Monday, April 25, 2011

இந்திய ப்ராட்பாண்ட் பற்றி ஓர் ஆய்வு

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. 

காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு-ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன.
78 கோடி தடவை இவை காணப்படுகின்றன. 

பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர். 

இந்த கணக்கினை வெளியிட்ட காம் ஸ்கோர் நிறுவனம், இந்திய ரசிகர்கள் வீடியோ பார்ப்பது குறைவு தான் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் 80% பேர் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. 

பிராட்பேண்ட் இணைப்பினை அதிகம் வழங்க அரசு எடுக்கும் நடவடிக்கை களினாலும், 3ஜி சேவை வேகமாக வளர்ந்து வருவதனாலும், வீடியோ பார்ப்பது இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர்.

ஆய்வில் எடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில், 2015 ஆம் ஆண்டில், இந்திய ஜனத்தொகையில் 30% பேர் 3ஜி சேவையில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டுக்குள்ளாக, 3ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிக்கும். இவற்றில் 80% 3ஜி இணைப்பு ஜி.எஸ்.எம். வகையாகவும், 20% சி.டி.எம்.ஏ. வகையினதாகவும் இருக்கும். சி.டி.எம்.ஏ. வகை 3ஜி தொடர்புகளில் ரிலையன்ஸ் 39 சதவிகிதத்தினையும், டாட்ட டெலிசர்வீசஸ் 15% கொண்டிருக்கும். 

மொத்த 3ஜி சேவையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 18%, ரிலையன்ஸ் 15% கொண்டிருக்கும். பி.எஸ்.என்.எல். பங்கு 13% ஆக இருக்கும்

No comments:

Post a Comment