Sunday, June 5, 2011

இலவச “லேப்-டாப்” திட்டத்துக்கு ரூ.291 கோடி ஒதுக்கீடு



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளார்.

பதவி ஏற்பு அன்றே இலவச அரிசி, தாலிக்கு தங்கம் உள்பட 7 நலத்திட்டங்களுக்கு உத்தரவிட்டு ஜெயலலிதா கையெழுத்திட்டார். மீதம் உள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தந்த துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து பிளஸ்-1, பிளஸ்-2, மாணவ -மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவ-மாணவிகளுக்கு இலவச “லேப்-டாப்” வழங்கும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

ஜூன் முதல் ஆகஸ்டு வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ -மாணவிகளின் முழுமையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர தரமான “லேப்-டாப்” வழங்குவது, இதற்காக தேவைப்படும் நிதி ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முழுமையான எண்ணிக்கை தெரிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

இது தவிர 10-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை மாணவர்கள் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் திருமண உதவி திட்டத்தில் இனி தாலிக்கு தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-வது வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி ரூ.25 ஆயிரத்துடன் தாலி செய்ய 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தில் உதவி பெற முடியும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 69 ஆயிரத்து 832 பெண்கள் பண உதவி பெற்றனர். தற்போது தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு இதற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment