவரை மணந்து கொண்ட போது, "சண்டாளி... துரோகம் செய்து விட்டாள்...' என புலம்பி தீர்த்தார்.
"ஏன் அட்டூழிங்கள் செய்கிறீர்கள்?' என்றால், சதா வேலை, வேலை என்று அலையும் கறுப்பி நீ... நான் விரும்பிய வகையில் எல்லாம் உனக்கு தாம்பத்யம் பண்ணத் தெரியவில்லை...' என, குறை கூறினார்.
நானும், என் இரு மகன்களும் அவருக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்; ஆனால், அவர் எங்கள் மூவருக்கும் உண்மையாக நடப்பதில்லை. என் பிரச்னைகளால் வெகுவாய் பாதிக்கப்பட்ட தந்தை இறந்து போனார். என் கணவரின் துர் நடத்தைக்கு பயந்து, என் சகோதரி, சகோதர குடும்பங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதில்லை. என் கணவரின் குடும்பத்தாருக்கும், என் கணவரை பிடிக்காது; அவர்களும் வருவதில்லை. அவர் மட்டும் மகாராஜா, மற்ற எல்லாரும் அவரது அடிமைகள் என்ற நினைப்பு என் கணவருக்கு.
என் கணவர், வாரம் தவறாமல் அன்புடன் அந்தரங்கம் வாசிப்பார். அவரிடம் நேரடியாக சொல்ல முடியாத விஷயத்தை, இப்பகுதி மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே எனக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்துள்ளது. கணவரின் ஊதாரித் தனத்துக்கும், மகன்கள் படிப்புகளுக்கும் சம்பளத்தில் கழியும் வண்ணம் நிறைய கடன்கள் வாங்கி இருக்கிறேன். காரில் போகும் பணித் தகுதி பெற்றிருந்தாலும், பணிக்கு, டூ-வீலரில் தான் செல்கிறேன். என் கவலையில் என் தாயாரும் அடிக்கடி சுகவீனப்பட்டு போகிறார்.
என் கணவர் விஷயத்தில் நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறுங் கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
உன்னுடைய தாழ்வு மனப்பான்மைதான் உன் கணவனின் பலம். என் தோழி, யானைக் கறுப்பாய், நூறு கிலோ குண்டாய் இருப்பார். அவர் கணவர் அல்வாவும், பூவும் வாங்கிச் செல்லாத நாளில்லை. மனைவி மீது, அவ்வளவு காதல். என் தோழியும், மிடுக்கு காட்டுவார்.
உன்னுடன் பணிபுரிந்த காலத்திலும், இருவரும் பெற்றோரின் சம்மதத்திற்காக ஒரு வருடம் காத்திருந்த காலத்திலும், உன் பலவீனப் புள்ளிகளை கணக்கெடுத்து விட்டான் உன் கணவன்.
கணவனுக்கு திருப்தியான தாம்பத்யம் தரத் தெரியாதவள் என்ற குற்றச்சாட்டு நரித்தனமானது. பத்தாவது படித்தவனுக்கு, எங்கு நல்ல வேலை கிடைக்கும்? எட்டு மணி நேரம் உடல் உழைப்பு செய்யும் பணிதான் கிடைக்கும்; அதற்கு, உன் கணவன் தயாரில்லை, அவனை தட்டிக் கேட்க கூடாது என்பதற்காகத்தான் இரு பக்க சொந்தங்களை கத்தரித்து விட்டுள்ளான். எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த கணவனை, துணிச்சலாய் வெளியே விரட்டி விட்டாள். மகள்கள் படித்து நல்ல வேலைக்கு வந்து விட்டனர். சொந்த வீடும் கட்டிவிட்டாள் அந்தப் பெண்.
பொருளீட்டுதல் கணவனின் அடையாளம். பொருளாதார ரீதியாய் மனைவியை சந்தோஷமாய் வைத்திருப்பது கணவனின் கடமை என்கிறது இஸ்லாம்.
நீயும், உன் மகன்களும் அநியாயத்துக்கு பயந்து சாகிறீர்கள். "சம்பாதித்து விட்டு வீட்டுக்கு வா... அப்படி வந்தால்தான், "வீட்டுக்குள் இடம்...' எனக் கூறு. வீட்டிற்குள் குடிக்கவோ, பகலில் தூங்கவோ, நெட் மேயவோ அனுமதிக்காதே. வீட்டிற்குள் குடித்துவிட்டு வந்து கத்தினால், வம்பு செய்தால், "மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்...' எனக் கூறு. திருந்துவதற்கு, ஆறு மாதத்திலிருந்து, ஒரு வருடம் வரை அவகாசம் கொடு. திருந்தாவிட்டால் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோருவேன் என மிரட்டு.
உன் கணவனுக்கு, வீட்டுக்கு வெளியே, நூறு ரூபாய் கடன் தரக் கூட ஆளில்லை. நீ நிமிர்ந்து நிற்கும் வரைதான் உன் கணவன் வம்பு செய்வான். நீ சீறி சினந்தாய் என்றால், பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவான்.
பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரி! தாழ்வு மனப்பான்மை இரும்பு சங்கிலியை உடைத்தெறிந்து விட்டு, வசந்தசேனையின் அரசவையை துவம்சம் பண்ணு.
உன் மகன்கள் அவர்களது தந்தைக்கு கொடுத்து வந்த போலி மரியாதையை நிறுத்தச் சொல். உன் நிபந்தனைகளை மீறி, உன் கணவன் வீட்டுக்குள் வந்தால், காவல்துறை நடவடிக்கை எடு.
சகுந்தலா கோபிநாத்தின் யோசனை முதலுக்கே மோசம் செய்துவிடும் போலிருக்கிறதே என யோசிக்காதே. மோசடி செய்யப்பட்ட முதல், திரும்ப கிடைக்கும் மகளே!
உன்னுடைய, பத்து கேள்விக்கும் உருப்படியான பதில் உன் கணவனிடமிருந்து கிடைக்கும். எப்போது? நடு ரோட்டில் கொலை பட்டினியாய் உன் கணவன் நிற்கும் போது, நீ கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்ல, நீ கேட்காத கேள்விகளுக்கும் பதில் சொல்வான்.
உன் கணவனின் கொட்டம் அடங்கும் நாளில், உன் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்.
உன்னுடைய முயற்சிகள், வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
|
No comments:
Post a Comment