Thursday, February 3, 2011

உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன்


எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்ற‌ன. நவீன மொபைல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.



பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். மொபைல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எறியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு மொபைல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே? இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. 
சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது. இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.

இமெயில் அனுப்ப முடியாது.வை பை வசதி எல்லாம் இல்லை, பேஸ்புக் பார்க்க முடியாது.கேமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியாது. இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.

அவ்வளவே. உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்திருக்கிறது.மொபைல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜான்ஸ்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை. 

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து. 

அலங்கார ரிங்டோன் எல்லாம் இல்லாமல் தொழில்நுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த மொபைல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.

அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும். அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம். 

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில் தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும். 

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய, அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான மொபைல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது. நவீன வாழ்வின் சிக்கல்கள் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.



Read more: http://therinjikko.blogspot.com/2010/11/blog-post_19.html#ixzz1CvOMuR4q

No comments:

Post a Comment