Monday, February 28, 2011

டேப்ளட் பிசி-க்குத் தயாராவோம்

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது.இந்த 2011 ஆம் ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூட்டரில் உள்ள சிறப்பம்சங்களைக் கூறி விளம்பரப்படுத்தத் தொடங்கி விட்டனர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விளம்பரங்களால் ஒரு குழப்பமான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை எல்லாம் பார்த்து, கவனித்து, ஆய்வு செய்து, பின்னர் நம் பட்ஜெட்டிற்குள்ளாக, ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.





1. ப்ராசசர் (Processor): வழக்கம்போல, எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் ப்ராசசர் மற்றும் அதன் இயங்கும் வேகமே மிக முக்கியம். இதனைச் சுற்றியே நம் கம்ப்யூட்டர் இயக்கம் இருக்கப் போவதால், இதன் திறனை முதல் அம்சமாக நாம் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள பட்டயக் கம்ப்யூட்டர்கள் அனைத்துமே குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் கொண்டுள்ளன. எச்.பி. நிறுவனம், தன் டச் பேட் கம்ப்யூட்டரில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் நிறுவன ப்ராசசரைக் கொண்டுள்ளது. ப்ராசசரைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களாகப் பரவலாக, ஆப்பிள், என்-விடியா, ஏ.ஆர்.எம்., இன்டெல் மற்றும் குவால்காம் ஆகியவை முன்னணியில் உள்ளன. என் -விடியாவின் டெக்ரா 2 ப்ராசசரை, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. 


2. டிஸ்பிளே (Display): கைக்கு அடக்கமாக, சிறிய அளவில் ஒரு பட்டயக் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என நாம் விரும்பினாலும், நம் கம்ப்யூட்டர் பணிகளுக்கு ஓரளவிற்கு திரையின் அளவினை எதிர்பார்க்கிறோம். 7, 8.9, 9.7, 10.1, 12.1 அங்குல அளவுகளில் டிஸ்பிளே திரைகளைக் கொண்டு, இந்த நிறுவனங்கள் இக்கம்ப்யூட்டர்களை வடிவமைத்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில் திரை 12.1 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதில் இவற்றின் ரெசல்யூசன் அளவையும் நாம் ஒப்பிடலாம். 800x480 என்பதில் தொடங்கி 1280x800 வரை இக்கம்ப்யூட்டர் திரைகளின் ரெசல்யூசன் உள்ளது. 
3. ராம் நினைவகம் (RAM): ஆப்பிள் நிறுவனம் தன் கம்ப்யூட்டரில் 256 எம்பி நினைவகத்தினைக் கொண்டிருந்தாலும், இப்போது இந்த சந்தையில் வரும் பிற நிறுவனங்களின் கம்ப்யூட்டரில் 1ஜிபி ராம் நினைவகம் தொடக்க நிலையாகவே அமைக்கப்படுகிறது. EP121 கம்ப்யூட்டரில் 2 ஜிபி நினைவகம் உள்ளது. இனி அடுத்து வரும் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். 
4. கேமரா (Camera): இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் இவை அமைக்கப்படுகின்றன. வீடியோ சேட்டிங் என அழைக்கப்படும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியாகவும், போட்டோ எடுத்து உடனடியாக அனுப்பவும் இவை உதவுகின்றன. ஆப்பிள் ஐ-பேட் கம்ப்யூட்டரில் எதுவும் இல்லை. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுமான வரை இரண்டு கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமரா 1.3 எம்.பி முதல் 3.2 எம்பி வரை திறன் கொண்டதாகவும், பின்புறமுள்ள கேமரா 3.2 எம்பி முதல் 5 எம்பி வரை திறன் கொண்டதாகவும் அமைந்துள்ளன. எச்.பி. டச்பேட் மற்றும் இ.பி. 121 கம்ப்யூட்டர்களில் பின்புறக் கேமரா தரப்படவில்லை. 
5. ஹார்ட் டிஸ்க் (Storage): தகவல்களைத் தேக்கி வைத்து இயக்க கம்ப்யூட்டரில் நாம் அதிக அளவில் கொள்ளளவு திறன் கொண்ட டிஸ்க்குகளை எதிர்பார்க்கிறோம். ஆப்பிளின் ஐ-பேட் இந்த வகையில் 16, 32 மற்றும் 64 ஜிபி திறன் கொண்ட கம்ப்யூட்டர்களை வெளியிட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் 16 மற்றும் 32 ஜிபி கொள்ளளவுடன் இவற்றை வடிவமைத்துள்ளன. 
6. யு.எஸ்.பி (U.S.B): துணை சாதனங்களை இணைக்க யு.எஸ்.பி. ட்ரைவ்களை மட்டுமே நாம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விரும்புகிறோம். ஸ்மார்ட் போன்களிலும் இவை கட்டாய மாக அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் ஆப்பிள் தன் ஐ-பேட் சாதனத்தில் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் கூடத் தரவில்லை. அதே போல டெல் நிறுவனத்தின் ஸ்ட்ரீக் கம்ப்யூட்டரிலும், யு.எஸ்.பி. ட்ரைவ் தரப்படவில்லை. மற்ற நிறுவனங்களின் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை தரப்பட்டுள்ளன. 
7. வயர்லெஸ் இணைப்பு (Wireless Connectivity): மற்றவர்களுடன் நெட்வொர்க் கில் இணைந்து தொடர்பு கொள்வது, இத்தகைய கம்ப்யூட்டர்களில் முக்கிய செயல்பாடாக உள்ளது. எனவே இந்த கம்ப்யூட்டர்களில் தரப்படும் வயர்லெஸ் இணைப்பு வகை மற்றும் திறன், இவற்றின் மதிப்பை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், வைபி, புளுடூத், 3ஜி/4ஜி ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதா என்று கவனித்து தேர்ந்தெடுக்கலாம். 4 ஜி வசதியை அவ்வளவாக நாம் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக, கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் இந்த மூன்று வசதிகளும் தரப்படுகின்றன. 
8.ஜி.பி.எஸ். (GPS): வயர்லெஸ் இணைப்பு கிடைப்பதனால், நாம் எந்த இடத்திலும் இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். எனவே, இடத்தைச் சுட்டிக் காட்டும் ஜி.பி.எஸ். வசதி, ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் சிறந்த அம்சமாகக் கருதப்படுகிறது. பொதுவாக அனைத்து பட்டயக் கம்ப்யூட்டர்களிலும் இது கிடைக்கிறது. இருப்பினும் ஓரிரு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இந்த வசதி தரப்படவில்லை. எனவே ஒன்றை வாங்குகையில், இந்த வசதி உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். 
9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OSOperating System): அனைத்திலும் முக்கிய ஒரு விஷயம் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். இதன் இயக்க அடிப்படையில் தான், நமக்கு வசதிகள் திறனுடன் கிடைக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வழக்கம்போல, தன்னுடைய ஐ.ஓ.எஸ். 4.2.1 ஐ தன் ஐ-பேடில் தந்துள்ளது. மற்ற பட்டயக் கம்ப்யூட்டர்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பல நிறுவனங்கள் தருகின்றன. பல பதிப்புகளில் (Honeycomb, Froyo, Gingerbread) இவை கிடைக்கின்றன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 எச்.பி. என்னும் ஓ.எஸ். தரப்படுகிறது. எச்.பி. நிறுவனக் கம்ப்யூட்டரில் வெப் ஓ.எஸ். வழங்கப்படுகிறது. 
ஆப்பிள் நிறுவனத்தின ஐ- பேட் தவிர, மற்ற அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பிளாஷ் இயக்கம் சப்போர்ட் செய்யப் படுகிறது. இந்த வகை கம்ப்யூட்டர்களில் செயல்படுத்த, சின்னச் சின்ன அப்ளிகேஷன்கள் நிறைய தேவைப்படும். இவற்றைத் தர அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனங்கள், இணையத்தில் தங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர்களை இயக்குகின்றன. iTunes, Android Market, App World, webOS AppStore ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும். 
10. எடை: இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் எந்த இடத்திற்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த என வடிவமைக்கப்படுவதால், இதன் எடையில், அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி உள்ளன. சராசரியாக ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் எடை 700 கிராம் என்ற அளவில் அமைக்கப்படுகிறது. பிளாக் பெரி மற்றும் டெல் நிறுவனக் கம்ப்யூட்டர்கள் 400 முதல் 450 கிராம் எடையிலும் இவற்றை அமைத்துள்ளன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரின் எடை 1,160 கிராம் உள்ளது. 
இவை அனைத்தும், ஒன்றிரண்டினைத் தவிர, இந்தியாவில் அதிகார பூர்வமாக இன்னும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பல நிறுவனங்களின், குறிப்பாக பல சீன நாட்டுத் தயாரிப்புகள், பட்டயக் கம்ப்யூட்டர்கள் கிரே மார்க்கட் மற்றும் இணைய வெளி விற்பனை மையங்கள் வழி கிடைக்கின்றன. மெதுவாக உயர்ந்து வரும் இந்த பட்டயக் கம்ப்யூட்டர் பயன்பாடு, நிச்சயம் விரைவில் சூடு பிடிக்கும். அப்போது மேலே கூறப்பட்டுள்ள முக்கிய அடிப்படை விஷயங்களின் திறன் மற்றும் வேகம் உயரும். இவற்றை மனதில் கொண்டு நாம் நமக்கென ஒன்றை வாங்கலாம். 

No comments:

Post a Comment