சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்ததை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்;தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.பொது எதிரியான போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.
மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்கவில்லை என்ற ஆராய்ச்சியிலா இறங்குவது?மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறு மொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே!மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகிவிடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சியினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதலமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை. இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் உதவும்; மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு செய்யுமா மத்திய அரசு? என்று கேட்டுள்ளார் வீரமணி.'முன்னேற்றம் ஏற்படாது'இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும்.இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார் அவர்.
|
No comments:
Post a Comment