Sunday, April 3, 2011

எதிர்கால நவீன சிகிச்சைகள்





இன்று உலக மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது எய்ட்ஸ். அடுத்து இதய நோய்கள். அதிலும் குறிப்பாக மாரடைப்பு. இவை தவிர, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோவிதமான நோய்களில் எய்ட்ஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

இதய நோய்களுக்கான அடிப்படை விஷயம்:
இதயத் திசுக்கள் பல்வேறு பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு இதயம் பாதிக்கப்படுவதறகு மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. அதேபோல், புகை, மது, மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு, நுண்கிருமிகள், கொலஸ்ட்ரால் போன்ற பல காரணங்கறாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு இதய பாதிக்கப்படும் போது, ஆக்ஸிஜனும், போதுமான சத்தும் கிடைக்காமல் இதய செல்கள் நலிவடைந்து பிறகு செயலிழந்துவிடுகின்றன. இதுதான் இதய நோய்களின் அடிப்படை விஷயம். இப்படிப்பட்ட பலவகையான இதய நோய்களுக்கும் எத்தனையோ வகையான சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, மக்களுடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றால் புதுப்புது இதய நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தொடர்ந்து அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆக, என்றென்றும் இதய நோய்கள் துறை 'புதுப்பிக்கப்பட்டு' வருகிறது.அந்த வகையில், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகள் தற்போது பரிசோதனை முறையைக் கடந்து கிட்டத்தட்ட செயல்வடிவம் பெறும் நிலையில் இருக்கின்றன. இவற்றை இதய நோய்களுக்கான எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் என்று சொல்லலாம். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. ஸ்டெம் செல் சிகிச்சை
2. மரபணு சிகிச்சை
முதல் வகையான ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், நலிவடைந்த இதய செல்களை சீராக்க முடியும். அதேசமயம், மரபணு சிகிச்சையின் மூலம் செயல்படாத, நலிவடையாத இதய செல்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்டெம் செல் எனப்து மிகவும் அடிப்படையான மனித செல்லாகும். அதிலிருந்துதான் உடல் உறுப்புக்கான அனைத்து செல்களுமே உருவாகின்றன.ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது உண்டாகும் கருத்தரித்த செல்தான் ஸ்டெம் செல்லாகப் பிரிந்து, உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் உருவாக்குகிறது.இத்தகைய ஸ்டெம் செல்கள் உடலில் பல இடங்களிலும் காணப்படும். இந்த செல்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை நேரடியாக இதயத்தில் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது இதய ரத்தக் குழாய் வழியாக செலுத்துவதன் மூலமாகவோ, நலிவடைந்த பாதிக்கப்பட்ட செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை உற்பத்தி செய்து இதயத்தைச் சீராக்கும்.எலும்பு மஜ்ஜை, தசைப்பகுதி மற்றும் சிசுவின் வளர்ச்சிப் பருவத்தில் இருந்தோ இத்தகைய ஸ்டெம் செல்கள் அதிக அளவில் பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மரபணு சிகிச்சையில், மரபணுக்களை உடலில் செலுத்தும்போது, பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்பட்ட மரபணுவோடு அவை சேர்த்து அவற்றைச் சீராக்குகின்றன.இந்தப் புதிய மரபணுவின் உத்தரவுப்படி, இதயத்தில் பாதிக்கப்படாத, நலிவடையாத இதய செல்கள் தூண்டப்பட்டு அவை வேலை செய்யும் விதமாக மாற்றப்படும்.இப்படி, மரபணுக்களை உடலில் செலுத்துவதற்கு வைரஸ் நுண்கிருமிகள்தான் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், மரபணுக்கள் மிகவும் நுட்பமான உயிர்ப்பொருள் என்பதால், அவற்றைக் கடத்திச் செல்ல வைரஸ் போன்ற மிகவும் நுட்பமான உயிரினகளையே பயன்படுத்தவேண்டி இருக்கிறது.அதேசமயம், இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் நுண்கிருமிகளால் புதிய நோய் ஏற்படாமலும் தடுக்க வேண்டும். அதற்காக, அடினோ வைரஸ், ரீட்ரோ வைரஸ், லென்டீ வைரஸ் போன்ற வைரஸ்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு நவீன சிகிச்சை முறைகளும் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால், இதய நோய்கள் மட்டுமல்ல வேறு பல சிக்கலான நோய்களுக்கும் பெரிய தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக இதய தினம்:
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'உலக இதய தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தினம், உலகம் முழுவதும் சிறப்பு மருத்துவ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இதய நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மருத்துவர்களே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும், அதில் மக்களே அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள்.
இதய நோய்கள் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரசார பேரணிகள், கூட்டங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதில கலந்துகொள்ளும் மக்கள், இதய நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். மேலும், இதய நோய் வராமல் தடுக்கும் முறைகளையும், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதயத்தை வலுவாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்கிறார்கள்.தவிர, இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? அவற்றின் சிறப்புகள் என்னென்ன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து தங்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ற மருத்துவச் சிகிச்சையை அவர்களே தேர்வு செய்யும் 'வசதியும்' அவர்களுக்குக் கிடைக்கிறது.

பல இடங்களில் 'இலவச இதய மருந்துச் சிகிச்சை முகாம்' நடத்தப்படும். அதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு இலவச இதய ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும். பண வசதி இல்லாதவர்கள், இந்த முகாம்களுக்கு வந்து நிவாரணம் பெற முடியும்

No comments:

Post a Comment