ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே கூற வேண்டும். | |
. | |
இருப்பினும் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்லாக பதிவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளியிடப்பட்ட முறைதான். பாலிவுட் படங்கள் என்றதுமே அகில உலக ரிலீஸ் என்று குறிப்பிடப்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த படமோ அதனையும் தாண்டி இன்டெர்நெட், டிவிடி என அனைத்து மட்டங்களிலும் வெளியாகி இருக்கிறது. இதுவே அந்த படத்தை ஒரு முன்னோடி முயற்சியாக மாற்றி இருக்கிறது என்று கூறலாம். அப்பார்ட்மெண்ட் திரைப்படம் சிறிய நகரம் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. தனுஷ்ஸ்ரீ தத்தா மற்றும் நீத்துசந்திரா மற்றும் அனுபம் கெர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை துணிச்சல் மற்றும் தொலைநோக்குமிக்கவர்கள் என்றே சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில் டிவிடியாகவும் படத்தை வெளியிட்டதோடு இன்டெர்நெட் மூலமும் டவுன்லோடு செய்துபார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருந்தனர். இயக்குனர் முந்த்ரா வருங்காலத்தில் எந்தவொரு படமும் திரையரங்கு மட்டுமல்லாமல் மற்ற வழிகளிலும் வெளியாக வேண்டும் என்னும் கருத்தை கொண்டவர். அந்த நம்பிக்கைக்கு தானே செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அப்பார்ட்மெண்ட் திரைப்படத்தை அனைத்து வடிவங்களிலும் வெளியிட்டிருக்கிறார். அவரை பொறுத்தவரை திருட்டு விசிடி போன்ற பிரச்சனைகளை சமாளிக்க டிவிடி மற்றும் இணையதளங்களின் வாயிலாக படங்களை வெளியிடுவது மட்டுமே வழி. திரையரங்குகளுக்கு செல்ல முடியாதவர்கள் மாற்று வழிகளில் படங்களை பார்க்க முயல்கின்றனர். இதுவே திருட்டு விசிடி மற்றும் டிவிடிகள் வெளியாவதற்கான மூலகாரணம் என்று அவர் கூறுகிறார். திரைப்படத் துறையை சேர்ந்த பலரும் அறிந்த விஷயம்தான் இது. இருந்தாலும் இதற்கான மாற்று மருந்து மாற்று வழிகளில் படங்களை வெளியிடுவது மட்டுமே என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.அறிந்திருந்தாலும் செயல்படுத்தும் துணிவை பெற்றிருக்கவில்லை. முந்த்ரா இந்த துணிச்சலை பெற்றிருப்பதன் அடையாளமே அப்பார்ட்மெண்ட் திரைப்படம் வெளியான அன்றே டிவிடியாகவும் விற்பனைக்கு வந்திருக்கிறது. மேலும் இணையதளம் மூலமும் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பொருத்தமாக ராஜ்ஸ்ரீ இணையதளத்தின் மூலமாக படம் வெளியிடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த இணையதளம் இன்டெர்நெட் மூலம் திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கட்டணம் செலுத்தி படங்களை பார்க்க வழி செய்யும் இந்த தளம் ரசிகர்கள், திரைப்படத்துறையினர் ஆகிய இரு தரப்பினருக்குமே ஏற்றதாக இருக்கிறது. ராஜ்ஸ்ரீ தளத்தின் மூலம் கட்டணம் செலுத்தி அப்பார்ட்மெண்ட் திரைப்படத்தை ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்க்க முடியும். திரைப்படத்துறையின் எதிர்காலம் இந்த திசையிலேயே அமைந்திருக்கிறது என்று தீர்மானமாக நம்பலாம். ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் ஸ்டுடியோ18 தயாரித்த ஸ்டிரைக்கர் திரைப்படம் யுடியூப் இணையதளத்தின் வாயிலாக வெளியானது நினைவிருக்கலாம். இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான அன்றே மற்ற நாடுகளில் யுடியூப் மூலம் வெளியிடப்பட்டது. யுடியூப் கட்டண சேவையை பயன்படுத்தி இந்த படம் வெளிநாடுகளில் வசிக்கும் பாலிவுட் ரசிகர்கள் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. |
|
No comments:
Post a Comment