Tuesday, June 28, 2011

விக்கி பீடியாவை மட்டும் விட்டு வைக்க வேண்டுமா?

விக்கிபீடியாவில் உங்களுக்கென்று ஒரு கட்டுரைப்பக்கம் இருந்து அதில் உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும்.


நீங்கள் பிறந்து வளர்ந்த விதம், உங்கள் பள்ளிப்பருவம், உங்களுடைய விருப்பு வெறுப்புகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்ற விவரங்களை எல்லாம் அந்த கட்டுரை வழங்கினால் எப்படி இருக்கும்.

யாருக்கேனும் உங்களைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் இந்த விக்கி பக்கத்தை பார்த்தாலே போதும். கூகுலில் உங்கள் பெயரை டைப் செய்து தேடினால் இந்த பக்கம் முதலில் வந்து நின்று உங்களை அழகாக அறிமுகம் செய்து வைக்கும்.

இப்படியொரு இணைய அறிமுகம் கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும் என அக மகிழ்ந்து போகும் அதே நேரத்தில் ஆனால் விக்கிபீடியாவில் தனிநபர்கள் பற்றிய அறிமுக கட்டுரையை இடம் பெறச் செய்ய முடியாதே என்ற ஏக்கப் பெருமூச்சும் விடுவீர்கள் என்றால் கவலையை விடுங்கள். உங்களுக்கான விக்கிபீடியாவாக டிஜிகாட் என்னும் இணைய சேவை அறிமுகமாகியிருக்கிறது.

தனிநபர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லக் கூடிய இந்த தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அறிமுக கட்டுரையை உருவாக்கிக் கொள்ளலாம். விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையை போலவே இளமைக் காலம் பிடித்தவை, சாதனைகள், இலக்குகள் என தனித்தனி துணை தலைப்பிட்டு சுய விவர குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.

உள்ளடக்கத்திலும் சரி, தோற்றத்திலும் சரி விக்கி கட்டுரை போலவே இருக்கும் இந்த சுயவிவர குறிப்புகள். உங்களை இணைய உலகிற்கு நீங்கள் விரும்பும் வகையில் அறிமுகம் செய்து வைக்கும்.

இணையம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தங்கள் பெயரை தாங்களே கூகுலில் டைப் செய்து தேடிப்பார்க்கும் சுய கூகுலிங் பழக்கம் பரவலாக இருக்கும்.

டிஜிட்டல் யுகத்தில் மற்றவர்கள் கூகுலில் தேடும் போது நம்மை பற்றிய சரியான அறிமுகத்தை தரக்கூடிய இந்த சேவையை பயனாளிகள் தங்களுக்கான அணைய அறிமுக அட்டையாக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தங்களின் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு விவரங்களையும் இந்த கட்டுரையில் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரை பக்கத்தில் பயனாளிகள் தங்களுடைய அழகிய புகைப்படத்தையும் இடம் பெற வைக்கலாம் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையை எழுதுவதும் சுலபமானது என்கிறது டிஜிகாட். விவரங்களை வார்த்தைகளாக தாருங்கள், வரிகளாக மாற்றி கட்டுரையாக்கி விடுகிறோம் என்கிறது இந்த தளம்.

நமக்கென ஒரு விக்கிபீடியா பக்கம் என்றே சொக்க வைத்து விடக் கூடாது என்றாலும் இதில் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. முதலில் இந்த அறிமுக கட்டுரையை படிக்கும் நண்பர்கள், உங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவற்றை பதிவு செய்யலாம். இதற்கு சால்வோ என்று பெயர்.

ஒருவரைப் பற்றி அவரே அறிந்திராத விடயங்களை நெருக்கமாக பழகும் நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். அத்தகைய தகவல்களை நண்பர்கள் இப்படி சால்வோவாக பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் அறிமுக கட்டுரையின் உள்ளடக்கத்தை மேலும் சுவாரஸ்யமான தாக ஆக்கக்கூடும். அதே போல நண்பர்கள் நீங்கள் குறிப்பிடும் ஒரு விடயத்தை தானும் அனுபவித்திருக்கிறோம். அதனை பிளாஷ்பேக்காக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த பிளாஸ்பேக் பகிர்வுகள் உயிரோட்டம் மிக்க உரையாடலாகவும் மாறக்கூடும். அதுமட்டுமல்லாமல் இந்த பகிர்வுகள் உங்கள் கட்டுரையை மேலும் சுவை மிக்கதாக மாற்றி விடும். மேலும் நண்பர்கள் உங்களை நம்பகத்தன்மை, நேர்மை உள்ளிட்ட 5 விடயங்களில் சீர்தூக்கி பார்த்து மதிப்பீடும் வழங்கலாம்.

இந்த மதிப்பீட்டுக்கு பஞ்ச் மீட்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள 5 எனும் வார்த்தையை குறிக்கும் வகையில் இவ்வாறு பெயர் சூட்டி உள்ளனர். நண்பர்கள் இப்படி உங்களை பற்றி தரும் மதிப்பீட்டை பார்த்து நீங்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்களின் மதிப்பீடு நல்ல விதமாக இருக்கும் பட்சத்தில் அதனை அறிமுக கட்டுரை பக்கத்தில் இடம் பெற வைக்கவும் செய்யலாம். இல்லை இந்த மதிப்பீட்டை நாம் மற்றும் பார்த்து விட்டு விட்டு விடலாம்.

No comments:

Post a Comment