இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அண்மையில் கூடிய, இத்தகைய பெயர்களை அனுமதித்து, கண்காணித்து வரும் ஐகான் (ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும், புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம்.
இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி, குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெயரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம்.
இப்போது நாடுகளை மட்டும் அடையாளம் காண பெயர் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்திய தளங்கள் .in என்ற துணைப்பெயருடன் அமைக்கப்படுகிறது. இனி, புதிய அனுமதியின் பெயரில், மாநிலங்களை அடையாளம் காட்டும் வகையிலும் பெயர்களை அமைத்துக் கொள்ளலாம்.
இந்த பெயர்களை அமைத்து ஒப்புதல் வாங்கிட, வரும் 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த தகவல்களை இந்திய இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment